எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டை வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமக்கும், தம்மைச்சுற்றி இருப்பவர்களுக்குமாகச் சேர்த்து தம் வாயிலேயே மரண சாம்பலை மங்களமாக வைத்து மகிழும் மனிதர்கள் புகைப்பிடிப்பவர்களே!
புகைத்தலினால் உடலின் அத்தனை அங்கங்களும் பாதிப்படைவது நாம் அறிந்ததே. புகைத்தலினால் நுரையீரல் புற்றுநோய், நீண்டகால நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு, அங்க இழப்பு, சிறுநீரக நோய்கள்…. என அடுக்கிக் கொண்டே போகலாம்.
புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாக அப்பழக்கத்தைக் கைவிடுகிறார்கள் என்றால் தமது ஆயுட்காலத்தை அவர்கள் 9 ஆண்டுகளால் அதிகரித்துக் கொள்கின்றார்கள் என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
பிரிட்டனில் 10 இலட்சம் பெண்களிடையே நடாத்தப்பட்ட ஆய்வின் போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை 40 வயதிற்கு முன்பாக கைவிட்டவர்கள் தொடர்ந்தும் புகைப்பிடிப்பவர்களை விட சராசரியாக 9 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எப்போதுமே புகைப்பிடிக்காமல் இருப்பது தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேலும் உகந்தது என்பது மறுக்க முடியாது.
புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது !
நினைவாற்றலையும், பகுத்தறியும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை அழுகச்செய்கிறது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அளவுக்கதிகமான உடல் எடையும், இரத்த அழுத்தமும் மூளையை பாதிக்கின்றன, ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்றும் கூறுகிறார்கள்.