ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் ஒரு வரப்பிரசாதம். மனித வாழ்வெனும் விருந்துக்குத் தலையாய போஷாக்கை அளிக்கும் ஆழ்ந்த உறக்கம், நாள் முழுக்க வேலை செய்யும் உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் ஒய்வை வழங்குவதுடன், களைப்பைக் குறைத்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை வழங்குகின்றது. ஒவ்வொரு தனி நபருக்கும் தத்தமது வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்திலேயே செலவிடுகிறார்கள். எனினும் தூக்கத்தில் அவர்களை அறியாமல் ஏற்படுகின்ற பிரச்சினை குறட்டை. இது வயது வித்தியாசம் இன்றி எல்லோரிலும் ஏற்படக் கூடியது. ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது பலமான குறட்டை கேட்கும். அது அவருக்கு கேட்கா விடினும், மற்றவர்களை இம்சைப்படுத்தும், பொதுவாக நாம் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது அது தொண்டை, அண்ணம், வாய்வழியாக வெளியேறுகிறது.
எனினும் நாம் உறங்கிய பின்பு எமது சுவாசக் குழாயில் உள்ள தசைகள், இழையங்கள் சற்றுத் தளர்ச்சியடைகின்றன. இதனால் காற்றுவெளியேறும் பாதை குறுகுகின்றது. இந்த அடைப்பட்ட அழுத்தம் நிறைந்த காற்றானது, எந்தவித தடையுமின்றி வெளியேறுகிறது. தளர்ச்சி அடைந்துள்ள சுவாசக்குழாய், தொண்டையின் பிள்புறத் தசைகள் அண்ணம் போன்ற வற்றில் மோதித் தடைப்பட்டு அதிர்வை ஏற்படுத்தி, வெளிவரும் போது குறட்டை ஒலி வெளிப்படுகின்றது.
ஒரு புல்லாங்குழலின் துவாரங்களைச் சிறிது அடைத்த வண்ணம் ஊதும் போது, எவ்வாறு இசையுண்டாகிறதோ, அதேபோல் எமது மூச்சுக் குழலில் அடைபட்ட அழுத்தத்துடன் உள்ள காற்றானது வெளிவரும் போது சில தடைகளை ஏற்படுத்தும் போது குறட்டை ஒலியாக வெளிவருகிறது.
அந்த குறட்டைச் சத்தமானது சிலருக்கு 40 – 60 டெசிபல் (Decibel) வரை செல்கின்றது. இது ஒருவருக்குத் தரமற்ற தூக்கத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் தூக்கச் சுற்றுக்கள் குழப்பமடைவதால் ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் பல அசௌகரியங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. குறட்டைதான் மூச்சுவிட மறுத்தல் என்னும் நோய்க்கு மூல காரணம் ஆகிறது. அதாவது மூச்சுவிடுதல் எனும் ஓழுங்கான அனிச்சை செயலில் தடை ஏற்படும் போது, இடையிடையே ஒன்றிரண்டு மூச்சு வெளிவராமலே தடையாகின்றது. இதனால் அவர்களின் குருதியில் போதியளவு பிராணவாயுவைப் (ஒட்சிசன்) பெறமுடியாத ஆபத்துக்கு அவர்கள் உள்ளாகின்றார்கள்.
கீழ்க்குறிப்பிட்ட வகையினர் கூடுதலாகக் குறட்டை வீடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டையான கழுத்துடையோர், சிறிய நாடி மற்றும் தொங்கும் கீழ்த்தாடை ஊடையோர், அதீத எடை உடையவர்கள், கொழுத்த கழுத்து உடையவர்கள், சில வகையான ஒவ்வாமை உடையோர்கள், பிறவிக் குறைபாடுகள் உடையவர்கள், மூக்குத் தண்டுச் சுவர் வளைந்திருப்பவர்கள், சுவாச வழி மூக்குப் பகுதியில் நீர்க்கட்டிகள் அல்லது நீர்ச்சதைகள் (Polyps) இருந்தால், கடுமையான தடிமல் மூக்கடைப்பு இருப்பவர்கள், குழந்தைகள் சிறுவர்களில் டொன்சில் வீக்கம், அடினேயிட் வீக்கம் உடையவர்கள், அண்ணச்சதை வளர்ந்திருத்தல், மற்றும் புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், தூக்க மாத்திரை பாவிப்பவர்கள், தைரொயிட் சுரப்பி நோய்க்குறைபாடு உடையவர்கள், வாயினால் மூச்சுவிடுபவர்கள், அண்ணச்சதை தடித்திருப்பவர்கள், மார்பு நோய்கள் ஏற்பட்டு சளி கூடுதலாக உள்ளவர்கள் போன்றவர்களாவர். இப்படியானவர்கள் குறட்டை ஒலியை ஏற்படுத்தியபடி உறங்குவார்கள். எமது நலமான வாழ்வுக்குக் குறட்டையை எம்மிடம் இருந்து பிரிப்பதற்கு நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவையாவன
- அதீத நிறையுடையோர், கொழுப்புடையோர் தங்கள் உடல் நிறையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
- தினமும் காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி செய்தல்.
- மூச்சுப்பயிற்சியைத் தினமும் அரை மணித்தியாலத்துக்கு மேலாகச் செய்து வரல் வேண்டும். உதாரணமாக – பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஸ்பைரோ மீற்றர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல் மற்றும் யோகா மூச்சுப் பயிற்சி செய்தல்.
- தூங்கும் போது உயரமான தலையணை வைத்தலைத் தவிர்த்தல் அதாவது 4 அங்குல உயரம் இருந்தால் போதுமானது.
- சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்லக் கூடாது.
- புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதைத் தவிர்த்தல் வேண்டும். முக்கியமாக மாலையிலும் இரவிலும் புகைப்பிடித்தலை தவிர்த்தல் வேண்டும்.
- மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதனைக் குறைத்தல் வேண்டும்.
- வாயால் மூச்சுவிடும் பழக்கம் உடையவர்கள் அதனைமாற்றி மூக்கால் மூச்சுவிடும் பழக்கத்தை உருவாக்கல் வேண்டும்.
- அதீத பருமன் உடையவர்கள் பக்கவாட்டில் படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் முதுகுப் பகுதிக்குள் தலையணை வைத்தல், அல்லது சிறிய அண்டும் பொருள்களை முதுகுப் பக்க உடையுள் வைத்து தைத்து விடுவதன் மூலம் மல்லாந்து படுப்பதைக் குறைக்கலாம்.
- பற்களுக்கு இடையில் இடைவெளிகள் இருப்பின் பல்வைத்திய நிபுணரிடம் காட்டுதல்.
- காது, மூக்கு தொண்டை பிரச்சினைகள் குறைபாடுகள், அங்கவீனங்கள், சில சதை வளர்ச்சிகள், கட்டிகள் இருப்பின் காது மூக்கு தொண்டை (ENT) வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெறுதல் மற்றும் சத்திரசிகிச்சைகள் செய்வதன் மூலம் இந்தக் குறைபாடுகளைத் தீர்க்கலாம்.
- தூக்கத்துக்காக வைத்திய ஆலோசனை இன்றி, தூக்கமாத்திரை போடும் பழக்கத்தைத் தவிர்த்தல்.
- மூளையின் செய்பாடுகளில் மாற்றங்கள், பாதிப்புக்கள், வலிப்பு நோய் உடையவர்கள் அதற்குரிய சிகிச்சையை ஒழுங்காகப் பெறுவதன் மூலமும் குறட்டையைக் குறைக்கலாம்.
- இரவு உணவு அதிகளவு எடுத்தலைத் தவிர்த்தல் நன்று, மிதமான காரமற்ற, எண்ணெய் அற்ற உணவு சிறப்பானது.
இவை போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், குறட்டையைக் குறைத்துச் சுகமாக ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை