உலக சனத்தொகையில் சராசரியாக ஏழு தம்பதியரில் ஒருவருக்கு மக்பேறு தாமதடைதல் என்னும் நிலைமை காணப்படுகின்றது. மகப்பேறு தாமதடைதல் என்பது ஒழுங்கான, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் தம்பதியரில் ஒரு வருடமாகியும் கருத்தரித்து மகப்பேறடைய முடியாத ஒரு நிலைமையாகும். ஒருதடவை கூட கருத்தரிக்கவில்லையெனின் அடிப்படை மகப்பேற்றின்மை எனவும், முன்னர் கருத்தரித்திருப்பின் இரண்டாந்தர மகப்பேறின்மை எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மகப்பேறுதாமதமடைதலுக்கு ஆண் அல்லது பெண் அல்லது இருவருமே காரணமாக இருக்கலாம்.
சாதாரண கருத்தரிப்புக்கு அவசியமானவை
I.ஆரோக்கியமான விந்து பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியை அடைதல்
II.பெண்ணில் சாதாரண சூலிடல் நிகழல்
III.கருப்பைக் கழுத்தின் சீதச் சுரப்பு வாங்குந்தன்மையுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் இருத்தல்
IV.விந்து கருப்பையின் உள்ளும் பின்னர், கருப்பைக்குழாயையும் ( Fallopian tube) சென்றடைதல்
V.சூலிடலைத் தொடர்ந்து சூல் கருப்பைக்குழாயை வந்தடைதல்
VI.விந்து சூலைத் துளைத்து கருக்கட்டலைப் பூரணப்படுத்தல்
VII.கருக்கட்டப்பட்ட சூல் மீளவும் கருப்பையை அடைதல்
VIII.கருப்பை அகவணி கருக்கட்டப்பட்ட சூலை ஏற்குந்தகவுடையதாக இருத்தல்
சாதரண பெண் ஒருவரில் சாதாரண மாதவிடாய்ச் சக்கரம் 28 நாட்கள் உடையதாக இருக்கும் போது 14 ம் நாளில் சூலிடல் நிகழும். சூலின் சராசரி வாழ்தகவு நேரம் 24 மணித்தியாலங்களாகவும் சுக்கிலப்பாய வெளியேற்றத்தின் பின் பெண் இனப்பெருக்கத்தொகுதியில் விந்து வாழக்கூடிய காலம் 72 மணித்தியாலங்களாகவும் காணப்படும். பொதுவாக 90 வீதமான தம்பதியர் தமது பாதுகாப்பற்ற ஓழுங்கான உடலுறவின் மூன்று வருட காலப்பகுதிக்குள் மகப்பேறடையும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்.
சாதாரண கருக்கட்டலைப் பாதிக்கவல்ல சில பொதுவான காரணிகள்.
I.வயது – 35 வயதின் பின் சூலின் தரமும், எண்ணிக்கையும் குறைவடைவதால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு பெண்ணில் கணிசமானளவு குறைவடைகின்றது.
II.புகைப்பிடித்தல் – ஆண்களின் சுக்கிலப்பாயத்தின் தரத்தையும், பெண்களில் கருத்தரிக்கும் வாய்ப்பையும் குறைக்கின்றது.
III.உடலுறவின் எண்ணிக்கை – மன அழுத்தம், மனக்கவலை என்பன உடலுறவு மீதான ஆர்வமின்மையையும், விந்துகளின் எண்ணிக்கையையும் பாதிக்கும். வாரத்தில் 2- 3 தடவைகள் உடலுறவு கொள்ளல் சிபாரிசு செய்யப்படுகின்றது.
IV.மதுபானம் – கருவையும், விந்தின் தரத்தையும் அதிக மதுபாவனை வெகுவாகப் பாதிக்கும்.
V.உடல்நிறை – உடற்திணிவுச் சுட்டி 19 – 29 இற்குள் பேணப்பட வேண்டும்.
VI.மருந்துகள் – வலி நிவாரணிகள் (NSAIDS) சூலிடலைப் பாதிக்கும். Cimetidine, Sulphasalasine, Androgens – விந்தின் தரத்தைப் பாதிக்கும். புற்றுநோய் மருந்துகள் – விந்து, சூல் உடற்பத்தியைப் பாதிக்கும்.
VII.தொழில் ரீதியான பாதிப்புக்கள் – இரசாயனப் பொருட்கள், கதிர்வீச்சு என்பவற்றுடன் தொடர்பான தொழில் புாிவோரில் மகப்பேறுதாமதமடைய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
கருவில் ஏற்படக்கூடிய நரம்புத்தொகுதிப் பாதிப்பைத் தவிர்க்க கருத்தரிப்பின் முன்னரான (Peri conceptional Folic Acid) போலிக்கமில மாத்திரைப் பாவனை அவசியம். அத்துடன் ருபெல்லா அல்லது ஜேர்மன் சின்னமுத்து (Rubella) இற்கெதிரான தடுப்பு மருந்து ஏற்றப்பட்டிருத்தலும் அவசியமாகும்.
மகப்பேற்றின்மைக்கான காரணங்கள் |
|||
இல |
ஆண் (1/3) |
பெண் (1/3) |
இருவரும்(1/3) |
1 |
விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் | பரிவகக்கீழ் –கபச்சுரப்பி – சூலக அச்சில் ஏற்படும் பிரச்சினைகள் | அறியப்படாதன |
2 |
விந்து கடத்தப்படலில் ஏற்படும் பிரச்சினைகள் | கருப்பைக்குழாயிலுள்ள பிரச்சினைகள் |
– |
3 |
சுக்கிலப்பாயத்திலுள்ள குறைபாடுகள் | கருப்பையிலுள்ள பிரச்சினைகள் |
– |
4 |
– |
கருப்பை கழுத்திலுள்ள பிரச்சினைகள் |
– |
5 |
– |
பிறப்புவழியிலுள்ள பிரச்சினைகள் |
– |
6 |
– |
இடுப்புக்குழியிலுள்ள பிரச்சினைகள் |
– |
Dr. தேவரஞ்சனா புவனேந்திரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.