குருதிச் சோகை என்றால் என்ன? அதற்கான காரணங்கள் எவை? அது குணமாக கூடிய நோயா? இவ்வாறான பல்வேறுபட்ட கேள்விகள் எம்முன்னர் பரந்து விரிந்து நிற்கின்றன. குருதிச்சோகை என்றால் குருதியில் காணப்படும் செங்குழியங்களில் அல்லது குருதி நிறப் பொருள் ஹீமோகுளோபினில் (Hb) ஏற்படும் குறைபாட்டு நிலையாகும்.
இந்த நோய் அறிகுறிகளாக, உடல் களைப்பு, சோர்வுலு அதிக வேலை செய்ய முடியாது இருத்தல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சுவலி, உடல் வெளிறுதல் ( கண் மடல் மற்றும் நாக்கு) என்பவற்றை குறிப்பிடலாம். இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் இதற்குரிய சிகிச்சையை தொடங்க முன் அதற்கான காரணத்தை கண்டுபிடித்தல் அவசியமாகும்.
இது ஒருகுறைபாட்டு நோய் அல்லது பிறப்புரிமை அலகில் ஏற்படும் பிறள்வு காரணமாக உண்டாகலாம். குறைபாட்டினால் ஏற்படும் நோயை குணமடைய செய்வதுடன் மற்றையவற்றை தொடர்ச்சியான சிகிச்சை மூலம் நிவர்த்தி அல்லது ஈடு செய்ய முடியும்.
பொருத்தமற்ற போசாக்கு முறை
குருதிச்சோகை ஏற்படுவதற்கான காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம். வறுமை மற்றும் போசாக்கு சம்பந்தமான அறிவின்மையினால் செங்குழியங்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையான புரதம், இரும்புச் சத்து. மற்றும் விற்றமின்கள் ( விற்றமின் B12, போகிக்கமிலம்) என்பவற்றை போதியளவு உட்கொள்ளாமை காரணமாகும். இதனை இந்தப் போசணைப் பதார்த்தங்கள் அதிகளவு உள்ள பச்சைக் காய்கறிகள், பழவகைகள், மீன், இறைச்சி, கீரை வகைகள், பருப்பு, பயறு, சோயா என்பவற்றை கணிசமான அளவு உண்பதன் மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும்.
மிகையான குருதி இழப்பு
நீண்ட நாள்களாக தொடரும் குறைந்தளவான குருதி இழப்பு அல்லது சடுதியாகஏற்படும் மிக குருதி இழப்பு குருதிச் சோகை நோயை ஏற்படுத்தும். மூல நோய் மற்றும் மலச்சிக்கல் மூலம் மலத்துடன் குருதி வேளியேறுதல், குடற் புண் மற்றும் குடற்புண்ணை ஏற்படுத்தக்கூடிய வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ச்சியாக பாவித்தல், உணவுக் கால்வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் குருதி இழப்பை ஏற்ப்படுத்தும், பெண்களில் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அதிக குருதி இழப்பு, மகப்பேறு மற்றும் அறுவைச் சிகிச்சை மூலம் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டு குருதிச் சோகை ஏற்படலாம்.
செங்குழியங்கள் சிதைவடைதல்
செங்குருதிக் கலங்கள் உடலில் உள்ள குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் சிதைவடைவதால் குருதிச்சோகை ஏற்படலாம். குருதியில் ஏற்படும் சில பரம்பரை நோய்கள் சில தொற்று நோய்கள் மற்றும் சில மருந்துகள் போன்றன செங்குழியத்தை காலத்துக்கு முன்னரே சிதைவடையச் செய்யும் (120 நாள்கள்) இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியான சிகிச்சை, விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் என்பன இன்றியமையாதவை ஆகும்.
சி.சிறீசகானா
மருத்துவர்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை