நீரிழிவு நோய்க்கான மருத்துவத் தாவரம்
இது யாழ்ப்பாணத்தில் பல வீடுகளில் நீரிழிவு நோயாளர்களால் மருத்துவ தேவைக்காக வளர்க்கப்பட்டு வருவதுடன் நீண்டகாலமாக இலங்கையில் தமிழ், சிங்கள சமூகத்தினால் இலைக்கறி வகையாக பயன்படுத்தப்படுகின்றது. பிரதானமாக நீரிழிவு நோயாளர்களினால் வறையாகவோ, சம்பலாகவோ அல்லது பச்சையாக மென்று விழுங்கவோ பயன்படுத்துகின்றனர். இம் மூலிகை தொடர்பாக பல்வேறு அபிப்பிராயங்கள் மக்கள் மத்தியில் இருந்தாலும் அதன் நன்மையான விளைவுகள் பற்றியோ பாதுகாப்புத்தன்மை பற்றியோ சரியானதும் போதுமானதுமான அறிவு எம்மத்தியில் இல்லை . சிறுகுறிஞ்சா இலை இலங்கையில் மிக நீண்டகாலமாக இலைக்கறி வகையாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஆதாரமாக 1846-1850 இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் காலனித்துவ ஆட்சியின் 5 ஆம் காலனித்துவ செயலராக இருந்த “சேர் ஜேம்ஸ் எமேர்சன்” எழுதிய இலங்கை பற்றிய நூலில் சிறுகுறிஞ்சா இலையானது அவிக்கப்பட்டு மக்களினால் உணவாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ குணாதிசயங்களைக் கொண்ட சிறுகுறிஞ்சா ஆசியா பகுதியில் மிக நீண்டகாலமாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும்.
நூற்றாண்டு மூலிகை
2000 ஆண்டுகளுக்கு மேலாக சித்த வைத்தியர்கள் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து உற்பத்திக்கு சிறுகுறிஞ்சாவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதும் இலங்கையின் பல பாகங்களிலும் அமைந்துள்ள அரச சித்த, ஆயுர்வேத வைத்திய நிலையங்களில் நீரிழிவு நோய்க்கான மருந்தாக சிறுகுறிஞ்சாவினை பிரதான ஆக்கப்பொருளாகக் கொண்ட மது மேகசூரணமே பயன்படுத்தப்படுகின்றது. சித்தமருத்துவத் துறையால் மருந்தாக பல நூறு வருடங்களாக பயன்படுத்தப்படும் சிறுகுறிஞ்சா நீரிழிவு நோயாளிகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் தெடர்பான மருத்துவ ரீதியான ஆய்வுகள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1930 ஆம் ஆண்டளவில் விலங்குகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் சிறுகுறிஞ்சா குருதியில் குளுக்கோசின் அளவைக் குறைப்பதுடன் இருதயத்தையும் குருதிச்சுற்றோட்டத் தொகுதியையும் தூண்டி தொழிற்பட வைப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஆய்வுகள்
அண்மைக்காலமாக சிறுகுறிஞ்சா சம்பந்தமாக நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இது குருதியில் குளுக்கோசின் அளவைக் குறைப்பதுடன் கொலஸ்ரோலின் அளவையும் உடல் நிறையையும் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சிறு குறிஞ்சாவும் நீரிழிவு நோயும் சம்பந்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் நல்ல பல விளைவுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் இவ் ஆய்வுகள் அனைத்தும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கமைய மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பன்னாட்டு ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கமைவாக ஒரு மருத்துவ ஆய்வு யாழ்.போதனா வைத்தியசாலையின் சலரோக மையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வைத்தியதுறையை சார்ந்த அனுபவம் வாய்ந்த மூத்த நிபுணர்களின் குழாம் ஒன்றினால் ஆரம்பிக்கப்படவுள்ள இவ் ஆய்வில் யாழ்.போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் வைத்திய கலாநிதி.சி.சிவன்சுதன் (பொதுவைத்திய நிபுணர், யாழ்.போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி திருமதி. வை.கேசவன் (இரசாயன நோயியல் நிபுணர், யாழ்.போதனா வைத்தியசாலை) மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த உயிர் இரசாயனவியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் பீடாதிபதியுமாகிய கலாநிதி.ச.பாலகுமார், மருந்தியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய வைத்திய கலாநிதி திருமதி. தி.சு.நவரட்ணராஜா, சமுதாய மருத்துவத்துறையின் மூத்த விரிவுரையாளர் வைத்திய கலாநிதி. இ.சுரேந்திரகுமாரன் மற்றும் புத்தூர் ஆரம்ப வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கார்த்திகேசு குலநாயகம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இவ் ஆய்விற்கான செலவினமாக பல மில்லியன் ரூபாவினை இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை ஊக்குவித்து வரும் ஸ்தாபனங்களில் ஒன்றாகிய தேசிய ஆராய்ச்சி சபை வழங்கவுள்ளது. சிறுகுறிஞ்சா சித்த மருத்துவத் துறையால் மருந்தாக்கத்துக்கான ஒரு மூலிகையாக மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்தபோதும் ஒரு உணவுப்பொருளாக ஒழுங்காக ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படுவதில் உள்ள நன்மையான மற்றும் தீமையான விளைவுகள் பற்றிய ஓர் ஆய்வாக இது அமையவுள்ளது. முடிவுகள் நன்மையானவையாக அமையுமாயின் நீரிழிவு நோயாளர்கள் அனைவரையும் சிறு குறிஞ்சாவைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்க இது உதவும். வீடுகளில் தாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய்க் கான மருந்துச் செலவினை பெருமளவில் குறைக்க உதவும். தீமையாக அமையுமாயின் உணவுப் பொருளாக இதனைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களுக்கு எடுத்துக்கூற உதவும்.
வரலாற்றுத் திருப்பம்
யாழ்ப்பாண ஆங்கில மருத்துவத்துறையின் வரலாற்றில் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கமைவாக அமைந்த முதலாவது பெரிய ஆய்வாக இது கொள்ளப்படலாம். எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட, நீரிழிவு நோயாளர்கள், ஆய்வு சம்பந்தமான சகல விடயங்களும் விளங்கப்படுத்தப்பட்டு, ஆய்வின் நன்மை , தீமைகள் எடுத்துக் கூறப்பட்டு, அவர்களின் பூரண சம்மதத்துடன் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு அவர்களின் வழமையான மருந்துகளுக்கு மேலதிகமாக சிறுகுறிஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் ஒரு நாளுக்கு ஒரு கோப்பை வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்கள் மிகவும் கவனமாக 6 மாத காலத்துக்கு அவதானிக்கப்படுவார்கள். நாள்தோறும் அருந்தப்படும் இத் தேநீரானது சிறுகுறிஞ்சாவினை வறையாகவோ அல்லது சம்பலாகவோ உண்ணும் போது ஒருவர் உட்கொள்ளும் சிறுகுறிஞ்சாவின் அளவிலும் பார்க்க மிக மிகக் குறைந்த அளவானதும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரமும் புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட விபரங்கள் மூலமாகவும் தீர்மானிக்கப்பட்ட உலர் நிறையுடைய இலையில் இருந்து தயாரிக்கப்படும்.
நோயாளர்களின் குருதியில் குளுக்கோசின் அளவு, அவர்கள் வழமையாகப் பயன்படுத்தும் மருந்துகளில் ஏற்படும் அளவுமாற்றம், குருதியில் கொலஸ்ரோலின் அளவு, நோயாளர்களின் உடல் நிறை என்பவற்றுடன் குருதியமுக்கம் என்பன ஆராயப்படவுள்ளன. இவ் ஆய்வின் முடிவுகள் நன்மையானவையாக அமையுமாயின் அது எமது மக்களுக்கு ஒருவரப்பிரசாதமாக அமைவதுடன் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆய்வுக்குழுவின் சார்பாக,
மருத்துவர்.கார்த்திகேசு குலநாயகம்.