சலரோக நோய்க்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. அதாவது மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவம் தவிர்ந்த முறைகள் காணப்படுகின்றன. மருத்துவ முறைகள் என்று பார்க்கும் போது சில மருந்துகள் வாய் மூலமாக உள்ளெடுக்கப்படுகின்றன, சில மருந்துகள் ஊசியாக போடப்படுகின்றன. இன்சுலின் என்பதும் ஊசியாக ஏற்றப்படும் மருந்தாகும்.
வகை 1 சலரோக நோயாளர்களுக்கும், வாய் மூலம் எடுக்கப்படும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட முடியாத வகை 2 சலரோக நோயாளர்களும் இன்சுலின் போடவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகின்றார்கள். இன்சுலின் போடவேண்டும் என்று கூறும் போது பலரின் மனதில் ஏழுகின்றற முதற்கேள்வி, இன்சுலின் போட்டால் நோகும் என்பது தான். ஆனால் ஏற்படும் நோவினை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
இன்சுலினானது தோலின் கீழான பகுதியில் ஊசி மூலம் வழங்கப்படும். மிகக் குறைவான வலியைத் தருகின்ற மிக மெல்லிய (29 கோஜ்) ஊசிகள் விசேட சிரிஞ்சுடன் கிடைக்கின்றன. ஊசியானது சிரிஞ்சுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகையான ( 29 கோஜ்) ஊசிகள் கிடைக்காவிடின் கோஜ் 27 மற்றும் கோஜ் 28வகை ஊசிகளை பாவிக்கலாம். கோஜ்27 இற்கு குவைான ஊசிகளைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவை கூடியளவு நோவினை ஏற்படுத்தும்.
இன்சுலின் பேனா எனப்படுகின்ற விசேட இன்சுலின் செலுத்திகளும் காணப்படுகின்றன. இவை மிக மெல்லிய ( 31 கோஜ்) ஊசிகளைக் கொண்டுள்ளன. இதனை பயன்படுத்தி இன்சுலின் எற்றும் போது மிகக் குறைந்தளவு நோ ஏற்படுகின்றது. அத்துடன் இதனை குளிர்சானப் பெட்டியினுள் சேமிக்க வேண்டிய தேவையில்லை. மேலும் பிரயாணம் செல்லும் போதும் இலகுவாக எடுத்துச் செல்ல முடியும்.
இன்சுலின் போடுவதற்கு 10 – 15 நிமிடங்களுக்கு முன்பாக குளிரைக் குறைப்பதற்காக இன்சுலின் வைக்ப்பட்டுள்ள பெட்டியைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். ஏனெனில் குளிரான இக்சுலினானது மிகவும் கூடியளவு வலியை ஏற்படுத்தும்.
இக்சுலின் குப்பியைக் கையாளுவதற்கு முன்பாக கைகளை சவர்க்கார நீரினால் கழுவிக்கொள்வது நல்லது. ஊசி குத்தும் இடத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டால் மீண்டும் ஊசி குத்தும் போது கூடியளவு வலியைத் தரும். அத்துடன் குளித்த பின் அல்லது மேல்கழுவிய பின்னர் அல்லது போடுகின்ற இடத்தினை சவர்க்கார நீரினால் கழுவி நன்கு உலர்ந்த பின்னர் இன்சுலின் போடுவது நல்லது. அத்துடன் தினமும் ஊசி போடும் இடத்தினை ஸ்பிரிட் (Surgical spirit) போட்டுத் துடைத்தல் நல்லது அல்ல. தொடர்ச்சியாக ஸ்பிறிட் பாவிப்பதால் அவ்விடத்தலுள்ள தோலானது தடிப்படைகின்றது. மீண்டும் இன்சுலினைப் போடுவதற்கு கூடியளவு விசை பிரயோகிக்ப்படுவதனால் கூடியளவு நோ ஏற்படும்.
இன்சுலின் போடுவதற்கு பொருத்தமான இடத்தினைத் தெரிவு செய்ய வேண்டும். மேற்கை (Upperarm) மேற்தொடையின் முன், வெளிப்பக்கங்கள், தொப்புழிலிருந்து 2” வெளியே அதன் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறமும் இன்சுலினைப் போடலாம். இடத்தினை 2 – 3 மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்ளல் வேண்டும். அத்துடன் குறித்த ஒரு இடத்தில் ஊசி போடும் புள்ளியைத் தினமும் மாற்றுங்கள். ஒரே புள்ளியில் ஒவ்வொரு தடவையும் போடுவதை தவிர்க்க வேண்டும். இது அந்தப்புள்ளியிலுள்ள தோலினைத் தடிப்படையச் செய்வதால் இன்சுலின் சரியான முறையில் உடலில் உறிஞ்சப்படவும் முடியாது, கூடியளவு நோவினையும் ஏற்படுத்தும். குறித்த ஒரு புள்ளியை 3 – 4 கிழமைகளுக்கு ஒரு தடவை பாவிக்க முயற்சி செய்தல் நன்மை தரும்.
இன்சுலின் போடும் போது ஊசியானது தோலிற்கு செங்குத்தாக (at 90 degrees) இருத்தல் வேண்டும். விரைவாகவும் குத்துதல் வேண்டும்.. ஊசி குத்திய பின்னர் ஊசியினை கழற்றுதல் கூடாது. 5 செக்கன்களின் பின்னர் கழற்றலாம் ( withdrawal), விரைவாகவும் நேர்த்தியாவும் கழற்றுதல் வேணெ்டும். மெதுவாக ஊசியினை குத்தும் போதும் கழற்கும் போதும் கூடியளவு நோ உணரப்படும்.
இவ்வாறான சில நுட்பங்களை கையாள்வதன் மூலமாக இன்சுலினை நோ இல்லாமல் போட்டுக்கொண்டு சலரோகத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.