இன்றைய நவீன, இயந்திரமயமான வாழ்வியலில் பலரது முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விளங்குவது இரப்பை அழற்சி (அல்சர்) என்பதாகும். அதாவது இரைப்பைச் சுவரில் ஏற்படுகின்ற அழற்சி அல்லது சீதமென்சவ்வின் சுரண்டலினால் இரப்பைச் சுவரின் போர்வை பாதிக்கப்படுதலாகும். இது நீண்ட நாள் செயற்பாட்டிலும், உடனடியாகவும் இடம்பெறலாம். கூடுதலாக அளவுக்கு மேற்பட்ட மதுபாவனை, புகைப்பிடித்தல், நீண்ட நாள் வாந்தி, மன அழுத்தம் போன்ற வற்றாலும், சில வகை மருந்துகளின் பக்கவிளைவாகவும் இரப்பை அழற்சி ஏற்படுகின்றது. மேலும் ஒரு வகை பக்ரீரியாதாக்கத்தினாலும் இரப்பை அழற்சி ஏற்படுவதாக அறியப்படுகின்றது. குருதிச்சோகை நிலையிலும் இரைப்பைச் சுவருக்குரிய போசனைக் குறைபாட்டினால் அழற்சி நிலை ஏற்படலாம். இரைப்பை அழற்சி நிலை முறையாகத் தீர்க்கப்படாவிடின், இது அதிகளவு இரத்தப்போக்குக்கு காரணமாகலாம்.
அதிகமாக இரைப்பை அழற்சிக்குரிய குணங்குறியாக வயிற்றுப்போக்கு, பசிகுறைவு, வயிறு நிறைந்தது போன்ற உணர்வு சமிபாடின்மை போன்ற உணர்வுகள் காணப்படுகின்றன. இரைப்பை அழற்சி நிலயில் அதன் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்குத் தீர்வு காண்பதன் மூலம் இதனைக் குறைக்கலாம். அந்தவகையில் பக்ரீரியா தொற்றினால் ஏற்பட்ட நிலைமை அதற்கு வைத்திய ஆலோசனையின் பேரின் குறிப்பிட்ட அளவுகளில் நேரம் தவறாது மருந்துகளை உட்கொள்ள வேண்டும். வயிற்றுச்சுவரில் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்ளும்போது அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும். எமது நாளாந்த வாழ்க்கை நடைமுறைகளை மருத்துவ உலகுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் மூலமும் இரைப்பை அழற்சி நிலையிலிருந்து பாதுகாக்கலாம்.
அதாவது மதுபாவனையை இயலுமான வரையில் குறைத்தல் அல்லது பாவனையை துண்டித்தல் நல்லது, மேலும் புகைத்தலை நிறுத்துதலும் இரைப்பைச் சுவரை பாதிக்கக்கூடிய இரசாயனப் பொருள்கள் மருந்துகளின் பாவனையை குறைத்தலும் அவசியம். மேலும் நாளாந்த சுகாதார நடவடிக்கைகளான கைகழுவுதல், உடற்சுத்தம், உணவுச்சுத்தம், உணவு உட்கொள்ளும் நேர இடைவெளி என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். போதுமான அளவு நீராகாரம் உள்ளெடுப்பது நல்லது. சுத்தமான மருந்து கலப்பற்ற பழங்கள் உட்கொள்ளல், வீட்டுத்தொட்டத்தில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை அதிகளவு உட்கொள்ளல் போன்றவற்றால் இரைப்பை அழற்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
உணவு உட்கொள்ளும் போது நிதானமாக போதியளவு நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும். இது எல்லாச்சுரப்புக்களையும் தூண்ட உதவி செய்யும். நாளாந்தம் போதுமான உடற்பயிற்சி, மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செயற்பாடுகளான தியானம், யோகா, கலை நிகழ்வுகளில் ஆர்வம் ஏதாவது பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடல் போன்றவற்றை மேற்கொள்ளல், போதுமான உறக்கம் என்பன இரைப்பை அழற்சி நிலைஏற்படுதலைக் தடுக்கும். உணவு உள்ளெடுத்த உடனே படுக்கைக்கு செல்வது இரைப்பைச் சாற்றை களத்துக்கு கொண்டு வருவதால் அழற்சி நிலை ஏற்படலாம். எனவே உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வகையில் எமது நாளாந்த வாழ்க்கை நடைமுறைகளில் சிறந்த பழக்கங்களை வழக்கமாகிக் கொள்வதன் மூலம் இரைப்பை அழற்சி நோய் நிலையையும் அதனால் ஏற்படும் பாதக விளைவுகளைம் தடுக்கலாம்.
திரு.பத்மராசா பத்மநிருபன்
தாதிய உத்தியோகத்தர்.
சத்திரசிகிச்சைப் பிரிவு
யாழ் போதனா வைத்தியசாலை