மாரடைப்பு தடுப்பதற்கான சில ஆலோசனைகள்
- பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்கள் உடல் உழைப்புப் பயிற்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- 60 வயதைத் தொட்டுவிட்ட யாவரும் மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் வருடத்துக்கு ஒரு முறையாகிலும், குருதியில் கொழுப்பின் அளவு, வெல்லத்தின் அளவு, ECG போன்ற இருதயப் பாதிப்புக்களைக் கண்டறியும் பரிசோதனைகளை வைத்திய ஆலோசனையுடன் செய்து உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள்.
- குடும்பத்தில் இளவயது மாரடைப்பு பாதிப்புகள் இருப்பின் 25 வயதில் இருந்தே வருடாந்த பரிசோதனைகளைச் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். வைத்திய ஆலோசனைக்கு அமைய உணவு, உடற்பயிற்சியைப் பின்பற்றுங்கள்.
- பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பின்பு கூடிய கவனம் எடுங்கள்.
- சிக்கலான மாப்பொருள் உணவுகள் நல்லது. அதாவது நார்ப்பொருள் கூடிய மாப்பொருள் உணவுகள்.
உதாரணம் – தீட்டாத அரிசி, சாமை, தினை போன்ற தானியங்கள் இலைக் கறிவகைகள், இனிப்புக் குறைந்த நார்ப்பொரள் கூடிய பழங்கள் ( தோடம்பழம், திராட்சை, கொய்ய, நாவல், விளாம்பழம்) - உப்புக் குறைந்த, கொழுப்புக் குறைந்த, எண்ணெய் குறைந்த உணவுகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள், இனிப்பான உணவுகளுக்கு பதிலாக விதைகள், பருப்புகள் உண்ணுங்கள். பேக்கரி உணவுகள், பாஸ்ட்பூட் ( Fast Food) உணவுகளைத் தவிருங்கள், கலோரி அதிகம் உள்ள உணவுகளையும் தவிருங்கள்.
- சிகரெட் குடிப்பது, புகையிலை போடுவது அளவுக்கு அதிகமான மது அருந்துதலை தவிர்த்தல்.
- எடை கூடுதலாக உள்ளவர்கள் அதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். எடை கூடினால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இது இதய நோய் மாரடைப்பு வருவதற்கான முதற்படியாகும்.
- வயிற்றுப் பகுதியில் கொழுப்புள்ளவர்கள் அதனைக் குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆண்களுக்கு இடுப்புச் சுற்றளவு 102 cm இலும் குறைவாகவும் பெண்களுக்கு 88cm இலும் குறைவாகவும் வைத்திருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
- உணவில் நிரம்பிய கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள் ( SATURATED FAT)
உதாரணம் – பட்டர், நெய், சீஸ், விலங்கு கொழுப்பு உணவுகள், தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெய், இவற்றில் பொரித்த உணவுகள்,
கூடியளவு நிரம்பாத கொழுப்புணவுகளைப் ( UNSATURATED FAT) பாவியுங்கள்
உதாரணம் – ஒலிவ் ஒயில், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் போன்றன. - குருதியில் கொலஸ்ரோலின் அளவு 200mg/dl க்கு குறைவாக பேண முயற்சிக்க வேண்டும். அத்துடன் HDL நல்ல கொலஸ்ரோலின் அளவு 45mg/dl க்கு அதிகமாகவும் LDL குறை அடர்த்திக் கொழுப்பு புரதம் 130mg/dl க்கு குறைவாகவும், ரைகிளிசைரைட்டு அளவு 150mg/dl க்கு மேல் அதிகரிக்காமலும் இருக்க வைத்திய ஆலோசனையுடன் உணவுப்பழக்கம், மருந்துகள், உடற்பயிற்சிகள், மூலம் குருதியில் கொழுப்பின் அளவைச் சீரான அளவில் பேண முயலுங்கள்.
- கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. வைத்தியரின் ஆலோசனையுடன் உணவு, மருந்துகளுடன் இந்த நோய் நிலைகளைச் சீரான நிலையில் பேணுங்கள்.
எஸ்.சுதாகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்
Posted in கட்டுரைகள்