மதுவுக்கு அடிமையானவர்கள், மதுவின் நச்சுத்தன்மை நீங்கி, தொடர்ந்தும் மதுவை உள்ளெடுக்காத ஒருநிலையில் அவர்கள் பலவிதமான உடல் முறைப்பாடுகளையும், உளவியல் தாக்கங்களையும் வெளிக்காட்டலாம்.
உண்மையில் இவ்வாறான முறைப்பாடுகளிற் பல அவர்கள் மதுவினைப் பாவித்துக் கொண்டிருக்கும் போதே ஏற்பட்டிருக்கும். ஆயினும் மதுவானது ஒருவரை மயக்கி அவரது புலன்களைத் திரிபுபடுத்தி நோவையும் வலியையும் தெரியமாற் செய்வதனால் மதுவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவர் அவ்வேளைகளில் தனது மனக்கவலைகள், பிரச்சினைகள் பற்றி உணராது, சந்தோஷமாக இருந்தது போன்ற உணர்வைப் பெற்றிருப்பார்.
ஆனால் மதுவிலிருந்து வெளிவரும் போது உடலில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த பல பிரச்சினைகள் வெளித்தெரியத் தொடங்கும். அத்துடன் ஒருவருடைய மதுபாவனையினால் அவருக்கு குடும்பம். வேலை செய்யும் இடம் மற்றும் சமூகம் போன்ற இடங்களில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளையும் அவர் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவர். இந்தப் பிரச்சினைகளை அவர் உடல் நோய் அறிகுறிகளாகவோ, மனக் கலக்கங்களாகவோ வெளிப்படுத்தலாம்.
உடலில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பு அவசியம். அதுபோல் உள்ளத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஆதரவான உளவளத்துணையும், பிரச்சினை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதும், மனதைச் சாந்தமானதொரு நிலையில் வைத்துக்கொள்வதும் அவசியமானது.
பொதுவாக பலர் குடிப்பதன் மூலம் தமது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயலுவார்கள். அவர்கள் பார்த்த முன்னுதாரணங்களும், சினிமாக்களும் இதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் குடிப்பதனால் எமது பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் குடியைவிட்டு வாழும் போதுதான் ஒருவர் நிதானமாகச் சிந்தித்து தேவைப்பட்டால் பொருத்தமான உதவிகளைப் பெற்று தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014