இன்றைய காலகட்டத்தில் வயது மற்றும் பால் வேறுபாடின்றி அநேகமானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வயிற்றுப்புண் அல்லது இரைப்பை புண் அமைந்துள்ளது.
இரைப்பையில் ஏற்படும் உறுத்தல்
சரியான நேர கால அளவிடையில் உணவருந்தா விடின் இரப்பைச் சாற்றிலுள்ள அமிலத்தன்மை இரப் பைச்சுவரை உறுத்துவதால்புண்ஏற்படுகிறது. இதுவே வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான பொதுவான காரணமாகக்கொள்ளப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு சமிபாடு அடைவதற்கு இரைப்பையில் ஹைறோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுகிறது. இந்த நேரங்களில் உணவு உள்ளெடுக்காவிடின் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. மேலும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும்போதும், மூளையின் தூண்டுதலால் சில நொதியங்கள் சுரக்கப்படும். இதனூடேயும் இந்த நிலை ஏற்படலாம். இரைப்பைச் சுவரில் உறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ASprin மற்றும் வலிநிவாரணிகள், விற்றமின்சி போன்றவையும், சில பக்ரீறியா தொற்றுக் காரணிகளும் வயிற்றுப் புண் ஏற்படக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவை ஏனைய சில நோய்நிலைகள் போல பரம்பரை நோய் அல்ல. வாழ்க்கைநடைமுறைகள், பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. மது அருந்துதல், புகைப்பிடித் தல், வாயுக்களால் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், எண்ணெய் கலந்த உணவு வகைகளின் பாவனை போன்றவற்றால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.
நோய் அறிகுறியும் தாக்கமும்
வலி, வயிறு எரிவதுபோன்ற கடுமையான வலி, நெஞ் சுப் பகுதி எரிவு, சிலவேளைகளில் வாந்தியுடன் குருதி வெளியேறுதல், கறுப்பு நிற மலம் வெளியேறல், உணவு உண்டபின் நோ குறைவடைதல், பசியில் மாடுபாடு, குமட்டல், உடல்நிறை குறைவடைதல் மற்றும் மன நிலைமாற்றம் என்பன வயிற்றுப்புண்நிலையின் அறிகுறிகளாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருத் துவப்பரி சோதனைமூலம் நோய் அவதானம் கொள்ளப்பட்டு சரியான முறையில் மருந்துகளை உள்ளெடுப்பதன் மூலம் வயிற்றுப் புண்ணைக் குணமாக்கலாம்.
நீண்ட நாள்களுக்கு வயிற்றுப்புண் நிலை காணப்படின் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் உறுத்தலால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும். சில பக்ரீரியாக்களின் தொற்றால் ஏற்படும் வயிற்றுப்புண் நிலைக்கு ரிப்பிள் திரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பெரிய பாதிப்பு ஏற்படின் அறுவைச் சிகிச்சைக்குரிய பரிந்துரை வழங்கப்படும். நீண்டநாள் வயிற்றுப்புண் நிலை தொடரின் இரைப்பை அல்லது குடலில் துவாரம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.
நோய் ஆற்றுப்படுத்தல் ஆலோசனை
மேலும், நாளாந்த வாழ்வில் அதிக காரமான உணவுவகை களை உண்பதை தவிர்க்க வேண்டும். நேரகாலம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். இரவு உணவினை அவசியம் உட்கொள்ளவேண்டும்.
இயலுமாயின் நித்திரைக்குச்செல்ல முன்னர்நீராகாரம் சிறந்த செயல்நிலை. அதிகாலையில் வெறும் வயிற்றுடன் வேலை செய்யாமல் அதிகளவு தண்ணிரை உட்கொள்ளவேண்டும். கொழுப்புக் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனைப்படி இரைப்பை உறுத்துதலிருந்து பாதுகாக்கும் மருந்துகளையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துலை முற்றாகத் தவிர்க்க வேண்டும். உணவு உட்கொண்டவுடன்நித்திரைக்குச்செல்லக் கூடாது.
வயிற்றுப்புண்ணுக்குரிய மருந்துகள், பாணிகளை உணவு உட்கொள்ள முன்னர் எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உணவுசமைத்தல் முறைபற்றி தெரிவித்தல் நல்லது. மனரீதியில் மகிழ்வாக இருக்கவேண்டும். நண்பர்களுடன் உரையாடல் போன்றவற்றில் ஈடுபட்டு நேரத்தைக் கழிக்கலாம்.
மேலும் உணவை வேகமாக உட்கொள்ளாமல் ஆறுதலாக போதியளவு நேரம் எடுத்து உட்கொள்ள வேண்டும். இதன் போது எல்லா இரசாயன செயற்பாடுகளும் சரியாக இடம்பெறுவதுடன், நிறை ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவை உள்ளெடுத்து நோயின்றி வாழ்வோம்.
பத்மராசா பத்மநிரூபன்
தாதிய உத்தியோகத்தர்,
சத்திரசிகிச்சைப்பிரிவு
யாழ் போதன வைத்தியசாலை.