பொன்கொழிக்கும் பூமியாக பரந்த விவசாய நிலங்களையும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சுன்னாகம் மண்ணின் நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரம் லீற்றர் கழிவு எண்ணெயை எவ்வாறு அகற்றப் போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு அகற்றப்போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றோம். இதனால் மனிதனில் ஏற்படக்கூடிய பெரிய சுகாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும்? இந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களிலும் தாவரங்களிலும் இந்த எண்ணைய் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது? இந்தப் பகுதியில் வளரும் தாவர உற்ப்பத்திப் பொருள்களை மனிதன் உட்கொள்வது பாதுகாப்பானதா? இந்த மாசு பட்ட நீரை அருந்தும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களிலே இந்த எண்ணெய் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்? இவற்றின் இறைச்சிகளையும் முட்டைகளையும் மனிதன் உணவாக உள்கொள்வது பாதுகாப்பானதா?
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை காண்பதற்கு பல்துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் பெறப்படவேண்டிய கட்டாய நிலை தோன்றி இருக்கிறது.
2012ஆம் ஆண்டளவிலே சுன்னாகத்து நிலத்தடி நீரிலே எண்ணெய் கலந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து புதிதாக எண்ணெய் மண்ணில் சேருவதைத் தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படிருக்கின்றன. இது சம்பந்தமான ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பொதுமக்களுக்கு இது சம்பந்தமான தெளிவான அறிவூட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டிய அவசர அவசிய தேவை எழுந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கான அறிவூட்டல், ஆலோசனை நிகழ்வுகள் விரிவுபடுத்தப்படவேண்டும். இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய இடர்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக அமையும்.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் 50 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகின்றது. இதில் பணியாற்றுபவர்களின் கடின உழைப்பு பாராட்டுதற்குரியது. இந்த நிலையத்தின் தொழிற்பாட்டின் போது வளிமண்டலத்துக்கு விடப்படும் எண்ணெயத் துகள்கள், காபன்கள் மற்றும் கான்சேர்வைகளின் தாக்கம் மக்களுக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு பொறிமுறைகள் மூலம் அந்தப்பிரதேசத்து வளிமண்டலம் அசுத்தமடைவது முற்றாகத் தடுக்கபட்டிருக்கிறதா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்வது நல்லது. இது அங்கு தொழில்புரிபவர்களினதும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வாழ்பவர்களினதும் சுகாதார நிலையைப் பாதுகாத்துக்கொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். வளிமண்டலம் இவ்வாறு அசுத்தமடையுமாயின் அது நுரையீரல், சுவாசத் தொகுதி மற்றும் உடல் சம்பந்தமான பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும்.
இந்த பிரதேசத்து மக்கள் மழை காலங்களில் நிலத்தடி நீரிலுள்ள எண்ணெயின் செறிவு குறைவாகவும், கோடை காலங்களில் இதன் செறிவு கூடுதலாகவும் இருப்பதை அவதானித்திருக்கிறார்கள். இந்த நிலத்தடி எண்யெ் கலப்பு பிரச்சினைகள் காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட மன உளைச்சல்களுக்கும் ஆட்பட்டு இருக்கிறார்கள் இந்தப் பிரச்சினையில் தாம் தனித்துவிடப்பட்டு விட்டோமோ? எவரது உதவியை நாடுவது இனி என்ன செய்வது? எமக்கு ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும்? போன்ற பல விடைதெரியாத வினாக்களினால் மனக்குழப்பத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரதும் கூட்டு முயற்சி அவசியமாகின்றது.
நிலத்தடி நீரில் கலந்திருக்கும் எண்ணெயின் துல்லியமான இரசாயனக் கட்டமைப்புகளும் அவற்றின் வீதாசாரமும் அறியப்பட வேண்டும் அத்துடன் அந்த எண்ணெயில் கரைந்திருக்கும் இரசாயனப் பொருள்களும் மூலகங்களும் எவை? அவற்றின் செறிவுகள் என்ன? என்பது சம்பந்தமாகவும் ஆராய்ச்சிகள் செய்து அறிப்படவேண்டும். இவை அறியப்படின் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் பொருத்தமான தடுப்பு முறைகளையும் வினைத்திறனுடன் செய்வதற்கு இது உதவியாக அமையும்.
இது பல மக்களைப் பாதிக்கப்கூடிய பிரச்சினையாக இருப்பதாலும், பல்துறை வல்லுநர்களின் பங்களிப்புத் தேவையாக இருப்பதாலும், பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பெருந்தொகையான பணம் தேவைப்படுவதாலும் இதனை ஒரு தேசியப் பிரச்சினையாகப் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது பயனுடையதாக அமையும்.
இன்னும் வரும்…..
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை.