மூட்டுவாதக் காய்ச்சல் என்பது Group A beta haemolytic streptococci என்ற பக்றீறியா தொற்று ஏற்பட்ட ஒருவரது உடலில் தூண்டப்படும் அழற்சித் தாக்கத்தினால் ஏற்படுகிறது. இவ் வகையான பக்றீறியாக்களில் காணப்படும் ஒரு வகையான புரதத்திற்கு எதிராக எமது உடலினால் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள் எமது உடலின் மூட்டுக்கள், இதயம், நரம்புத்தொகுதி போன்ற பகுதிகளில் உள்ள இழையங்களை பாதிக்கின்றன.
இந்நோயானது 5 முதல் 15 வயதுடைய பிள்ளைகளையே பொதுவாக பாதிக்கின்றது. இவ்வகையான பக்றீரியா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் தொண்டை நோவு ஏற்படும். ஆயினும் தொண்டைநோவு ஏற்படும் எல்லோரையும் இந்நோய் பாதிப்பதில்லை. இவ் வகையான பக்றீறியா தொற்று ஏற்பட்டவர்களில் மிகவும் குறைந்த சதவீதத்தினரே (3 %) மூட்டுக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாகின்றனர். இந்நோய் ஏற்படுவதை நிர்ணயிப்பதில் சில பரம்பரைக் காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான முழுமையன காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மூட்டுவாதக்காய்ச்சலின் அறிகுறியாக தொண்டை நோவு ஏற்பட்டு 2 அல்லது 3 கிழமைகளில் மூட்டுவலி, மூட்டுவீக்கம், காய்ச்சல் ஆகியன ஏற்படும். பொதுவாக இந்நோயினால் கணுக்கால்,முழங்கால், மணிக்கட்டு, முழங்கை, தோள்மூட்டு போன்ற பெரிய மூட்டு பகுதிகள் பாதிப்படையலாம். அத்துடன் மூட்டு வலி, வீக்கம் என்பன ஓரே மூட்டில் நிலைத்திருக்காது மாறி மாறி வெவ்வேறு மூட்டுக்களில் ஏற்படலாம் (Migrating poly arthritis). இந் நோயினால் ஏற்படும் பாரதூரமான விளைவாக இருதய பாதிப்பை குறிப்பிடலாம். இருதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களாக இதய வால்வுகள் பழுதடைதல், இதய தசையில் அழற்சி ஏற்படல், இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
ஒரு தடவை இந்நோய் ஏற்பட்டவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காது விடின் மீண்டும் அதே நோய்கிருமியால் தொண்டை நோவு ஏற்படும் போது மூட்டுவாதக்காய்ச்சல் மறுதலிப்பதற்கும், ஏற்கனவே ஏற்பட்ட இருதய பாதிப்பு மோசமடைவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
மூட்டுவாதக் காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் மறுதலிப்பதையும், இருதயத்தில் ஏற்படும் தாக்கம் நீண்ட கால பிரச்சினையாக மாறுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
ஒருவருக்கு இந்நோய் ஏற்பட்டு நீண்ட காலமாக கண்டறிப்படாது விடின் நரம்பு தொகுதியில் ஏற்படும் பாதிப்பினால் அவரது உடலில் அசாதாரணமான அசைவுகள் ஏற்படலாம்.
மூட்டுவாதக் காய்ச்சல் ஏற்பட்டவருக்கு 21 வயது வரை அல்லது 5 வருடங்கள் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். இந்நோயினால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படின் ஆயுட்காலம் முழுவதும் சிகிச்சை பெறவேண்டும்.
Dr.ஸ்ரீ.கிந்துஷா
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை.