நோயுற்றவர்கள் எதிர்நோக்கும் அவமதிப்புகள், கவனிப்பு குறைபாடுகள், வசதிக்குறைவுகள், சமூகமட்டத்தில் பராமரிப்பு குறைபாடுகள், தனித்துவத்தையும் இரகசியத்தன்மையையும் பேணுவதில் எதிர் நோக்கப்படும் சவால்கள், பொருளாதாரச்சுமை, தரமான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் தனிப்பட்ட தகவல்கள் ஊடகங்களில் அம்பலப்படுத்தல் போன்ற பல விடயங்களுக்கு எதிரான பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள் மேலும் உத்வேசம் பெறவேண்டிய தேவை இருக்கின்றது.
சில சமயங்களில் சட்டவரையறைக்கு உட்பட்டு நோயாளர்களின் உரிமைகளை மீறவேண்டிய இக்கட்டான நிலைகளும் மருத்துவக் குழுவிற்கு ஏற்படுகின்றது. உதாரணமாக நோயுற்ற ஒருவரின் மனநிலை சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்று மருத்துவக் குழு கருதுமிடத்து அவரின் விருப்பத்திற்கு மாறாகவும் சில வைத்திய முறைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
சிலவகையான தொற்றுநோய்கள் ஒருவருக்க ஏற்பட்டுவிட்டால் அந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதற்க்காக நோயுற்றவரின் அனுமதி பெறப்படாமலேயே சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளுக்கு இந்த தகவளை வழங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
பொதுச்சேவையில் இருக்கும் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் நோயினால் மக்களுக்க பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவக்குழு கருதினால் அவ்வாறான தகவல்களையும் அவரின் விருப்பத்திற்கு மாறாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். உதாரணமாக பஸ்சாரதி ஒருவருக்கு கட்டுப்பாடில்லாத வலிப்பு நோய் இருக்குமாக இருந்தால் அவர் அந்தத் தொழிலுக்கு பொருத்தமான நபர் அல்ல என்று தீர்மானித்து அவரின் நோய் நிலை சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை மருத்துவக்குழுவிற்கு இருக்கின்றது.
வைத்தியசாலைகளையும் பொது இடங்களையும் நோயுற்றவர் அசுத்தம் செய்யாமல் தடுப்பதற்காக அவர்கள்மீது சில கட்டுப்பாடுகளை சுகாதார நிர்வாகப் பிரிவினர் ஏற்படுத்துவது நோயுற்றவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தலாம். வைத்தியசாலை மற்றும் சுகாதார சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தும் பொழுது அதனால் நோயுற்றவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஏற்படும் வசதீயீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
நோயுற்றவர்களின் கவனிப்புமுறை உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது. பல மனங்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. மனச்சாட்சி சம்பந்தப்பட்டது. உயிருக்கும் உடலுக்கும் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடையேயான போராட்டமாகவே மருத்துச்சிகிச்சைமுறை அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு நோயுற்றவரும் குணப்பட்டுச் செல்லும் பொழுது அவரும் அவரது சுற்றமும் மட்டுமல்ல மருத்துவக் குழுவும் அவர்களுடன் சேர்ந்து மட்டற்ற மகிழ்ச்சி அடையும். ஒரு நோயாளிக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டால் அல்லது நோயுற்றவர் இறந்துவிட்டால் அவரது சுற்றத்துடன் சேர்ந்து மருத்துவக்குழுவின் உள்மனமும் துயரம்கொள்ளும். இவ்வாறான வேதனையான சம்பவங்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்தவண்ணம் இருக்கும். ஆனால் இதற்காக மருத்துவக்குழு தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டுடிருக்க சூழ்நிலை இடம் தரமாட்டாது. காரணம் இன்னும்பல நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டியதேவை இருந்துகொண்டிருக்கும்.
எத்தனையோ மரணங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் பார்த்து அனுபவித்து காரணத்தினால் நோயாளர்கள் தமது அறிவுரைகளைக் கடைப்பிடிக்காதபொழுது அவர்களுக்கும் அதேகதி நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு மருத்துவக்குழுவிற்கு இருக்கும். ஆனால் அதற்காக நோயுற்றவரை கண்டிப்பது நியாயம் ஆகாது. மனமும் உடலும் களைப்புற்றதால் சிலசமயம் கட்டுப்பாட்டை மீறி நோயுற்றவர்களை கண்டிக்க நேர்ந்தால் அதற்காக மருத்துவக்குழு மனம்வருந்தும்.
இவ்வாறான மனஉணர்வுகளை எல்லாம் எந்தச் சட்டக்கோவைக்குள் உள்வாங்குவது, யாரை நொந்துகொள்வது?, மருத்துவத்துறையில் ம்டுமல்ல எந்தத்துறையிலும் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டக்கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக புரிந்துணர்வும் மனிதாபிமான உணர்வுகளும் கூட்டு முயற்சியுமே முக்கியமாக அமைகிறது.
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை