ஏய் மனிதனே….
என்னை எப்போதும் உன் உதடுகளால்
அரவணைக்கும் நண்பனே….
நீ ஒரு உன்னதமான தியாகி – ஏன் தெரியுமா?
நீ உன்னைப் பற்றியோ,
உன் உயிரைப்பற்றியோ கவலைப்படாதவன்
என்னை உருவாக்கும் முதலாளிக்கும் லாபம் கிடைப்பதற்காக
உன் உயிரையே துச்சமாக மதித்து வேள்வி நடத்துகிறாய்
ஆமாம், உன் வாயிலேயே வேள்வி நடத்துகிறாய்
எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டைவைப்பார்கள்
ஆனால் உனக்கான கொள்ளியை நீயே வாயில் வைத்திருக்கிறாய்,
உயிருடன் இருக்கும்போதே….
கரி படிந்து இருக்கும் புகைக்கூடு உன் நுரையீரல் இருப்பதை
எப்பொழுதாவது நீ பார்த்திருக்கிறாயா?
“என்னுடைய கலங்கள் எல்லாம் புற்றுநோய்க் கலங்களாக மாறுகின்றனவே“
என்று அது புலம்புவதை நீ கேட்டிருக்கிறாயா?
உன் இரத்தக் குழாய்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு அடைபட்டுப் போகிறதே
ஏன் தெரியுமா? உன் அன்புக்குரிய புகையினால் தான்
அதனால் உன் உடல் உறுப்புக்கள் இரத்த ஒட்டம் கிடைக்காமல்
கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போவதை அறிவாயா நீ?
இளைஞனே, உன் மூளையின் ஆற்றல் குறைந்து போவதை உணர்வாயா?
உன் உடல் உறுதி தளர்ந்து உன் வாழ்வே அழிந்து போவதை உணர மாட்டயா நீ?
வேண்டாம் நண்பா, உன் நன்மைக்காக நான் மன்றாடுகின்றேன்
என்னைத் தூக்கித் தூர எறிந்து விடு….
பிரகாசமான நோயற்ற வாழ்வு உனக்காகக் காத்திருக்கும்.
மருத்துவர் . R.ரமாவித்தியா
யாழ். போதனா வைத்தியசாலை.