அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம் என்பது ஏறக்குறைய முற்றிய நிலையில் இருக்கும். எனவே அதை கட்டுப்படுத்துவதோ குணப்படுத்துவதோ இயலாத காரியம்.
எனவே இந்த அல்சைமர்ஸ் ஒருவரை தாக்குமா என்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடிந்தால் அதன் அடுத்தகட்டமாக அல்சைமர்ஸ் நோய்க்கான மருந்தை கண்டறிவது சாத்தியப்படும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்து வந்திருக்கிறது.
அல்சைமர்ஸ் நோய் ஒருவருக்கு தாக்கத்துவங்கியதன் ஆரம்ப அறிகுறி என்பது நினைவு இழத்தல். ஆனால் எல்லா நினைவு இழப்புக்களும் அல்சைமர்ஸில் போய் முடிவதில்லை. எனவே, நினைவிழப்புக்கு உள்ளாகும் ஒருவருக்கு அது அல்சைமர்ஸ் நோயாக முற்றுமா என்பதை கண்டறிவதற்கு அவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதச்சத்துக்களை தொடர்ந்து கண்காணித்தால் அதை கண்டறிய முடியும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். சுமார் ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட இந்த பரிசோதனைகளில், 87 சதவீதமானவர்களுக்கு அல்சைமர்ஸ் வருமா வராதா என்று துல்லியமாக கணிக்கமுடியும் என்று இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதே சமயம் இந்த கண்டுபிடிப்பு என்பது நம்பிக்கையளிக்கும் நல்ல துவக்கம் மட்டுமே என்று எச்சரிக்கும் மருத்துவ விஞ்ஞானிகள், இதன் முழுபலாபலன்களும் பயனளிப்பதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் நாலறைகோடி பேர் இந்த அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.