இயற்கை எமக்கு வழங்கியுள்ள மிகச் சிறந்த மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மா மருந்து தண்ணீர் ஆகும். இது எளிமையானது. முறை அறிந்து பயன்படுத்தினால் தவறாமல் பயன் தரும். பக்க விளைவுகள் இல்லாதவை. உடல் அனுசேபம் இயல்பாக நடைபெற போதுமான நீர் இன்றியமையாதது ஆகும். சிறுநீர், மலம் எமது உடலின் மிகப் பெரிய கழிவுகள் நீக்கியான தோலின் மூலம் வியர்வை, மூச்சு, சளி ஆகியவற்றின் வழியாக ஒவ்வொரு விநாடியும் நமது உயிராற்றல் நமது உடலை நோயாற்றதாக செய்வதற்காக நடைபெறும் செயற்பாட்டில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்டி உடலின் இயல்பான நீரின் அளவு சீராகப் பராமரிக்கப்படுவதற்கு தேவைப்படும் அளவில் நீர் பருகுவது மிக இன்றியமையாதது ஆகும்.
நாம் உண்ணும் உணவானது எமது உடலில் உள்ள இயற்கையான சுரப்பிகளாலும், செரிமான அமிலங்களாலும், செரிமான உறுப்புக்களாலும் மிக நுண்ணிய துணிக்கைகளாகப் பிரிக்கப்படும் போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை ஒரே சீரான விகிதம் அளவினதாக மாற்றுவதற்கு அல்லது தணிப்பதற்கும் மேலும் உணவுப் பொருட்களை மென்மைப்படுத்தி கூழ்நிலையை அடைய வைக்கும். கழிவுகளை உடலை விட்டு நீக்க தேவைப்படுமளவில் உள்ள நீர்த் தேவையையும் நமது உடல் உயிர் ஆற்றல் நமக்கு உணர்த்தும் அறிவிப்பு தான் நீர்த்தாகம் ஆகும்.
இந்த நீர்த்தாகத்தை நாம் அலட்சியப்படுத்தினால், செரிமானக் குறைபாடுகள், மலச்சிக்கல், சிறுநீரகச் சிக்கல்கள், சிறு நீரகக் கல் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டதாகிவிடும். எனவே சுத்தமான பாதுகாப்பான குடிதண்ணீரைப் பருகுதல் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நன்னீர் என்பது உப்புக்களும் வேறு திண்மப் பொருள்களும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். சுத்தமான குடிதண்ணீருக்குப் பதிலாக குளிர் பானங்களான தேநீர் மற்றும் பருகுவது பொருத்தமாக இருக்காது. இது எமது நாளாந்த ஜீரண ஓட்டத்தில் மாறுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்பாகிறது.
உதாரணம்: பசியின்மை, செரிமானக் குறைபாடுகள், வயிற்றுப்போக்கு எனினும் நீரின் தேவையை முறை அறிந்து பயன்படுத்தல் நலம் தரும். எப்போது நாம் நீர் அருந்த வேண்டும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
- காலையில் எழுந்தது பல் தேய்த்த பின்பு தாகம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் போதுமான அளவு (மூன்று / நான்கு) டம்ளர் சுத்தமான நீரை எமது உமிழ் நீருடன் கலந்து ஆறுதலாகப் பருகுதல் வேண்டும். இது எமது உடலின் நீர்த் தேவையை ஈடுகட்டவும், ஜீரணமாகிய உணவுக்கழிவுகளை அகற்றும் செயலுக்கும் உதவியாக இருக்கும்.
- உணவு உண்ட பின்பு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் ஏற்படும் தாகத்தின் போது போதுமான குடிதண்ணீர் பருகுதல் எமது செரிமானம் மேம்பட உதவுகின்றது.
- பகலில் ஒரு வேளை உணவுக்கும் மறுவேளை உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அதாவது தாகம் மறைந்து திருப்தி நிலை ஏற்படும் அளவுக்குப் பருகுதல் நல்லது.
- சூடான பானங்கள், தேனீர், கோப்பி போன்றவற்றை பருகுவதற்கு முன்பு தேவைப்படுமாயின் நீர் அருந்தலாம். சூடான பானங்கள் அருந்திய பின்பு 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதை தவிர்த்தல் நலம்.
- காய்ச்சல் நேரங்களில் உணவைத் தவிர்த்து கூடிய அளவு போதுமான அளவு நீர் அல்லது வெந்நீர், கோப்பி, தேநீர், இளநீர் மற்றும் நீராகாரங்கள் அருந்துதல் நல்லது.
- உணவு உண்ட உடன் அரைக்கப் வெந்நீர் பருகுதல் மூலம் செரிமான உறுப்புகளுக்கு குருதி விநியோகத்தை அதிகரித்து செரிமானம் மேம்பட உதவும்.
- உடற்பயிற்சி, கடின உழைப்புக்குப் பின்பு அல்லது வெய்யிலில் சென்று வந்த உடன், குழந்தைகள் ஓடியாடி விளையாடிய பின்பு இந்த நிலையில் உடலில் இரத்த ஓட்டம் தீவிர நிலையில் இருக்கும். பெருமூச்சு, வியர்வை, அதிக அளவில் நீர்த்தாகம் இருப்பினும் உடலின் இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு வந்த பின்பு (5 நிமிடங்கள்) சென்ற பின்பு, போதுமான நீர் அருந்துங்கள், தீவிர நிலையில் தேவைப்படின் சூடான பானங்கள் அல்லது வெந்நீர் போன்றன அருந்துதல் நலம் தரும். இது மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடற்கழிவுகளை நீக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிலையில் நாம் குளிரான பானங்களை உடன் அருந்தினால், உடலின் இரத்த ஓட்டத்தில் திடீர் மாறுதலை ஏற்படுத்தி தடிமன், தும்மல், மந்த நிலை, உடல் வலி, தலைப்பாரம், தலைவலி, காய்ச்சல் போன்றன ஏற்படலாம்.
- உணவு உண்ணும் போது அதிகளவு நீர் அருந்துதல், உணவு உண்பதற்கு முன், பின் ஒரு மணி நேரத்திற்குள் அதிகப்படியான நீர் பருகுதல் போன்றவற்றால் எமது ஜீரண அமிலங்கள் நீர்த்து அவைகளின் தீவிரத்தன்மை வெகுவாகக் குறைந்து முறைகேடான ஜீரணம் ஏற்படுகின்றது.
- பாலருந்தும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பசி வேறு, நீர்த்தாகம் வேறு. குழந்தை அழும்போது ஒரு தேக்கரண்டி தண்ணீரை குழந்தையின் வாயருகே கொண்டு சென்றால் தாகம் என்றால் தண்ணீரை மறுத்து விடும். அப்போது பால் அருந்தக் கொடுக்கலாம். எனவே, குழந்தை அழும் போது தாகமா? பசியா? என்பதையும் பிரித்துணர்ந்து தேவைப்படும் அளவில் குழந்தைக்கு குடி தண்ணீரை ஊட்டுவதன் மூலம் செரிமானக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே சீராக்கப்படுவதால் அஜீரணம், மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப்பொருமல் போன்றன தவிர்க்கப்பட்டு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உணவு உண்ணும் போது இடையில் குளிர்பானங்டகளை பருகுவதைத் தவிர்த்தல்.
குடி தண்ணீர் எவ்வளவு தான் தூய்மையானதாக இருப்பினும் அது தேக்கி வைக்கப்படும் பாத்திரம் அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். காரணம் தேக்கி வைத்திருக்கும் பாத்திரங்களின் தன்மையும், நீரில் நுண்ணியதாகக் கலந்து விடுகின்றது. இரும்பு அல்லது பிளாஸ்ரிக் குழாய்களில் தேங்கி நிற்கும் நீரில் துரு, பிளாஸ்ரிக்கின் இரசாயனக் கலவை குடிதண்ணீரை நஞ்சாக மாற்றுகின்றது. அலுமினியம், பிளாஸ்ரிக், ஈயம் பூசப்பட்ட பித்தளை, செப்பு போன்ற பாத்திரங்களில் தண்ணீர் தேக்கி பயன்படுத்துவதன் மூலம் நீரில் நச்சுத் தன்மை ஏற்பட்டு விடுகின்றது. கண்ணாடி, எவர்சில்வர் போன்றவற்றில் சேமிக்கப்படும் நீரில் நச்சு கலப்பு ஏற்படுவதில்லை. எனினும் கலந்து விட்ட நஞ்சுகளையும், அசுத்தங்களையும் நீக்கும் ஆற்றலும் இவற்றுக்கு இல்லை. தங்கம், வெள்ளி பாத்திரங்களை விடப் பழைய மண்பானையில் வைக்கப்படும் நீரே தரத்தில் உயர்ந்தது.
தற்போது சுற்றுச் சூழல் மாசடைவதால் நீரில் கலந்துவிட்ட மாசுங்களை அகற்றுவதற்கு நீரைக் கொதிக்கும் வரை நன்றாக காய்ச்சி ஆறவைத்துப் பழைய மண்பானையில் 10 மணி நேரம் வரை அசைவில்லாமல் ஆறவைத்துப் பின்பு வடித்து அடியில் உள்ள வண்டல்களை அகற்றிய பின் பானையைக் கழுவி நீரை அதனுள் ஊற்றி மூன்று நாட்களுக்கு குடி தண்ணீராகப் பாவிக்கலாம்.
புதிய பானை ஒன்றினுள் நீரை விட்டு இரண்டு மூன்று தடைவ சூடாக்கிய பின்பு பாவிக்கவும், இம் முறை மூலம் நீரின் நச்சுக்களையும், அதில் கலந்துள்ள வண்டல்களையும் ஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பானை ஈர்த்து அந்த நீரின் தரத்தை மீண்டும் உயர்த்தி விடுவதை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய பாத்திரங்களுக்கு இப்படியான ஆற்றல் இல்லை.
மனிதன் இந்த உலகில் உடல், உள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உணவால் கிடைக்கப்பெறும் ஆற்றல்கள் மட்டும் போதாது. நீர் மற்றும் காற்றுப் போன்றவற்றால் கிடைக்கப்பெறும் ஆற்றல்களும், அண்ட வெளியில் சூரியன், சந்திரன் இதர கோள்களில் இருந்து பெறப்படும் வெப்ப, ஒளி, ஒலி, வாயு அலைகள் ஓசோன் படலத்தின் ஊடாக வடி கட்டி மனிதனுக்கு சரியான விகிதத்தில் பெறப்படும் போதே அவன் தொடர்ந்து உடல், உள இயல்பு ஆரோக்கிய நிலையில் வாழ முடியும் என்பதை அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒருவரின் மொத்த எடையில் 65 வீதம் என நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. விஞ்ஞான முறைப்படி சுத்தமாக்கப்படும் குடி தண்ணீரின் சிறப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றதையும் இயற்கை நிலையில் இருக்கும் நீரின் மூலம் தான் மனிதன் அளவற்ற நன்மைகளை பெறுகின்றான் என்பதையும் சுற்றுச்சூழல் மாசடைவதால் மனிதன் விஞ்ஞான முறைப்படி சுத்தமாக்கப்பட்ட குடி தண்ணீர் அருந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான் என்பதையும் ஆய்வின் மூலம் அறிகிறோம்.
ச.சுதாகரன்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.