பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது அதிகரித்து வருகின்ற பிரச்சினையாகும். 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடையில் கர்ப்பம் தரித்தலே பதின்ம வயதுக் கர்ப்பம் எனப்படுகின்றது. உலகத்திலே ஒவ்வொரு வருடமும் சராசரியாக 16 மில்லியன் குழந்தைகள் 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட தாய்மாருக்கு பிறக்கின்றன. இவற்றில் 95 வீதமானவை அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே நிகழ்கின்றது. இலங்கையிலும் பதின்ம வயதுக் கர்ப்பம் பிரச்சினையாகவே உள்ளது.
பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது மருத்துவரீதியாக மட்டுமல்லாது சமூகப்பிரச்சினையாகவும் உள்ளது. 100 பதின்ம வயதுக் கர்ப்பத்தினை எடுத்துக்கொண்டால் 57 பேர் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள், 14 பேரிற்கு குழந்தை அழிகின்றது. 29 பேர் கருச்சிதைவினை ஏற்படுத்துகின்றார்கள்.
இப்படிப்பட்ட பதின்மவயதுக் கர்ப்பத்திற்கு காரணம் என்ன ? இளவயதுத் திருமணம் என்பது இன்னும் பாரம்பரியமாகவே சில இடங்களில் காணப்படுகின்றது. எனினும் சிலர் வறுமைகாரணமாகவும், குடும்பச்சுமை காரணமாகவும், கல்வி பயிலவேண்டிய காலத்தில் திருமணத்தில் இணைகிறார்கள். இவர்களில் கருத்தடை முறைகள் பற்றிய அறிவும் போதாமலே இருக்கின்றது. அது மட்டுமன்றி திருமணமாகாது கர்ப்பம் தரிக்கின்ற நிலமையும் அதிகரித்து வருகின்றது. இதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். அதிகரித்து வரும் பாலியல் வன்புணர்வு, போதைப்பொருள் பாவனை, அன்னியநாட்டு பழக்கங்கள் என்பவற்றை குறிப்பிட்டு கூறலாம்.
பதின்மவயதுக் கர்ப்பத்தினால் தாய்க்கும், பிறக்கின்ற குழந்தைக்கும் மருத்துவப் பிரச்சினைகள் மட்டுமா? சமூகப்பிரச்சினைகளும் தலை தூக்குகின்றன. இப்படிப் பிறக்கின்ற குழந்தைகளிற்கு தாயினால் சரியான கவனிப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமன்றி தகப்பன் இல்லா குழந்தை என்ற நாமமும் சூட்டப்படுகின்றது. இவர்கள் பாடசாலைக் கல்வியிலும் ஆர்வம் குன்றியவர்களாகவும், தமது இளமைக்காலத்தில் இலகுவில் குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போதைப்பொருளுக்கும் அடிமையாகின்றார்கள்.
10 மாதங்கள் குழந்தையைச் சுமக்கின்ற தாய்க்கு பல்வேறுபட்ட மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இரத்தச்சோகை என்பது பொதுவான பிரச்சினை. சாதாரண கர்ப்பிணிகளுடன் ஒப்பிடும் போது பதின்ம வயதுக் கர்ப்பிணிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாகவுள்ளது. இதற்கு காரணம் இவர்களுக்கு போதியளவு உணவூட்டல் இல்லாமையும், சரியான முறையில் மருந்துக்களை எடுக்காமையும் (இரும்புச்சத்து, போலிக்கமிலம்) குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
உயர் குருதி அமுக்கம் என்பது இரண்டு மடங்கு உயர்வாகவே இவர்களில் காணப்படுகின்றது. உயர் குருதியமுக்கம் காரணமாக தாய்க்கும், கருவிலுள்ள குழந்தைக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றது. குழந்தை சரியான நேரத்திற்கு முன்னதாக பிறத்தல், நிறை குறைந்த குழந்தை பிறத்தல் என்பவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
உடலுறவு மூலம் பரப்பப்படும் பல்வேறு நோய்களும் ஏற்படலாம். உலகிலே 15 – 24 வயதிற்கு இடைப்பட்டவர்களிலேயே உடலுறவு மூலம் பரவும் நோய்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகினறது. HIV யினால் பாதிக்கப்படுபவர்களில் 5 பேரில் 2 பேர் 15 – 24 வயதிற்கு இடைப்பட்டவர்கலாகவே இருக்கின்றார்கள். கர்ப்பகாலத்தில் ஏற்படும். இவ்வாறான கிருமித்தொற்றினால் கருவிலுள்ள குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றது.
குழந்தை பிறக்கின்ற போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. குறித்த திகதிக்கு முன்னதாக குழந்தை பிறத்தல், நிறை குறைந்த குழந்தை பிறத்தல் என்பவற்றைக் கூறலாம். தாயின் வயது அதிகரிக்கின்ற போது இப் பிரச்சினைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பம் குறைந்து செல்கின்றது.
இரத்தச் சோகையினால் ஏற்படுகின்ற அதீத இரத்தப் போக்கு, உயர் குருதி அமுக்கத்தினால் ஏற்படுகின்ற விளைவு, திட்டமிடாத கருக்கலைப்பு குழந்தை பிறந்த பின்னர் ஏற்படுகின்ற கிருமித் தொற்று என பல்வேறுபட்ட நிலமைகளினால் தாயின் இறப்பும் ஏற்படலாம்.
பாலுட்டுதல் பற்றிய போதிய அறிவின்மையினால் குறைந்த மாத்திலேயே குழந்தைக்கு பாலூட்டுவதையும் நிறுத்திக்கொள்கின்றார்கள். இது குழந்தையின் போசணையைப் பாதிக்கின்றது. தாய் மீண்டும் கர்ப்பமடையும் சந்தர்ப்பத்தினையும் அதிகரிக்கின்றது.
பதின்ம வயதுதில் கர்ப்பமடைவோர் சரியான முறையில் வைத்திய ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். போதியளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல் வேண்டும். இரத்தச்சோகை உயர்குருதிஅமுக்கம் என்பவற்றை அடிக்கடி சோதித்துக் கொள்ளுதல் வேண்டும். குழந்தையின் வளர்ச்சி சரியானதாக இருக்கின்றதா என்பதை சோதிக்க வேண்டும். சரியான பாலூட்டல் முறையினை கற்றுக்கொள்ளுதல் வேண்டும். கர்ப்பத் தடை முறையினை பொருத்தமான முறையில் பயன்படுத்தல் வேண்டும்.
பேனா தூக்கும் கைகள் குழந்தைகளை சுமப்பது நல்லதா? சிந்திப்போம்! செயற்படுவோம்!
Dr. கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.