உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளனர். இலங்கையில் ஆண்டுதோறும் 1 லட்சம் மக்களில் 54 பேர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் 9000 வரையான காசநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
காசநோய் என்பது ஒருவகையான தொற்றுநோய். இது மைக்கோபக்றீரியம் ( Mycobacterium tuberculosis) எனப்படும் பக்றீரியாவினால் ஏற்படுகினற்து. இக்கிருமி எமது உடலின் எல்லாப்பாகங்களையும் பாதிக்கவல்லது. எனினும் அதிகமாக (80 வீதம்) நுரையீரலையே தாக்குகின்றது.
காசநோய்க்கிருமியானது காற்றினூடாக பரம்பலடைகின்றது. காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும், கதைக்கும் போதும், காசநோய் கிருமியானது காற்றினை சென்றடைகின்றது. இக்காற்றினை காசநோய்க்கிருமி அற்ற ஒருவர் சுவாசிக்கும் போது அவருடைய சுவாப்பாதையைச் சென்றடைகின்றது. எனினும் காசநோய்க்கிருமித் தொற்றுள்ள எல்லோருக்கும் காசநோய் ஏற்படுவதில்லை. காசநோயினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் கூடியவர்கள் போசணைக்குறைபாடு உடையவர்கள் (Malnutrition) , காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமானவர்கள், புகைப்பிடிப்பவர்கள், மது மற்றும் போதைப் பொருள்கள் பாவிப்பவர்கள், கட்டுப்பாடு குறைந்த சலரோகநோயாளர்கள், நீண்டகால நுரையீரல் நோயுடையவர்கள் என்போரைக் கூறலாம்.
எம்மில் பலருக்கு காசநோய் இருக்கின்றதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என்ற கேள்வி மனதில் எழுகின்றது. காசநோய் உள்ளதா என்பதை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான வழிகாட்டி இருக்கின்றது. இதன்படி எம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ளலாம்.
இல | பண்பறிசுட்டிகள் | புள்ளிகள் |
---|---|---|
1 | 3 கிழமைக்குமேல் தொடர்ச்சியான இருமல் | 20 |
2 | மாலைநேரக் காய்ச்சல் | 20 |
3 | உடல்நிறையிழப்பு | 15 |
4 | இருமும் போது இரத்தம் வெளியேறல் | 10 |
5 | உணவில் விருப்பமின்மை | 10 |
6 | உறவினர் ஒருவருக்கு காசநோய் இருத்தல் | 05 |
7 | நண்பர்களுக்கு காசநோய் இருத்தல் | 05 |
8 | சுவாசிப்பதில் சிரமம் | 03 |
9 | இரவில் வியர்த்தல் | 03 |
10 | நெஞ்சு நோ | 03 |
11 | உடல் களைப்பு | 03 |
12 | சலரோக நோய் இருத்தல் | 03 |
மொத்தம் | 100 |
பண்பறி சுட்டிகள் மொத்தப் பெறுமதி 50க்கு மேலே இருந்தால் அருகில் உள்ள வைத்தியசாலையில் சளிப்பரிசோதனையை கட்டாயமாகச் செய்து கொள்ள வேண்டும்.
காசநோய்க்கு முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன. குறிப்பிட்ட காலப்பகுதிக்கு உரிய முறைப்படி சிகிச்சை பெறுவோமாயின் காசநோய்க் கிருமிகளை இல்லாமல் செய்து பூரண சுகம் பெறலாம்.
எனவே எம்மை நாமே சுயமதிப்பீடு செய்து காசம் அற்ற தேகம் காண்போம்.
Dr. கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.