இலங்கையில் Orienta Tsutsugamushi எனப்படும் ரிக்கெற்சியே வகை ஒட்டுண்ணிப் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோயே உண்ணிக்காய்ச்சல் ஆகும். இப் பக்ரீரியா கலங்களினுள் மட்டுமே ஒட்டுண்ணியாக வாழ்கின்ற தகவுடையது. இவ் வகைப் பக்ரீரியாக்கள் காவிகள் ஊடாகவே பரம்பலடைகின்றது. இவ் வகைக் காவிகளில் பெரும்பங்கு வகிப்பன உண்ணிகளாகும். அதாவது Larval Trombiculid mites எனப்படும் உண்ணிகளின் குடம்பிகளே பக்ரீரியாக்களைக் காவிச் செல்வது மட்டுமன்றி அவை மனிதனைக் கடிப்பதன் மூலம் ஒட்டுண்ணிப் பக்ரீரியாக்களையும் மனித உடலினுட் செலுத்துகின்றன.
உண்ணியின் குடம்பி கடித்த இடத்தில் நோவற்ற, சிகரெட்டினால் சுட்டது போன்ற வடிவத்தை உடைய அடையாளம் உருவாகின்றது (eschar). இது பொதுவாக மறைவான பகுதிகளிலேயே காணப்படும். அதாவது தஞ்சம் தேடி வந்த உண்ணியின் குடம்பி காதின் பிற்புறம், கமக்கட்டு, அரைப்பகுதி போன்ற மறைவான இடங்களில் இருந்து கடிக்கின்றன. கடிக்கப்பட்ட இடத்தினூடாக உட்புகும் ஒட்டுண்ணிப் பக்ரீரியா உடலின் ஒற்றைக் கருவுடைய கலங்களைத் தாக்குகின்றது. அதாவது ஒற்றைக்குழியம், நடுநிலைநாடி, குருதிக்கலன்களின் அகவணிக்கலங்கள் என்பவற்றைத் தாக்குகின்றது. இதனால் உடலின் பல அங்கங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது.
பலரில் சாதாரண காய்சலுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற உண்ணிக் காய்ச்சல் சிலரில் மரணம் வரை அழைத்துச் செல்கின்றது (0 -30 %). உயர் காய்ச்சல், சிகரட் அடையாளம் போன்ற அடையாளமுள்ள இடத்திற்கு அணித்தான நிணநீர்க்கணுக்களின் வீக்கம் ஏற்படல், வயிற்று நோ, வாந்தி, தோலில் ஏற்படும் அடையாளங்கள் (rash), ஈரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், சுவாசிப்பதில் கடினம், மலச்சிக்கல், தலைவலி, கண்கள் செந்நிறமாதல் போன்றன ஏற்படலாம்.
நிமோனியாக் காய்ச்சல், சடுதியான சுவாசச் சிக்கல், இதயத்தசை அழற்சி, பரவலடையும் குருதிக்கலன்களினுள்ளான குருதியுறைதல் (DIC) போன்ற சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்.
உண்ணிக்காய்ச்சலுக்கான பொருத்தமான சிகிச்சை அளிக்கப்படும் போது நோயின் தீவிரம், காய்ச்சல் என்பன உடனடியாகக் குறைவடைவதை அவதானிக்க முடியும். உண்ணிக்காய்ச்சல் மிகுந்த பிரதேசங்களில் உள்ளோர் முன்னேற்பாடாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடிவதுண்டு ஆயினும் தடுப்பு மருந்தேற்றல் (vaccination) என்பது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.
உண்ணிக்காய்ச்சல் ஏற்படாது நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
- உண்ணிக்காய்ச்சல் பொதுவாக மழைக்காலங்களிலும் குளிரான காலநிலையிலும் ஆற்றுப்படுக்கைகள், புற்றரைகள், காடழிக்கப்பட்ட பிரதேசங்களிலும் அதிகமாக அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிதல் அவசியமானதாகும்.
- பூச்சிகளை விரட்ட வல்ல பதார்த்தங்களைப் (insect repellents) பயன்படுத்தலாம். இவற்றிற் சிலவற்றை தோலில் பூசலாம். அத்துடன் இவ்வாறான பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட ஆடைகளையும் அணியலாம். (உதாரணம் Benzyl benzoate, Dibutyl phthalate)
- வெற்றுத் தரையில் / வெற்றுப் புற்றரையில் அமராதீர்கள்
- பொருத்தமான தளவிரிப்பு அல்லது நில விரிப்பைப் பயன்படுத்துங்கள்.
- பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பரந்தளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- கொறித்துண்ணிகளின் கட்டுப்பாடும் உண்ணிக்காய்சலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருவழியாகும். இவற்றில் கொறித்துண்ணிகளுக்கான கண்ணி வைத்தல், நஞ்சூட்டல் போன்றன நடைமுறையில் உள்ளன. கொறித்துண்ணிகளுக்கான வாழிட மாற்றம் காவிகளான உண்ணிகள் பெருக்கமடைவதில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
- வாழிடங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் களைகள் வரை அனுமதியாதீர்கள். அவை எலி மற்றும் முயல்களின் வாழிடங்களாகின்றன. உங்கள் சுற்றுச் சூழலைச் சுத்தமாகப் பேணுங்கள். இவற்றின் மூலம் உண்ணிகளின் வாழிடத்தை அகற்றுங்கள்.
- செல்லப்பிராணிகளில் உண்ணிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். சந்தேகமிருப்பின் அவற்றுடன் பழகுவதையும், அவற்றை வீட்டினுள் அனுமதிப்பதையும் தவிருங்கள்.
- தினமும் நீராடுங்கள்.
- உங்கள் உடலை சுத்தமாகப் பேணுங்கள்.
- சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.
- அயலவர் ஒருவர் உண்ணிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பின் அதனை வைத்தியசாலைத் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அல்லது பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
- நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற உதவுங்கள்.