உலகமயமாதலின் ஊடாக மனித வாழ்க்கையில் பல்வேறுவகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மருத்துவத்துறையின் வளர்ச்சிப்போக்கு பிரமிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருக்கின்ற அதேநேரம், உலகையே உலுக்கும் அளவிற்கு நோய்களின் தோற்றமும் வளர்ச்சியும், உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டே இருக்கின்றன. இந்த வகையில் மனித வாழ்க்கை முறையில் தவறான நடத்தைகளின் விளைவு மற்றும், சமநிலையற்ற சுகாதார பழக்க வழக்கங்களினால் மனித வாழ்வை நிர்க்கத்திக்கு உள்ளாக்குகின்ற நோய்களில் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது.
பாரிசவாதம் (Stroke)
மனித மூளைக்கான இரத்தத்தையும், ஒட்சிசனையும் வழங்குகின்ற இரத்தக் குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதனால் பாரிசவாதம் ஏற்படுகின்றது. இரத்தக்குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதனால் மூளைக்கலங்களுக்கான ஒட்சிசன் விநியோகம் இரத்த ஒட்டமும் தடைப்படுகின்றன. இதனால் கலங்களுக்கு தேவையான ஒட்சிசன் குறைவடைந்து மூளைக்கலங்கள் தொழிற்பாட்டை இழந்து சில நிமிடங்களில் மூளைக்கலங்கள் இறந்து விடுகின்றன. இதன் விளைவாக அந்தப்பகுதி மூளைக் கலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற உடல் தொழிற்பாடுகள் முற்றாக செயலிளந்து விடுவதளையே பாரிசவாதம் என்கின்றோம். இந்த நோயின் விளைவாக உடற்தொழிற்பாடுகளில் முக்கியமான ஐந்து குழப்பங்கள் ஏற்படுகின்றன.
- உடல் அசைவுகளை கட்டுப்படுத்தல்
- பேச்சு, மொழி பாவனை மற்றும் புரிந்து கொள்ளுதல்
- ஞாபகசக்தி மற்றும் கிரகித்தல்
- உணர்ச்சியற்ற தன்மை
- உணவு விழுங்குதல் தொடர்பான பிரச்சினை
பாரிசவாதத்துக்கு பின்னரான பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சை
பாரிசவாதம் ஏற்பட்டு அவசர சிகிச்சை பூர்த்தியடைந்தவுடன் இரண்டாம் கட்டமாக பாரிசவாத்துக்கு பின்னராக மறுவாழ்வு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையான நரம்பியல் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கு இணைவாக ஒரு குழுசார் தொழிற்பாடாக ( Multidisciplinary team approch) கட்டியெழுப்பப்படுகின்றது. இந்தக்குழுவிலே விசேடத்துவம் வாய்ந்த நரம்பியல் வைத்திய நிபுணர், உடற்பயிற்சி நிபுணர், பேச்சு மாற்றம், மொழிச்சிகிச்சையாளர், மனநோய் வைத்திய நிபுணர், மறுவாழ்வு சிகிச்சைக்கு பயிற்றப்பட்ட தாதியர், தொழில்சார் பயிற்சி நிபுணர், சமூக நல உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போன்றோர் தமது சேவைகளை நோயாளிக்கு வழங்குவதில் விசேடத்துவம் பெற்று திகழ்கின்றனர்.
பாரிசவாதத்திற்கு பின்னர் தொடர்பாடல் மற்றும் உணவு உட்கொள்ளுதல் பொதுவான பிரச்சினையாக காணப்படுகின்றது. பாரிசவாதம் ஏற்பட்டவர்களுக்கு காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினைகள் மற்றும் உணவை உட்கொள்ளுவதில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தேவையான சிகிச்சை முறைகளை விசேடத்துவம் வாய்ந்த பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளரிடம் வைத்தியசாலைகளிலும் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்பாடல் பிரச்சினைகள் மற்றும் சிகிச்சை திட்டமிடல்
பாரிசவாத்தின் பின்னரான தொடர்பாடல் பிரச்சினைகளினால், தகவல்களை விளங்கிக் கொள்ளுதல், வெளிப்படுத்துதல், தனிநபருடைய சமூக தொடர்புகள், தனித்துவம் மற்றும் சுய நம்பிக்கை என்ப நெருக்கடிகளுக்கு உட்படுகின்றன. இவை அன்றாட வாழ்வில் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு தடையாகவும் அமைகின்றன அவையாவன.
- மொழியை விளங்கிக் கொள்ளுதல் அல்லது கிரகித்துக் கொள்வதில் காணப்படுகின்ற பிரச்சினைகள் (Receptive Aphasta)
- பேசுதல் மற்றும் சரியான சொற்களை சொல்வதில் காணப்படுகின்ற பிரச்சினைகள் ( Expressive Aphasta)
- வாய் பகுதியில் உள்ள தசைகளின் பலவீனம், மற்றும் குறைந்த இயக்க திறன்களின் காரணமாக சொற்களை ஒழுங்கமைய சொல்லுதல் மற்றும் பேச்சு சத்தங்களில் தெளிவுத்தன்மை இழந்து காணப்படுகின்ற பிரச்சினைகள் ( Dysorthria)
- பேச்சுக்கு தேவையான தசை இயக்க அசைவுகளை சரியாகவும், ஒழுங்கு வரிசையாகவும் அசைப்பதில் அல்லது உச்சரிப்பதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் (Dyspraria)
- எழுத்துக்களை வாசித்தல் மற்றும் எழுதுவதில் உள்ள பிரச்சினைகள்
மேற்கூறப்பட்ட பாரிசவாத்திற்கு உட்பட்ட நோயாளியை முறையான வித்தில் உரிய செயன்முறைகளினூடாக கணிப்பிட்டு மேற்கூறப்பட்ட பிரச்சினைகளில் சரியான பிரச்சினைகளை பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர் இனம் கண்டு அதற்கமைய நோயாளியினுடைய தொடர்பாடல் ஆற்றலை மேம்படுத்த விசேடத்துவம் வாய்ந்த பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நுட்ப முறைகளை செயல்முறை படுத்துவதுடன், மாற்று விதமான தொடர்பாடல் (AAC) வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவார். இதனூடாக பாரிசவாத நோய்நிலைக்கு உட்பட்டவர் தனது நாளாந்த செயற்பாடுகளை சமூகத்தில் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும்.
உணவு / ஆகாரங்கள் விழுங்குவதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிகிச்சை திட்டமிடல்
பாரிசவாத நோய்க்கு உட்பட்டவர்களில் 65 வீதமதானவர்களுக்கு உணவை விழுங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப் பிரச்சினை சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட்டாத பட்சத்திலும் மற்றும் முறையான சிகிச்சை திட்டமிடல் அனுகுமுறைகள் இடம்பெறாத நிலையில் நோயாளிக்கு போசனை மட்ட குறைபாடு, நிமோனியா, மற்றும் இதர அங்கவீன நிகைள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
பாரிசவாதம் ஏற்பட்டதன் விளைவாக, உணவை விழுங்குதல், மற்றும் பருகுதல் தொழிற்பாட்டினை மேற்கொள்கின்ற தசைகளுடைய இயக்கத்துக்கு தேவையான விலமை (Strength) மற்றும் ஒருங்கிணைப்பு என்பன குறைவடையத் தொடங்குகின்றன. இதன் விளைவாக உணவை விழுங்குவதிலும், ஆகாரங்களை பருகுவதிலும் பிரச்சினைகள் மற்றும் தாமதம் ஏற்படுகின்றது. மேலும் விக்கல், இருமல், போன்ற அபாயகரமான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏனெனில் இவை சுவாசப்பை தொற்று நோய் ஏற்படுவதற்கும் பிரதானமான காரணமாக அமைகின்றன. ஏனைய அறிகுறிகளாவன
- தொண்டையினுள் உணவு அடைத்தல் அல்லது தங்குதல் போன்ற உணர்வு
- உணவு உண்ணும் போதும் ஆகாரங்கள் அருந்தும் போதும் கஷ்டப்பட்டு மெதுவாக விழுங்குதல்.
- உணவு அல்லது ஆகாரங்கள் வாயிலிருந்து வெளியே வடிதல்
- உணவு உட்கொள்ளும் போது அல்லது உட்கொண்ட பின்னர் கரகரப்பான சத்தங்கள் ஏற்படல்
- வாயினுள் இரு கரைப்பகுதிகளினுள் உணவு தங்குதல்
- உணவு மற்றும் ஆகாரங்கள் விழுங்கும் பொழுது மூக்கினால் வெளிவருதல்
- வாய்ப்பகுதியினுடைய அசைவு மற்றும் இயக்கங்கள் மெதுவாக இருத்தல்
பாரிசவாதம் ஏற்பட்டு உணவு அல்லது ஆகாரங்களை விழுங்குவதில் பிரச்சினையுடையவர்கள் பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டியது இன்றியமையாததாகும். பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளர்கள் நோயாளிக்கு விழுங்குதல் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளளை சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான சிகிச்சை திட்டமிடல்களை மேற்கொள்வார்கள். ஆரம்பத்தில் water test மற்றும் video fluoroscopy test போன்ற பரிசோதனைகளினுடாக விழுங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினைகளை சரியான முறையில் அடையாளங்கண்டு கொள்ள முடியும்.
பரிசோதனைகள் மூலமாக விழுங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்க்கான சிகிச்சை முறைகளாக
- உணவுப் பதார்த்தத்தின் தன்மைகளை மாற்றி கொடுத்தல்
- உணவு உண்னும் போது முறையான இருக்கை சமநிலை முறைமையை பின்பற்றுதல்.
- உணவை விழுங்கும் பொழுது கழுத்தை நோயாளியின் தன்மைக்கு ஏற்ப சரியான முறையில் அமைத்து விழுங்குதல்,
- உணவை இலகுவாக விழுங்குவதற்கான நுட்ப முறைகளை கையாளுதல் மற்றும் வாய் தசைகளுக்கான பயிற்சி வழங்குதல்
- இலகுவாக விழுங்க கூடிய உணவுகளை பரிந்துரை செய்தல், இதன் மூலமாக புரையேறுதலை தடுக்கலாம்.
- நோயாளிக்கு அல்லது நோயாளியின் பாதுகாவலருக்கு நோயாளியின் பிரச்சினைகளை விளங்கும் வகையில் எடுத்துக் கூறுவதுடன் உணவு விழுங்கும் போதும், உட்கொள்ளும் போதும் எவ்வாறான உத்திகளை கையாள வேண்டும் என்பள பற்றி எடுத்துக் கூறுவதுடன் நாளாந்த பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையின் அவசியம் பற்றி எடுத்துக்கூறல்.
பாரிசவாத நோய் ஏற்பட்டு ஆரம்பகட்ட மருத்துவு சிகிச்சைகள் முடிவடைந்த பிற்பாடு உடனடியாக பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையினை பெற்றுக்கொள்றுகின்ற பட்சத்தில் நோயாளி தனது பேச்சு தொடர்பாடல் மற்றும் உணவு மற்றும் ஆகாரம் போன்ற வற்றை விழுங்குவதில் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கா தீர்வினை பெற்றுக்கொள்ள முடிவதுடன், நோயாளி தனது நாளாந்த வாழ்க்கை செயன்முறைகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள இயலுமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பாரிசவாதம் ஏற்பட்ட பின்னர் பேச்சு தொடர்பாடல் மற்றும் உணவு அல்லது ஆகாரங்களை விழுங்குவதில் தாதம் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டால் யாழ் போதனா வைத்தியாசலை மற்றும் பிரதான தனியார் வைத்திய சாலையில் உள்ள பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளரிடம் உரிய சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்வதன் மூலமாக பாரிசவாதத்திற்கு உட்பட்டவரின் வாழ்க்கை முறைமையினை தரமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றிமைக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
ப.கொளரிதரன்
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்
நரம்பியல் பிரிவு – B
யாழ் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்