அகஞ்சுரக்கும் தொகுதியியல் வரையறை
எமது உடலில் பல வகையான ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அந்த வகையிலே இவை அனைத்தையும் ஒருசேர இணைத்து ஒட்டு மொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதியென வரவிலக்கணப்படுத்துகிறோம். இந்த அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் நோய்கள் தொடர்பில் ஆராயும் பிரிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrnology) என அழைக்கப்படுகிறது.
இது பொது மருத்துவத்தின் (General medicine) முதன்மைப்பிரிவாக கருதப்படுகின்றது. தவிர, இன்றைய காலச்சுழற்சியின் வேகத்தில் பொது மருத்துவத்துறையானது மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டு சிறந்த முறையில் இயங்கு நிலை பெறுகிறது. அங்கு சிகிச்சை முறைகள் சிறப்புற இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஓமோன் சுரப்பு தொடர்பில் ஏற்படும் நோய்கள்
எமது உடலில் பலவகையான ஓமோன் சுரப்புக்கள் (Endocrine glands) உள்ளன. சதையியில் ஏற்படுகின்ற இன் சுலின்சுரப்பு குறைபாடுகாரணமாக நீர்ழிவு நோய் ஏற்படுகின்றது.அதே போன்று கழுத்துப்பகுதியிலுள்ள தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைகளால் “தையிரொயிட் குறைபாட்டுநிலை மற்றும் தைரொயிட் மிகைச்சுரப்பு நிலை ஏற்படுகிறது. மூளையில் உள்ள கபச் சுரப்பியே முதன்மையான ஓமோன் சுரப்பியாக விளங்குகிறது. இதுவே உடலில் அநேகமான ஓமோன் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றது. கபச்சுரப்பியில் (pituitary gland) அல்லது அதற்கு அருகிலேற்படும் கட்டிகளால் கபச்சுரப்பியானது தனது செயற்பாட்டை இழந்துவிடும். இதன் காரணமாகவும் பல வித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக கபச்சுரப்பியில் ஏற்படும் கட்டியினால் அல்லது அந்தக் கட்டியானது அருகிலுள்ள பகுதிகளைத் தொடுவதனால் புறோலக் ரீன் (prolactin) என்ற ஒமோன் சுரப்பு உடலில் அதிகரிக்கின்றது. இதனால் பெண்களில் மாதவிடாய் பிரச்சினைகள் குழந்தைப்பேறு பாதிப்படைதல்,மார்பகக் காம்பினுடாகப் பால் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதே போன்று ஆண்களிலும் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவ்வாறான கட்டிகளால்தலை வலி, வாந்தி மற்றும் பார்வைக் குறைபாடு என்பன ஏற்படுகின்றன.
சிலவகையான கபச் சுரப்பிக் கட்டிகள் ஓமோன்களை மேலதிகமாகச் சுரக்கின்றன. இதனால் பலவகையான ஓமோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன, உதாரணமாக உயர ஓமோன் அதிகமாக சுரக்கும் சந்தர்ப்பத்திலே உடல் அவயங்களில் பருமன் அதிகரித்து Acromegaly என்ற நோய் ஏற்படுகிறது. கபச் சுரப்பியின் தொழிற்பாடு குறையும்போது அல்லது அதுசெயலிழக்கும் போது உடலில் பல வகையான ஓமோன்குறைபாட்டுநோய்கள் ஏற்படுகின்றன. காலம்தாழ்த்திப்பூப்படைதல் (Delayed pubertu) அல்லது குறைந்த வயதில் பூப்படைத்தல் போன்றன ஓமோன் தொடர்பான பிரச்சினைகளே.
எமது உடலிலுள்ள கல்சியம்போன்ற பலவகை யான கனியுப்புகளின் தொழிற்பாட்டைக் கட்டுப்படுவதும் செயற்பாட்டையும் ஓமோன்களே மேற்கொள்கின்றன. எலும்பு தேயும் நோய் (Osteoporosis) என்பது அகஞ்சுரக்கும் தொகுதியியலில் உள்ளடங்கும் முக்கியமான பிரச்சினையாக விளங்குகிறது. சிறுபிள்ளைகள் உயரம் குறைவாக இருப்பதற்கு உயரஒமோன் (Growth hormone) ஒரு காரணமாக அமைந்தவிடுகிறது. இதனை நாம் கண்டறியும் சந்தர்ப்பத்திலே ஓமோன் சிகிச்சையின் மூலம் சாதாரண உயரத்தை இந்தச் சிறுவர்கள் அடையலாம்.
ஓமோன் பிரச்சினைகளை கண்டறியும் வழிமுறைகள்
ஓமோன் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை நோயாளியொருவரோ அல்லது அவரது குடும்ப மருத்துவரோ கண்டறியும் போது ஒமோன்கள் தொடர்பான சிகிச்சைநிலையத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தல் மிகச் சிறந்த சிகிச்சை நடைமுறை. ஓமோன் தொடர்பான சுரப்பக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அவற்றை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும்.
ஓமோன் தொடர்பான பிரச்சினைகளின் கண்டறிவு
மக்கள் மத்தியில் இந்த நோய்நிலை தொடர்பில் விழிப்புணர்வு சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகின்றது. இவ்வாறான நோய்களுக்கு சிகிச்சைகள் உள்ளன என்றும் இவற்றைச் சிகிச்சைமூலம் குணமாக்க முடியும்மென்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. நீரிழிவு மற்றும் பல வகையான ஓமோன் பிரச்சினைகள் ஏற்படுவதில் உடற்பருமன் அதிகரிப்பும் முக்கிய பங்காற்றுகிறது. தவிர, நாம் இன்று பின்பற்றுகின்ற பிழையான மேலைத்தேய (Western) துரித உணவு வகைகளின் (Fast food) பழக்கவழக்கங்களும் உடற்பயிற்சியற்ற (sedentary) வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வழிமுறை
அகஞ்சுரக்கும் தொகுதியியல் சிகிச்சை நிலையமானது யாழ் போதனா மருத்துவமனையின் நீரிழிவு நிலையத்தில் மிக அண்மைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இப் பிரிவானது மிகச்சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றது. வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கான ஒரேயொரு ஓமோன் சிகிச்சை நிலையமாக இது திகழ்கிறது. ஆக, ஓமோன் தொடர்பான பிரச்சினை மற்றும் நோய் உள்ளவர்கள் இங்கு வருகை தருவதன் ஊடே சிறப் பான மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும்.
மருத்துவர்.M.அரவிந்தன்.
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.