மிகவும் சாதாரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சினை இந்த உயர் உடற்பருமன். நீங்களும் அதிற் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உடற் பருமன் உடையவரெனின்.
சில தசாப்தங்களின் பின்னர் உயர் உடற்பருமன் உடைய சமூகத்தைத்தான் சாதாரண சமூகமாகக் கருதப்படவேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையைத் தடுக்க நீங்கள் தயாராகுங்கள்.
உயர் உடற்பருமன்
இது உடலில் மேலதிக கொழுப்புச் சேமிப்பால் ஏற்படும் ஆரோக்கியமற்ற நிறையதிகரித்த நிலையாகும்.
உயர் உடற்பருமனை அடையாளப்படுத்துதல்
இதற்காக BMI என்ற கணிப்பீடு வழக்கத்திலிருக்கிறது.

BMI 30 kgm-2 இனைத் தாண்டிய அனைத்து நபர்களும் உயர் உடற்பருமனுக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
உயர் உடற்பருமனை ஏற்படுத்தும் காரணிகள்
1. அதிக ஊட்ட நிலை
உடலானது சாதாரண உடலியல் தேவைகளுக்காகச் சக்தியை வேண்டி நிற்கின்றது. இதன் போது வழங்கப்படும் சக்தி மூலம் உணவானது இது தேவைப்படும் அளவை விட கூடிய அளவில் வழங்கப்படும் போது மேலதிக சக்தி கொழுப்பாக மாறிச் சேமிக்கப்படும். அது உங்கள் உடல் நிறையை அதிகரிக்க செய்யும்.
2. உணவுத் தேர்வும் உண்ணும் தடவைகளும்
நீங்கள் உங்களுக்குரிய உணவுகளாக பொதி செய்யப்பட்ட பண்டங்கள், மென்பானங்கள், Fast Foods (Cakes, Pizza) என்பவற்றைத் தெரிவு செய்வீர்கள் எனின் நீங்களே உடற்பருமனுக்கு வழிகோலுகிறீர்கள். அவை அளவில் கொஞ்சமானதாகிலும் உயர்சக்தி செறிவு உடையவை. நீங்கள் அதிகம் உண்ணாவிடினும், போதுமான அளவே பாதகமாக அமையும். அவை சமிபாடடையும் வீதமும் உயர்வானதாகையால் உண்ணும் தடவையையும் அதிகப்படுத்திவிடும்.
3. குறைந்து வரும் உடற்செயற்பாடுகள்
பெருகிவரும் வசதிகள் இறுதியில் உங்களை படிகளிற் கூட ஏறவிடுவதில்லை. ஏன்? நடக்கக்கூட விடுவதில்லை. சுழல் நாற்காலிகள் அதை செய்து விடுகின்றன. உடலியக்கங்கள் குறைந்த நிலையில் நீங்கள் உண்ணும் சக்தி செறிவான உணவின் மிகையான சக்தி நிச்சயமாக உங்கள் நிறையாகவே மாறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
4. பரம்பரை
உங்களையும் தாண்டிக் குறிப்பிட்ட வீதத்தில் (25%) உங்கள் உயர் உடற்பருமனை மரபுரிமைகள் தீர்மானிக்கின்றன. அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட உயர் உடற் பருமனில் சூழலில் தாக்கம் குறைந்த அளவே செல்வாக்கு செலுத்த முடியும்.
உயர் உடற் பருமன் வழிகோலும் சிக்கல்கள்
- உயர் குருதியமுக்கம் இதய நோய்களும்.
- மார்பகப் புற்று நோய்கள்
- பெருங்குடல், நேர்குடல் புற்று நோய்கள்
- நீரிழிவு (Type II Diabetes Millitus)
இவை எல்லாவற்றையும் விட உயர் உடற்பருமன் உடையவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள். அவை குடும்பம், சமூகம் என்பவற்றுடனான இடைத் தொடர்புகளைப் பாதிக்கின்றன.
உங்கள் நிறையை முடிந்தளவில் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
உணவுத் தேர்வுகளையும் உண்ணும் தடவைகளையும் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். Fast Foods, குருதியில்Glucose ஐயும் Insulinஐயும் சடுதியாக கூட்டி விடுகிறது. நாளடைவில் Insulinஇன் உணர்திறன் குறைந்து விடுகிறது. இது Diabetes இற்கு இட்டுச் செல்லும்.
இயலுமானவரை அவற்றைத் தவிருங்கள். கொழுப்பு நிறைந்த Cheese, Margarine, Ground beet, Pork chops போன்பவற்றை தவிருங்கள். நல்லெண்ணெயை உபயோகியுங்கள். நார் சத்து உணவுகளை உணவில் சேருங்கள். அவை சமிபாட்டைத் தாமதப்படுத்திக் கடத்தல் நேரத்தை கூட்டும். உணவிற் பருமனை கூட்டி உண்ணும் அளவை குறைக்கும். Brown Rice, Papaw, Cauli flower, Carrots.
தவறாமல் 8-10 குவளை நீரை அருந்துங்கள்
உணவு அட்டவணையைத் தயாரித்து அதன்படி செயற்பட தொடங்குங்கள். உங்கள் உடல் நிறை, உணவுப் பழக்கவழக்கம் என்பவற்றில் எவ் வேளையும் விழிப்பாக இருக்க உணவு நாள் குறிப்பினைப் பேணும் பழக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற அளவில் உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்து செய்ய ஆரம்பியுங்கள். யோகாசனப் பயிற்சிகளும் சிறந்தவை. அன்றாட வீட்டு வேலைகளை செய்யுங்கள். சிறிய தூரங்களுக்குப் போக வேண்டுமெனினும் சைக்கிளைப் பயன்படுத்துங்கள்.
உங்களின் இறுதித் தெரிவாக ஏராளமான நிறை குறைக்கும் சிகிச்சைகளும், அறுவைச் சிகிச்சை முறைகளும் உள்ளன. ஆனால் அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாவீர்கள். நிறை குறைக்கும் மாத்திரைகள் மைய நரம்புத் தொகுதியையோ, இதய வால்வுப் பிரச்சினைகளையோ ஏற்படுத்தலாம்.
ஏன் நீங்கள் அவ்வாறான செலவு அதிகமான, பக்க விளைவுகள் உள்ள தெரிவுகள் வரும்வரை காத்திருக்க வேண்டும். இன்றே உங்கள் நிறை குறைக்கும் நடைமுறைகளை ஆரம்பியுங்கள்.
பி.திலீபன்,
மருந்துவபீட மாணவன்