யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு 2013ம் ஆண்டிலேயே கூடுதலாககாணப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ள நிலையில் யாழிலும் முன்னைய காலங்களிலும் பார்க்க இச்சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது அண்மையில் யாழிலும் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் 350 கிலோகிராம் ஹொராயின் போதைப் பொருள் இலங்கைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹாண தெரிவித்தார். மேலும் மன்னார் ஊடாக கடல் மார்க்கமாக வருகிறதா அல்லது விமான நிலையம் ஊடாக வருகின்றதா, அல்லது கப்பல் கெண்டயினர்கள் மூலமாக வருகிறதா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் அந்த வலையமைப்பை முறியடிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பெற்றோர்கள், சமூகப் பெரியார்கள் கூடிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இப் போதைப்பொருள் பாவனையால் பாதிக்ப்பட்டோர் இனங்காணப்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்கள் கேட்கப்படுகின்றனர்.
இந்நிலையை அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாவிட்டால் சமூக விரோதச் செயல்கள், குற்றச் செயல்கள், அதிகரிப்பதுடன் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் என்பவற்றில் பாரிய தாக்கங்கள் ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.