இன்றைய நவீன, நாகரிக உலகில் வாழும் நாம் உடற்பயிற்சியின் தேவையை அத்தியாவசியமாக உணர வேண்டிய காலம் வந்துள்ளது. இன்று நம்மில் பெரும்பாலானோர் ஒரு கதிரையில் இருந்து கொண்டே பல வேலைகளை, பல சாதனைகளை, கணனிகள், இலத்திரனியல், மின் இயந்திர சாதனங்கள் மூலம் இலகுவாக முடிக்கின்றனர். இதனால் வேகமாக உழைப்பிற்காக சுழன்று கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் வேறொரு வழியில் மனிதனின் உடல் தொழிலியலைப் பாதித்துக் கொண்டிருப்பதை எம்மால் உணர முடிவதில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து பல மணி நேரம் வேலை செய்வதால் அவனுக்கு உடலுக்கு போதிய அப்பியாசம் கிடைப்பதில்லை. இதனால் அவன் உடற்பருமனடைகிறான். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றான். நீரிழிவு, இதய நோய்கள், உயர்குருதி அமுக்கம், மூட்டுவாதம், நாரி நோ, மூட்டு நோ போன்றவற்றால் துன்பப்படுகின்றான்.
அன்றைய காலகட்டத்தில் உடல் அப்பியாசம் என்பது எமது வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்திருந்தது. சாதாரணமாக கிணற்றில் அள்ளிக் குளிப்பது முதல், வீட்டு வேலைகள், உரலில் இடித்தல், அம்மியில் அரைத்தல், விவசாய நடவடிக்கைகளான தண்ணீர்ப் பாய்ச்சுதல், உழுதல், கொத்துதல், பாரம் தூக்குதல், நடத்தல், ஓடுதல் என்பன சாதாரண வாழ்வியலுடன் சேர்ந்து பின்னிப்பிணைந்திருந்தன. இதனால் அவர்கள் போதிய உடல் அப்பியாசத்தை பெற்றுக்கொண்டார்கள். உடல் சுறுசுறுப்பாக இயங்கியது. அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். இன்றோ எல்லாம் இயந்திரமயமாகியதால் நாம் உடல் உழைப்பின்றி சோம்பேறிகளாக மாறிக்கொண்டிருக்கின்றோம்.
இன்றைய சிறுவர் முதல் பெரியோர் வரை தொலைக்காட்சி பார்த்தல், கணனியில் விளையாட்டுக்கள் விளையாடுவதில் கூடிய நேரத்தை செலவிடுகிறார்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. இவற்றைக் குறைத்து ஒரு நாளில் சில மணிநேரங்களையாவது வீட்டுக்கு வெளியே வந்து ஒடுதல், நடத்தல், பாரம் தூக்குதல் போன்ற நம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சில வேலைகளைச் செய்தும் உடல் அப்பியாசத்தைப் பெற்றுக்கொள்ளலாம். சிறுவர்களைச் சிறிது நேரமாவது வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். அருகில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்கு நடந்து சென்று வாருங்கள். அப்போது உங்கள் மன் அழுத்தம் குறைவடைவதுடன், உடல் புத்துணர்ச்சியும் அடைகின்றது. புதிய உற்சாகம் ஒன்று நமக்கு கிடைக்கும். இதனால் தீய எண்ணங்களிலிருந்தும், செயல்களிலிருந்தும் நாம் விடுபட முடியும். நமக்குள் நன்றாக வாழமுடியும் என்ற உத்வேகமும் பிறக்கின்றது.
உடல் அப்பியாசமானது நமக்கு பல நன்மைகளைத் தருகின்றது. அது உடலியல் ரீதியாகவும், ஆத்ம ரீதியாகவும் கிடைக்கின்றது. உடற்பருமனைக் குறைக்கின்றது. குருதிச் சுற்றோட்டத்தை கூட்டுகின்றது. தசைநார்கள், மூட்டுக்களை வலுவடையச் செய்கின்றது. நாரி நோ, இடுப்பு வலி போன்றவற்றை நீக்குகின்றது. அத்துடன் ஆத்ம ரீதியாகவும் மனம் ஆறுதலடைய உதவுகின்றது. உடலுக்குப் புத்துணர்ச்சி (சுநடயஒயவழைn) கிடைக்கின்றது. இதனால் நிம்மதியான, சாந்தியான ஒரு வாழ்வு கிட்டுகிறது. எனவே இன்றே நாம் எம் வாழ்வியலுடன் கூடிய சில அப்பியாசங்களைச் செய்து ஆரோக்கியமானவர்களாக வாழ்ந்து, எமது பிள்ளைகளையும் வாழ வைப்போம்.
செ.தவச்செல்வம்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.