இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரத்து 500 பேர் வரை நாட்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic Renal Failure) பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்கிறார்கள். சிறுநீரகம் (Kidney) செயலிழந்தால் அதனை சாதராண மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியாது. அதற்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்புச் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறு நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒருதடவை குருதியை சுத்திகரிப்பதற்கு சுமார் 6 ஆயிரம் ரூபாவரை செலவாகும். வாராத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது இச் சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும். இச்சிகிச்சையை மேற்கொண்டவருக்கு குருதி நிறப் பொருளின் (Haemoglobin) அளவைப் பேணுவதற்கென செலவு வேறாக இருக்கும். குருதிச் சுத்திகரிப்புச் செய்து கொள்ளும் ஒருவருக்கு வருடாந்தம் 6 லட்சம் ரூபாவரை செலவாகும். அல்லது உறவினர் எவரேனுமுடைய சிறுநீரகத்தை (ஓரே குருதி வகையை உடைய) மாற்றீடு செய்து கொள்ளலாம். இதற்கு சுமார் 12 லட்சம் ரூபா செலவாகும். அதைவிட மாதாந்தம் உள்ளெடுக்க வேண்டிய மருந்துகளுக்கென 25 ஆயிரம் ரூபாவரை செலவாகும். இந்த செலவுகளை சாதாரண ஒரு குடிமகன் ஏற்றுக் கொள்வது மிகச்சிரமமே!
இலங்கையில் வருடாந்தம் பாதிக்கப்படும் 2500 பேருக்கும் குருதிச் சுத்திகரிப்பு ( Hemo Dialysis) சிகிச்சையை மேற்கொள்வதானால் வருடத்துக்கு 200 கோடி ரூபா ( 2பில்லியன் ரூபா) தேவைப்படுகிறது. இச் செலவு வரவு –செலவுத் திட்த்தில் சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்படும் மொத்த நிதியின் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்காகும்.
இவ்வாறு நாட்பட்ட சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தினமும் எடுக்க வேண்டிய மருந்துகள் டயலிசிஸ் செய்வதற்கு முன்னரான குருதிப் பரிசோதனை டயலிசிஸ் செய்து கொண்ட பின்னரான சோதனைகள், போக்குவரத்து ஏற்பாடு, நோயளிக்கான உதவியாள் என்றவாறு பெரும் செலவுகளும், அசௌகரியங்களும் ஏற்படும். இதனால் நோயாளியின் குடும்பம் நொந்து போய்விடும்.
உரிய நேரத்தில் சிகிச்சை அவசியம்.
எனவே, சிறுநீரகம் தொடர்பான நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்து. சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஏற்படவிருக்கின்ற பெரும் சிக்கல்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
சிறுநீரக நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலகில் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன. இலங்கையிலும் சிறுநீருக மாற்றத்துக்கு உதவும் கழகம் SriLanka Association of Nephrology and Transplantation (SLANT) போன்ற அமைப்புக்கள் இயங்குகின்றன.
சிறுநீரகங்களின் தொழிற்பாடுகள்.
முதலில் சிறுநீரகங்கள் எவ்வாறான செயற்பாடுகளைப் புரிகின்றன என்பதனை நோக்குவோம். இதன் மூலம் சிறு நீரகங்கள் பழுதழடவதால் ஏற்படும் பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளலாம்.
சிறுநீரகங்கள் முக்கியமாக ஆறு தொழில்களைச் செய்கின்றன.
- நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உருவாகின்ற யூரியா, கிரியாற்றினின் மற்றும் நைதரசன் கலந்த கழிவுப் பொருள்களை சிறுநீரக வெளியேற்றுதல், சாதாரணமாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.5 லீற்றர் முதல் 2 லீற்றர் வரையான சிறு நீரைக் கழிக்கின்றார்.
- உடலில் நீரின் அளவையும் மற்றும் பொட்டாசியம், சோடியம், கல்சியம் போன்ற தாதுப் பொருள்களின் (Minerals) அளவையும் சமநிலையில் பேணுதல்,
- உடலில் கார – அமிலத் தன்மையை (Acid – Base balance) பேணுதல், சாதாரணமாக குருதியின் PH-7.4 ஆகும் இந்த PH இனை பேணுவதில் சிறுநீரகம். சுவாசப்பை மற்றும் உடலில் உள்ள பிற அம்சங்கள் என்பன சம்மந்தப்படுகின்றன. PH-7.2 இலும் குறைவடைந்தால் உயிராபத்து ஏற்படலாம்.
- உடலில் குருதி அமுக்கத்தை ( Blood pressure) சீரான அளவில் பேணுதல் இதயம் சுருங்கும் போது குருதிக் குழாய்களில் உள்ள அமுக்கத்தை ( Syst- Olic pressure) 120 -140 mm Hg க்குள்ளும் இதயம் தளர்வடையும் போது குருதிக் குழைாய்களில் உள்ள அழுத்தத்தை (Dias tolic pressure) 70 – 90 mm Hg இடையிலும் பேணுதல். இவ்விடயத்தில் சிறுநீரகத்தால் சுரக்கப்படும் ரெனின் (Renin) என்ற சுரப்பு (Hormone) முக்கிய பங்கை வகிக்கின்றது.
- உடலில் உள்ள கல்சியத்தின் சமநிலையை பேணுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எமது உடலில் ஒரு கிலோகிராம் கல்சியம் வரை உள்ளது. அதில் 95 வீதமானவை எலும்புகளிலும் மிகுதியானவை குருதியிலும் மற்றும் சில கலங்களிலும் உள்ளது. எமது உடலில் அகத்துறிஞ்சப்படும் கல்சியம், தொழிற்பாட்டுக்குரிய நிலையை அடைய வேண்டும். இதற்குரிய நொதியங்களை ( Hydrolase) சிறுநீரகம் சுரக்கின்றது.
- செங்குருதிக் கலங்களில் ( Red Blood Corpuscle) உள்ள ஹீமோகுளோபினின் ( Hemoglobin) உருவாக்கத்திற்கு தேவையான எரித்திரோபொயிற்றின் (Erythiropoietin) சுரப்பை சிறுநீரகங்கள் சுரக்கின்றன. Hemoglobin களே ஒட்சிசனை காவுவதில் பங்காற்றுகின்றன. ஒருவருக்கு Hemoglobin இன் அளவு குறைவடைந்தால் அடிக்கடி களைப்பு, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இலங்கையிலே 10 -15 வீதமான மக்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. சிறு நீரக நோய்களில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவெனில் சிறுநீருகத்தில் சுமார் 90 வீதம் பழுதடையும் வரை அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை.
ஆக சிறுநீரக நோயாளி ஒருவர் வைத்தியசாலைக்கு வரும் போது அது பிந்தி நிலையாக இருக்கும். அந்த நோயாளியை மருந்துகளால் குணப்படுத்துவது கஷ்டமான விடயம்.
எனவே இத்தகைய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வது எப்படி என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு எமது வாழ்க்கை முறையை சமநிலையில் பேணுவது அவசியம், அத்துடன் அறிகுறிகள் வெளிப்படாத போதே ஒழுங்காள இலகுவான மருத்துவப் பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும். சலப்பரிசோதனை, குருதிப் பரிசோதனை மற்றும் ஸ்கானிங் போன்ற பரிசோதனை போன்றவற்றின் மூலம் சிறுநீரகப் பிரச்சினைகளை முன் கூட்டியே அறியலாம். ஆனால் மருத்துவப் பரிசோதனைகளை அனைவருக்கும் மேற்கொள்வர் முடியாமல் போகலாம். எனவே எத்தகையோருக்கு இந்தச் சோதனைகளை மேற்கொள்வது முக்கியமானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு உள்ளாவதற்கு அதிகம் சாத்தியமுள்ள குழுவை (High Risk Group) இனங்காணுதல் முக்கியமானது இதனை ஒவ்வொருவரும் தாமே செய்துகொளள்ளலாம். உடல்நிலை, பழக்க வழக்கம் மற்றும் குடும்பத்தினரின் நோய்த்தாக்க விவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒருவரை அதிக சாத்தியமுள்ள குழுவிற்குள் அடங்குவதாக இல்லையா என்று தீர்மானிக்கப்படும்.
நீரிழிவு (சலரோகம்) உள்ளவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த நோய் உள்ளவர்கள் ஒழுங்காக “கிளினிக் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் மருந்துகளை ஒழுங்காக உள்ளெடுக்க வேண்டும். உணவுகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறுநீரப் பரிசோதனை ( குளுக்கோஸ் அளவு, அல்புமின் அளவு) குருதிப் பரிசோதனை ( யூரியா அளவு, கிறியாற்றினின் அளவு) மற்றும் குருதி அமுக்கம் என்பவற்றை அடிக்கடி சோதித்துக் கொள் வேண்டும்.
சிறுநீரில் அல்புமின் (Albumin) வெளியேறுவதனை சாதாரண பரிசோதனை ( Heat Test) மூலம் ஓரளவு அறிந்து கொள்ளலாம். பரிசோதனைக் குழாயில் 3இல் 2 பங்கினை சிறுநீரால் நிரப்பி குழாயில் எஞ்சிய மேற்பகதியை ஒரு மெழுகுதிரி கொண்டு சூடாக்கி சிறிது நேரத்தின் பின் அவதானிக்கும் போது சிறுநீர் தெளிவாக இருந்தால் புரதம் இல்லை. சிறிது மங்கலாக இருந்தால் சிறிதளவு அல்புமின் வெளியேறுகின்றது. இந்தப் பரிசோதனையின் மூலம் புரதம் வெளியேற்றத்தை அறிய வேண்டுமாயின் 1 லீற்றர் சிறு நீரில் 300 மில்லிகிராம் வலை அல்புமின் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த அளவை விட குறைவான அளவில் புரதம் வெளியேறுவதை கண்டறிய வேண்டுமாயின் Micro Albumin Test செய்யப்பட வேண்டும்.
நீரிழிவு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு தடவையேனும் மேற்படி பரிசோதனையைச் செய்து கொள்வது சிறந்தது. சிறு நீரில் 20 மில்லி கிராமுக்கு மேல் அல்புமின் இருந்தால் எமது சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளது. அது புரதத்தை இழக்கிறது. என்று தெரிந்து கொள்ளலாம். சிறுநீரில் அல்புமின் வெளியேற்ற படுகின்ற பிரச்சினைக்கு மருந்துகள் பல உள்ளன. குறிப்பிட்ட மருந்து வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை பிற்போடலாம். இதற்குரிய ஆலோசனைகளை உரிய வைத்தியரிடம் இருந்து பெற்றுக் கொள் வேண்டும்.
அதிகம் சாத்தியம் உள்ள குழுவில் அடுத்து உள்ளடக்கபடுபவர்கள் உயர் குருதி அமுக்கம் (Hyper tension) உடையவர்களே எந்த வயதினராய் இருந்தாலும் இரத்த அழுத்தம் 140/ 90 இற்கு அதிகமாக இருந்தால் அவர் உயர் குருதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவராகிறார். அவர் தனது உணவுப்பழக்கவழக்கம், உடற்பயிற்சி, உயரத்திற்கு ஏற்ற நிறை, போன்றவற்றில் கவனஞ்செலுத்த வேண்டும்.
உடற்திணிவு அலகுமுறை
உடற்பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் நிறைய உண்டு. உயரத்துக்கேற்ற உடல்திணிவு உண்டா என்பதை அறிய பரும்டான எளிய முறை ஒன்று உள்ளது. ஒருவர் தனது உயரத்தை சென்ரிமீற்றரில் அளந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து 100 இணைக் கழித்துவரும் மிகுதியே சம்மந்தப்பட்ட நபருக்கு இருக்க வேண்டிய உடற்திணிவு (கி.கிராம்) ஆகும்.
உதாரணமாக அவரது உயரம் 180 செ.மீ ஆயின் அவருக்கு இருக்க வேண்டிய உடற்திணிவு 80 கி.கிராம் ஆகும்.
புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதே இதற்கு ஒரே வழி. ஒரு நாளுக்கு ஒரு சிகரெட் பிடிப்பதால் கூட சுறுநீரகப் பிரச்சினை மற்றும் சுவாசப்பைக் கோளாறுகள் என்பன ஏற்படக்கூடும்.
இது தவிர சில பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் சில தொழில்களைச் செய்பவர்களுக்கும் கூட சிறுநீரகப் பிரச்சினைகள். ஏற்படுகின்றன. அநூராதபுரம் பொலநறுவை, வன்னி, மொனராகலை போன்ற பிரதேசங்களில் இத்தகைய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் விவசாயம் செய்யப்படுகின்ற பிரதேசங்களாகும் இங்கு பாவிக்கப்படும். பலவகை கிருமிநாசினிகள் மற்றும் வளமாக்கிகளாலும் சேகரிக்கப்படும் தானியங்களில் ஏற்படும் பூஞ்சணங்களின் வளர்ச்சி (Fungus growth) காரணமாகவும் இப்பிரதேசங்களில் மக்கள், அதிகம் நச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
சிறுநீரகத்தை இந்த நஞ்சுகள் தாக்குவதால் அப்பிரதேச மக்கள் சிறுநீரக நோய்க்கு இலகுவில் உள்ளாகும் வாய்ப்பு உண்டு.
சில மருந்து வகைகளை உட்கொள்ளுபவர்களும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஆளாகும் சந்தர்ப்பம் உண்டு. நோவுக்கான மருந்துகள் ( NSAISD – Brufen. voltrin, Panadol) போன்ற மருந்துகளை அதிகம் உள்ளெடுப்பவர்களும் சிறுநீரக பரிசோதனைகளை அடிக்கடி செய்துகொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 2.5 லீற்றர் கொதித்து ஆறிய நீர் பருகுங்கள்.
கடினமான தண்ணீர் (Hard water) பருகுவர்களுக்கு சிறுநீருகக் கல் (Kidney stone) ஏற்படலாம். இது தொடர்பாக பூரணமான தகவல்கள் இதுவரையில் இல்லை. ஆனால் கொதித்து ஆறிய தண்ணீரை பருகினால் பிரச்சினையில்லை நாளாந்தம் ஒருவர் 1.5 லீற்றர் முதல் 2.5 லீற்றர் வரையிலான கொதித்தாறிய தண்ணீரை பருகி வந்தால், அவருக்கு சிறுநீரகக் கல் உருவாக வாய்ப்பே இல்லை. பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீர் கழிப்பதில் உள்ள சிரமம்காரணமாக தண்ணீர் குடிப்பதைகுறைத்து விடுகிறார்கள். இதனால் சிறுநீர் கழிப்பதில் உள்ள சிரமம்காரணமாக தண்ணீர் குடிப்பதைகுறைத்து விடுகின்றார்கள், இதனால் சிறுநீர், செறிவாக்கப்பட்டு (Concentrate) அதன் காரணமாக சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் எவருக்காவது சிறசீரகக்கல் வந்தால் ஏனைய அங்கத்தவர்கள் அது குறித்து கவனம் செலுத்துவது அவசியம்.
சில சிறுநீரகப் பிரச்சிகைகள் பரம்பரையாக ஏற்படுகின்றன. உதாரணமாக Poly cystic Kidney Disease என்ற நோய் நிலையைக் கூறலாம். இப்படியானவர்களின் சிறுநீரகம் பெரிதாக இருக்கும். உட்பகுதி நீர் சேர்த்து சிறு குமிழ்கள் போல் காணப்படும். இது போன்ற சிற சிறுநீரகப் பிரச்சினைகள் குடும்பத்தில் எவருக்காவது இருப்பின் ஏனையவர்களுக்கும் அப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று தமது சிறுநீரகத்தை ஸ்கான் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் 12 மாதங்களுக்கு ஒரு தடவை சிறுநீரகத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது..
6 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.
சிறுநீரக நோய்க்கு அதிகம் சாத்தியமுள்ள குழுவைச் ( High risk group) சேர்ந்தவர்கள் தங்கள் சிறுநீரகத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு சுலபமான சில பரிசோதனைகள் உள்ளன. அதில் ஒன்று குருதி அமுக்கத்தை சோதித்துக் கொள்ளுதல்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி அமுக்கத்தை சோதித்து கொள்வது அவசியம். குருதி அமுக்கம் அதிகமாக (hyper tension) இருக்குமாயின் அவர்களின் உறவினருக்கு நடுத்தர வயதில் இருந்தே (30 வயது ) குருதி அமுக்கத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்து பொருத்தமான உடற்பருமனை பேணுவதற்கு உடற்திணிவுச் சுட்டியினை (BMI –Body Mass Index) அறிந்து கொள்ள வேணும்.
உடற்திணிவுச் சுட்டி (BMI) = Body weight (Kg) / Height in (m)2
இங்கு உடற்திணி சுட்டி 25க்கு அதிகமாக இருப்பின் அது கூடுதல் எடை எனக் கருதப்படும். உடற்திணிவுப் பெறுமானம் 30 இனையும் விட அதிகமானால் அது பருத்த உடம்பு எனக் கருதப்படும். இப்படியானவர்கள் அடிக்கடி 3 மாதங்களுக்கு ஒரு தடவை குருதி அமுக்கத்தினை அளந்து கொள்வது அவசியம். குருதி அழுத்தம் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்படும் சந்தர்பங்கள் அதிகமாகும்.
மற்றொரு சுலபமான வழி குருதியை பரிசோதித்துக் கொள்தாகும். குருதியின் சீரம்கிறியற்றினின் Seru – Creatinine இன் அளவு 0.5mg/dl 1.2mg /dl ஆகும். Risk group இல் உள்ளவர்கள் 6மாதத்திற்கு ஒரு தடவை சீரம்கிறியற்றின் இனை சோதித்துக் கொள்ளலாம். அதன் அளவு அதிகரிப்பின் சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளது என்று கருதலாம்.
ஆனால் இம் முறையில் ஒரு சிக்கல் உள்ளது. வயதானர்களுக்கு கிறியற்றினின் உருவாகின்ற அளவு குறைவடைந்திருக்கும். இதனால் வயதானவர்களைப் பொறுத்தவரையில் கிறியற்றினின் அளவு அதிகரிக்கவில்லை என்பதைக் கொண்டு சிறு நீரகத்தில் பிரச்சினை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு வேறு பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கும். சிறு நீரை வடிக்கும் வீதத்தை (esfimated GFR) கணிப்பதன் மூலமே வயதானவர்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை உண்டா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். இரத்தத்தில் யூரியா (blood urea) இரதத்தத்தின் நைதரசன் மற்றும் குருதியிலுள்ள பொட்டாசியம் சோடியம் போன்றவற்றின் அளவுகளையும் இங்கு கணித்துக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் இனங்காண…
மேலே கூறப்பட்டவாறு சிறுநீரகப் பிரச்சினைக்கு உள்ளாவதற்கு ஆதிகம் சாத்திய முள்ளவர்கள் ஒழுங்காக மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் சிறுநீரகப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சைகளை மேற்கொள் முடியும்.
சாதரணமாக ஒரு நபரின் சிறுநீரகம், சிறுநீரை வடிக்கும் வீதம் நிமிடத்துக்கு 120 மி.லீற்றர் ஆகும். இப் பெறுமானம் நிமிடத்துக்கு 90 மி.லீற்றருக்கு குறைவாக இருந்தால் அந்தக் குறிப்பிட்ட நபரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனறு கருத வேண்டும். நிமிடத்திற்கு 60.மி.லீற்றருக்குக் குறைவாக இருந்தால் சிறுநீரகத்தில் ஒரளவு பாதிப்பு என்றும் நிமிடத்திற்கு 30 மி.லீற்றருக்கும் குறைவாக இருந்தால் அதிகபாதிப்பு என்றும் நிமிடத்திற்கு 15 மி.லீற்றருக்கும் குறைவானால் ஆபத்தானது என்றும் கருதப்படும்.
அடுத்ததாக சிறுநீரை அடிக்கடி சோதித்துக் கொள்ளுவதன் மூலம் சிறுநீரகத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும். சிறுநநீரில் புரதம் குருதிக் கலங்கள், சீதக்கலங்கள் போன்றன உண்டா என்று சோதித்தறிந்து உரிய சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுநீரில் தொற்று என்பது பொதுவான பிரச்சினை, பெண்களில் இதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். சிறுநீரக அழற்சி என்பதன் யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எம்மில் அதிகமானோர், சிறுநீருடன் இரத்தம் வெளியேறினால் தாங்களாகவே இது தொற்று என்று தீர்மானித்துக் கொண்டு நாட்டு வைத்தியம் செய்து கொண்டு அதனையே தொடர்வார்கள். உரிய படிப்படியாக அதிகரித்து ஒரு கட்டத்தில் – சில வருடங்களில் சிறு நீரகம் முற்றாக பழுதடைந்து விடும்.
சிறுநீரக அழற்சி
எனவே இதனை ஆரம்பத்திலேயே இனங்கண்டு தகுந்த சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தொண்டை நோவு ஏற்பட்டு இரண்டு வாரங்களில் பின்னர் சிறுநீருடன் குருதி வெளியேறுதல், கை, கால்களில் புண் உள்ளவர்களுக்குச் சிறுநீருடன் குருதி வெளியேறுதல்,காய்ச்சல் ஏற்படாமல் எரிவு வராமல் சலத்துடன் குருதி வெளியேறுதல். சிறுநீர் நுரையாக கழிக்கப்படுதல் முகம் வீங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவை சிறுநீரகம் பாதிப்படைந்தள்ளது என்பதைக் காட்டுகின்றது. அது சிறு நீரக அழற்சியாக (Glomerulonephritis) இருக்கலாம். சிறுநீரக அழர்ச்சிக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. சிலவகை சிறுநீரக அழர்ச்சிக்கு சிகிச்சை உண்டு.
சிறுநீரக அழற்சி ஏற்பட்டுள்ளமையை இலகுவான பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். சிறு நீரில் அல்புமின் உண்டா, pus cells உ்ணடா red ce;;s உண்டா, Dys morpic red cells உண்டா Cast உணடா என்று சோதித்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும் எனவே இரத்த அழுத்ததினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
சோதனைகளை ஒழுங்காக மேற்கொள்வதுடன் உரிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை
சிறுவர்களில் VUR என்ற பிரச்சினை அநேகமாக அவதானிக்கப் படுகிறது. நிறுநீரகத்தில் உருவாகின்ற சிறுநீர், சிறுநீாக்கான் வழியாக சிறுநீர்ப்பையில் சேர்க்கப்படும். சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர்வழி (urethra) மூலம் சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது. சாதாரணமாக சிறுநீர் வெறியேறும்போது சிறுநீர்க்கான் சிறுநீர்ப்பை சந்திக்கும் இடத்தில் சுருங்கும் செயற்பாடு ஒன்று நிகழ்கிறது இதனால் சிறுநீர் மீண்டும் சிறுநீர்கானினுள் செல்வதில்லை.
இந்தப் பிரச்சினையை ஆரம்த்திலேயே இனங்கண்டு கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை உள்ள சிறுவர்கள், சிறுநீர்கழித்த பின்னர் உடனடியாகவே மீண்டும் சிறுநீர்கழிக்க வேண்டும் என்று கூறுவார்கள் இப்படியானவர்களை உடனடியாக உரிய வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
கண்டபடி, நினைத்தபடி மருந்து உட்கொள்ளக் கூடாது.
Analgesic Nephropathy என்பதும் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. அதாவது வைத்திய ஆலோசனைகள் இன்றி, கண்மூடித்தனமாக மருந்துகளை உள்ளெடுப்பது இப்போது அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது. மருந்துகளை தகுந்த வைத்திய ஆலோசனை இன்றி ஒரு போதும் உபயோகிக்கக் கூடாது மீறி உபயோகிப்பதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன.
சிறுநீரகத்தில் சிறுநீரகத்தி (Glomerolus) என்ற அமைப்புக்கள் உள்ளன. இங்கு நிமிடத்திக்கு 120 மி.லீற்றர் அளவில் சிறுநீர்வடிக்கப்படுகின்றது. ஆக ஒரு நாளில் ஏறத்தாழ 120 லீற்றர் சிறுநீர் பெறப்பட வேண்டும் ஆனால் இவ்வளவு சிறுநீர் கழிக்ப்படுவதில்லை 99 சத வீத நீர் சிறு நீர்க்குழாய்களால் மீள அகத்துறிஞ்சப்படுகின்றது.
வைத்திய ஆலோசனை இன்றிச் சில வகை மருந்துகளை உள்ளேடுப்பதால் சிறுநீர்க்குழாய்கள் பழுதடைந்து விடுகின்றன. இப்படியானவர்களில் சிறுநீர் அதிகளவில் வெளியேறும். இது Tubulo Interstitial Nephritis எனப்படும். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் வௌத்தெரியாது. குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரகம் முற்றாகப் பாதிக்கப்பட்டு விடும்.
மருந்துகளை கண்டபடி உள்ளெடுப்பதைத் தடுப்பதற்கு, தை்தியர்களினால் வழங்கப்பட் மருந்து விவர உறுதிச்சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். முக்கியமாக மக்கள் தான் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சில ஓமோன்களின் செயற்பாடு காரணமாக உடலின் கல்சியத்தின் அளவு அதிகரிக்கலாம். சில அறிகுறிகள் மூலம் அதனை இனங்கண்டு சோதிப்பதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
chonese herb என்பதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இது போன்ற மருந்துகளைச் சில பிரிவினர் தயாரித்து சந்தைக்கு விட்டுள்ளனர். இந்த மருந்துகளில் என்ன இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளன என்பதும் மக்களுக்குத் தெரிவதில்லை. இப்படியான மருந்துகளை உள்ளெடுப்பதால் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுவது தொடர்பில் அதன் ஆரம்ப அறிகுறிகளை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் சிறு நீரகத்தில் தீவிர பிரச்சினைகள் ஏற்பட்டு அது செயலிழக்கும் முன்னர் நாம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆரம்ப அறிகுறிகள்
– சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளிகளில் மாற்றம்.
– சிறுநீருடன் குருதி வெளியேறல் (சிறுநீர் சிவப்புஅல்லது தேயிலைச் சாய நிறத்திலோ வெளியேறுதல்)
– சிறுநீர் வெளியேறும் போது நுரைத்தல் ( சிறுநீரில் புரதம் அதிகளவில் வெளியேறின் அங்கு நுரை தோன்றும்.)
– சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்படும் போது மேலதிக தண்ணீர் உடலின் மிருதுவான இழையங்களில் சென்று தேங்கும். இதனால் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் (Peri Orbital Oedema & Facial Puffiness) கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
– சடுதியாக நாரிப் பகுதியில் அல்லது நாரியிலிருந்து கீழ் புறமாக வலி ஏற்படுதல்.
– சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படல்( இது சிறுநீர்த் தொற்றாகவும் இருக்கலாம்)
– பொதுவாக வயதான ஆண்களில் Prostatism என்ற பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது ஆண்களில் வயதாகும் போது சிறுநீர்ப்பையின் கீழ்ப்புறமாக உள்ள Prostate சுரப்பி வீக்கடைகிறது. இதனால் சிறு நீர்வழி சிறுத்து பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது பின்வரும் அறிகுறிகளைக் காட்டும்.
- சிறுநீர், கழிக்கும் போது சிறுநீர் கழிவடையும் வேகம் அல்லது வீச்சுக் குறைவடைந்து காலடியிலேயே விழுதல்.
- சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற அடக்க முடியாத – திடீரென எற்படும் உணர்வு.
- சிறுநீர் கழிப்பதில் தாமதமும், சிரமமும். (மூக்குதல்) இருத்தல் சிறுநீர் கழித்து முடிந்தபின்னரும் சில துளிகள் (post voidal dribbling) விழுதல் அத்துடன் பூரணமாகச் சிறுநீர்கழிக்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுதல்.
– அத்தகைய உபாதைகள் உள்ளோர் வைத்திய நிபுனரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.
– இப்படியான அறிகுறிகளை கொண்டவர்கள் அவசியம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
– சிறுநீரகம் செயலிழந்து கொண்டிருக்கும் போது குருதியில் கழிவுப் பொருள்கள் மற்றும் மேலதிக தண்ணீர் சேர்கிறது. இதனால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
- களைப்பு, கவனக்குறைவு
- எப்போதும் உட நலமின்மை போன்ற உணர்வு
- பசியின்மை
- வாந்தி குமட்டல்
- சுவாசிப்பதில் சிரமம்
– எனது வாழ்க்கை முறையை உகந்த விதத்தில் மேற்கொள்வதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமானதாகப் பேணலாம்.
– நிறையப் பழங்களை, மரக்கறிகளை தானிய வகைகள உணவில் சேர்த்தல்.
– கொழுப்பு உணவுகள், உப்பு உணவுகளை அளவோடு உண்ணுதல்
– இனிப்புப் பானங்களுக்குப் பதிலாக போதுமான தண்ணீரை அருந்துதல்
– உடல் நிறையை உரிய அளவுக்குப் பேணுதல்
– இதயத்துடிப்பை அதிகரிக்கும் உடற் செய்ற்பாடுகளில் (நீச்சல், உடற்பயிற்சி) தினமும் 30 நிமிடமாவது ஈடுபடல்
– புகைத்தலைத் தவிர்த்தல்
– மதுபானம் தவிர்க்கப்பட வேண்டும்
– இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும்.
– மன அழுத்தத்தைப் போக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். ஆன்மீக சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபடுதல்
சிறுநீரகப் பிரச்சினைகள் முற்றாகத் தவிர்க்க வேண்டுமாயின் ஒருவர் “இந்து” மதத்தில் கூறியவாறு வாழ்வதன் மூலம் அதனைச் சாத்தியப்படுத்தலாம் என்று கொள்ளலாம்.
Dr.T.பேரானந்தராஜா
பொதுவைத்தியநிபுணர்.
போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.