தற்போது உலகளாவிய ரீதியில் பெருகி வரும் புற்றுநோய் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனை ஆரம்பநிலையில் கண்டறிவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பல சிக்கலான விலை கூடிய சோதனைகள் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வரும் சில ஆய்வுகள் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு எளிய சிறுநீர்ப்பரிசோதனை பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது.
ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கின்றதா என்று கண்டறிந்து சொல்லக்கூடிய எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தை தாங்கள் அடைந்து இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தாம் கருத்தரித்திருக்கலாம் என்று நினைத்தால், கடையில் இருந்து ஒரு சிறு பட்டியை வாங்கி வந்து அதனை தமது சிறுநீரில் நனைத்து பின்னர் அதில் ஒரு கோடு தெரிகிறதா அல்லது இரண்டு கோடுகள் தெரிகிறதா என்பதை வைத்து தாம் கருத்தரித்துள்ளோமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.
அதுபோல ஒருவருக்கு ஒரு ஊசியைப் போட்டு பின்னர் அவரது சிறுநீரில் இதே போல ஒரு பரிசோதனை முறையை அமெரிக்காவில் மஸ்ஸச்சுஸெட்ஸ் இண்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றனர்.
தற்போது வெள்ளை எலிகளில் இந்த பரிசோதனையை நடத்தி வெறும் சிறுநீரை கொண்டே கட்டிகளை உருவாக்கும் பலவித புற்றுநோய்கள் முதல், உடலுக்குள் ரத்தம் உறைந்திருக்கிறதா என்பது வரை பல்வேறு நோய்கள் இருக்கின்றதா இல்லையா என்பதை தங்களால் கண்டறிய முடிந்துள்ளது என்று PANS என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.
எளிய, மலிவு விலை பரிசோதனை முறை
பலவிதமான நோய்களைக் கண்டுபிடிப்பதற்கான மலிவு விலை பரிசோதனையாக இந்தப் பரிசோதனை உருவெடுக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலையில் உடலை அறுத்து திசுக்களை எடுத்துதான் புற்நோய் பரிசோதனை செய்ய முடியும் என்ற அவசியத்தையும், பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருந்தால்தான் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது சாத்தியம் என்ற நிலையையும் இந்த புதிய எளிய பரிசோதனை முறை மாற்றியமைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதனால் மருத்துவ வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் குறைவாகவுள்ள ஏழை நாடுகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புற்றுநோயை அடையாளம் காட்டக்கூடிய புதிய வகை செயற்கை பயோமார்க்கர்களை உருவாக்கியுள்ளதாகவும், நானோபார்டிகல்ஸ் என்று சொல்லப்படுகின்ற நுண்ர்கட்களை ஊசி மூலம் உடலில் செலுத்திவிட்டால் பின்னர் சிறுநீரிலிருந்து புற்றுநோய் இருக்கிறதா என அந்த பயோமார்க்கர்களை வைத்து கண்டறிய முடிகிறது என்றும் இந்த பரிசோதனையை உருவாக்கிவரும் குழுவின் மூத்த விஞ்ஞானியான பேராசிரியை சங்கீதா பாட்டியா கூறுகிறார்.
இந்த பயோமார்க்கர்களை அடையாளம் காண்பதற்கு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற அதிக விலை கொண்ட கருவி தேவைப்பட்டு வந்தது. ஆனால் பரிசோதனையை விலை மலிவாக்க வேண்டும் என்பதற்காக இந்த பயோமார்க்கர்களை காண்பிக்கும் உயிரியல் இரசாயனம் தோய்க்கப்பட்ட தாள் பட்டிகளை தாங்கள் உருவாக்கியதாகவும், சிறுநீரில் நனையும்போது புற்றுநோய் இருக்கிறதா என்று அவை அடையாளம் காட்டிவிடுகின்றன என்று சங்கீதா பாட்டியா குறிப்பிட்டார்.
எலிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிசோதனை அடுத்தகட்டமாக மனிதர்களிடத்தில் செய்துபார்க்கப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய சிறுநீர் பரிசோதனை மூலமாகவே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால், அதனால் உலக அளவில் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.