மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. சூழல் காரணிகளால் ஏற்படுவது. இதன்போது உடலுக்குத் தேவையான சக்தித் தொகுப்பு கூட்டப்படுகின்றது. இது உடற்றொழிலியல் எல்லையைத் தாண்டும்போது நோய்க்காரணியாக அமைகின்றது.
இதன்போது மூளையானது மன உளைச்சலிற்கான சில ஹோர்மோன்களை விடுவிப்பதன்மூலம் உடலின் சக்தித் தொகுப்பு அதிகரிக்கப்படுவதன் விளைவாகக் குருதிக் குளுக்கோஸ், இதயத்துடிப்பு வீதம், குருதியமுக்கம், தசைத் தொழிற்பாடு என்பன அதிகரிக்கப்படுகின்றன. இதனால் உயர்குருதியமுக்கம், சலரோகம், அல்சர் போன்ற நோய்த் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.
இதன் அறிகுறிகளாக தலையிடி, வயிற்றுக் கோளாறு, நித்திரைக் குழப்பம், உயர்குருதி அமுக்கம், வாய் உலர்தல், அதிகரித்த தடவை சலம் வெளியேறல், கோபம், உடல் உளத் தாக்கங்கள்,பாரிசவாதம் என்பன அடங்கும்.
முகாமைத்துவம்
மன அழுத்தம் அவதானிக்கப்படின் அதனைக் கவனிக்காமல் விடாது அதற்கான காரணத்தையும், அதற்கு உடல் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதையும், அதனை எவ்வாறு தவிர்க்கமுடியும் என்பதையும் அவதானிக்க வேண்டும்.
இதன்போது மிகவும் ஆறுதலாக ஆழமான பெருமூச்சு எடுத்து விடுவதன் மூலம் அதிகரிக்கும் இதயத் துடிப்பு சுவாச வீதத்தைக் கட்டுப்படுத்தலாம். மனதுக்கு அமைதியாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடல், பிடித்த விளையாட்டுக்கள் விளையாடல், இதமான இசை இரசித்தல், சித்திரம் வரைதல், ஆன்மிகத் துறைகளில் ஈடுபடல் போன்றனவும் மிகவும் சிறந்தவை. போதிய அளவு நித்திரை அவசியம்.
மன அழுத்தம் ஏற்படுத்துகின்ற காரணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது அழுவதன் மூலமோ, கோபத்தை வெளிக்காட்டுவதன்மூலமோ வெளிப்படுத்துதல் சிறந்தது.
நீண்டநேரம் ஈடுபடும் வேலைகளில் இடையிடையே இடைவேளை எடுத்துக்கொள்ளுதல், அந்த நேரங்களில் மன உளைச்சலை, களைப்பைப் போக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடல் சிறந்தது. அத்துடன் செய்யும் வேலைகளில் நிதானத்துடன் பதற்றமின்றி ஆறுதலாக இலகுவான முறையில் ஈடுபடுதலுடன் நேர அட்டவணையின் பிரகாரம் ஈடுபடுதலும் மிகவும் சிறந்தது.
மது அருந்துதல், புகைப்பிடித்தலைத் தவிர்த்துக் கொள்வதுவும் மனஉளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழிகளில் ஒன்றாகும்.
எஸ்.சோபிகா,
மருத்துவ பீட மாணவி