மனிதவாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்கவேண்டுமாயின் நோயற்ற வாழ்க்கை அவசியமாகும். வாழ்வதற்குப் பல்வேறு காரணிகள் முக்கியமானவையாகக் காணப்படினும், ஆரோக்கியமான நிறைவான உணவும், சுத்தமான நீரும் நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ இன்றியமையாதவை எனலாம். எவ்வளவு தான் உணவுப்பழக்க வழக்கங்களில் அக்கறை கொண்டிருந்தாலும், நியம முறைப்படி நிறை உணவுக் கூறுகளைத் தேர்ந்தெடுத்தாலும் கிருமிநாசினித் தாக்கமற்ற காய்கறிகளைத் தற்காலத்தில் பெறமுடிவதில்லை. அதிகரித்துவரும் பீடைநாசினிப் பாவனையால் தாக்கம் விளைவிக்காத காய்கறி, இலைக்கறி வகைகளைப் பெறல் அரிதே எனலாம்.
அதிகரித்து வரும் பீடைத் தாக்கங்களைக் கட்டுப்படுத்த உற்பத்தியாளர்கள் பீடைநாசினிகளைப் பாவிக்கவேண்டிய தேவை உள்ளவர்களாக இருந்தாலும், நுகர்வோர் நலனையும் கருத்திற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பீடைநாசினிகள் செறிந்த மரக்கறி வகைகளை நீண்ட காலத்துக்கு உண்ணும்போது உடலில் ஆபத்தான நோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரித்து செல்கிறது. உடலின் பல்வேறு உறுப்புக்களில் ஏற்படும் புற்று நோய்க்கு உணவினூடாக வந்த பீடைநாசினிகளும் ஒரு காரணமெனக் கண்டறிப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு கீழ் வரும் விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
– கிருமிநாசினி விசிறிய பின்னர் இயன்றளவு அதிகரித்த கால இடைவெளியின் பின்னர் சந்தைப்படுத்தல், கிருமிநாசினி விசிறிமறுதினத்தில் அதிகமான மரக்கறிகள் சந்தைப்படுத்தப்படுகின்றன ஆனால், பீடைநாசினி விசிறி 14 நாள்களிக் பின்னரே பீடைநாசினி நஞ்சு பிரிந்தழிகின்றது. என்பதனை யாவரும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
– அதிகரித்த அளவில் தேவையின்றிப் பீடைநாசினிகள் தெளிப்பதைத் தவிர்த்தல், பீடைநாசினி கொள்கலனில் உள்ள அளவைவிட அதிகரித்த அளவில் பாவித்தல் வினைத்திறன் அதிகம் என்ற போலியான நம்பிக்கை உள்ளது. எனவே விவசாய வளநிலையங்களின் ஆலோசனைப் பெற்ற பின்னர் பீடை நாசினிகளைப் பாவித்தல் நன்று.
– இரு வேறுபட்ட வகைக் கிருமிநாசினிகளை ஒன்றாகக் கலந்து விசுறுவதைத் தவிர்த்தல். இவ்வாறு கலக்கும் போது இலகுவில் பிரித்தழியாத கலவையாக மாறி அதிக தீங்கு விளைவிக்கின்றது.
– பூச்சி, பீடைத்தாக்கம் அதிகம் இல்லாத மரக்கறிகளுக்கும் பீடைநாசினி தெளிப்பதை தவிர்த்தல், உதாரணமாக வல்லாரை, கரட்,பீற்றூட் போன்றன
நுகர்வோர் காய்கறி வகைகளைப் பயன்படுத்தும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
– எந்தவொரு மரக்கறிகளையோ, இலவகைகளையோ சுத்தமான நீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாகச் சமைக்காது உள்ளெடுக்கும் மரக்கறிகளைக் கழுவுவதில் அதீத கவனமெடுக்க வேண்டும்.
– மரக்கறிகளைக் கூடிய அளவில் திறந்து அவிப்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு நச்சுத்தன்மை குறைவடைகின்றது.
– மரக்கறிகள் வாங்கியவுடன் சமைப்பதைத் தவிர்த்தல். ஏனெனில் முதல் நாள் பீடைநாசினி விசிறப்பட்டிருப்பின் மறு நாள் சமைப்பதை விட சில நாள் கழித்து சமைக்கும் போது அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
– பீடை நாசினிகள் பாவனை அற்ற மரக்கறிவகைகளைப் பாவித்தல் உதாரணமாக கடலைவகை, கௌபி, சிறகவரை, பூசணிக்காய், நீற்றுக்காய்,வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, வற்றாளங்கிழங்கு,கருணைக்கிழங்கு, பனங்கிழங்கு,கரட், பீட்றூட் போன்றன.
– நஞ்சு கொண்ட மரக்கறிகளை உண்ணுவதற்கு மாற்றீடாக ஒவ்வொருவரும் தங்களுக்கென வீட்டுத்தோட்டம் அமைத்தல்.
உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரும் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழி செய்யலாம்.
வைத்தியர். இ. பரமேஸ்வரன்