இன்று எங்கள் மத்தியில் பல விதமான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இவற்றில் அரிதான ஒருவகைக் காய்ச்சலை எலிக்காய்ச்சல் என்று அழைக்கின்றோம். இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் ( Gacteria ) ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக மிருகங்களின் (எலி) சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது. இந்த நோய் பெரும்பாலும் விவசாயிகளையும், கால்நடைகளுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களையும் தாக்குகிறது.
நோய் அறிகுறிகள்
இந்த நோய்க்கிருமிகள் தொற்றுக்கு உட்பட்டவர்களின் உடலில் உட்சென்று 7 – 14 நாள்களில் நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நோய்கிருமித் தொற்றுக்கு உட்பட்டவர்களில் பெரும்பாலனோர் ( 90 – 95 வீதமானோர்) சிறிதளவு காய்ச்சலோடு அல்லது சிறிதளவு உடல் நோவுடன் குணமடைகின்றனர். ( Sub clincal) மிகவும் சிறிய அளவிலானோருக்கே இந்த நோய்க்கிருமி நோயை ஏற்படுத்துகின்றது. ( 5 – 10 வீதம்) இந்த நோய்க்குரிய முழுக்கால எல்லையையும் இரண்டு பகுதிகளாகப் பரிக்கலாம். முதல் பகுதி நோய் 7 – 10 நாள்கள் வரை நீடிக்கும். இந்தப் காலப் பகுதியில் இந்த நோய்க் கிருமி குருதிச் சுற்றோட்டத்தில் காணப்படுகின்றது. ( Laptospiramic Phase) இந்த் காலப்பகுதியில பல வகையான நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவையாவன கடுமையான தலைவலி, காய்ச்சல், சோம்பல், சாப்பாட்டுக்கு மனம் இன்மை, வாந்தி, கடுமையான தசை நோ, கண்மடலின் உட்புறத்தில் இரத்த கசிவுப் புள்ளிகளும், ஈரல் மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல், பல்வேறு வகையான Skin roshs என்பனவும் ஏற்படுகின்றன. இந்த முதற்பகுதி நோய் 7 – 10 நாள்களின் பின்னர் இரண்டாவது பகுதிக்கு மாறுகிறது. இந்த இரண்டாவது பகுதி (Immunological phase) என்று அழைக்கப்படுகின்றது. இரண்டாவது கட்டத்தின் போது பெரும்பாலான நோயாளர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுகின்றனர். சிலர் மட்டும் நோயின் கடுமையான பகுதிக்கு செல்கின்றனர். இந்தப் பகுதியின் போது சிறு நீரகம் , ஈரல், இருதயம், சுவாசப்பை என்ற பெரும்பாலான உறுப்புகளின் தொழிற்பாடு குறைவடைவதுடன், இரத்தப் பெருக்கு ஏற்படுதல் செங்குருதி சிறுதட்டு உடைதல், சுவாசப்பையில் குருதிப் பெருக்கு ஏற்படுதல், குருதி அழுத்தம் குறைவடைதல் ( Shock) போன்ற பல வகையான தாக்கங்களும் ஏற்படுகின்றன.
பரிசோதனைகள்
இந்த நோய்க்கு உட்பட்டதாகக் கருதப்படும் நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை (FBC. ESR) சிறுநீர்ப் பரிசோதனை (UFR) என்பவற்றுடன் ஈரல், சிறுநீரகம் என்பவற்றின் தொழிற்பாட்டைகண்டறிவதற்கான பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்த நோயை உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் இருந்த போதிலும் பொதுவாக நோயாளியின் நோய் அறிகுறிகளைக் கொண்டும் முதற்கட்ட இரத்த சிறுநீர் பரிசோதனைகளைக் கொண்டும் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இந்த நோயை உறுதிப்படுத்த நோய் ஏற்பட்டு முதல் வாரத்தில் இந்த நோய்க் கிருமியை நோயாளியின் இரத்தத்தில் இருந்தோ அல்லதுமூளை முன்னாண் பாய் பொருளில் இருந்தோ பிரித்தெடுத்து வளர்த்தெடுப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். நோய் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியிருப்பின் நோயாளியின் சிறுநீரில் இருந்து இந்த நோய் கிருமியின் ஒரு பகுதியை கண்டறிவதன் மூலம் அல்லது அன்ரிபொடி ( Antibody) ரெஸ்ற் எனப்படுகின்ற Serology test மூலமாகவோ நோயை உறுதிப்படுத்தலாம். இவ்வாறான பரிசோதனைகள் செய்வதற்கு கூடிய வசதிகள் தேவைப்படுகிறதோடு பரிசோதனை முடிவடைய சில வாரங்கள் செல்லும் என்பதாலும் நடைமுறையில் இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் மட்டும் மருத்துவர்களால் இவ்வாறான பரிசோதனை ஒழுங்கு செய்யப்படுகின்றது.
சிகிச்சை முறை
நோய் அறிகுறிகளையும் முதற்கட்ட பரிசோதனைகளையும் கொண்டு நோய்க்குரிய சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. நோயின் தொடக்க காலங்களில் சிகிச்சை முறை ஆரம்பிப்பதன் மூலம் நோய் உக்கிரமான நிலையை அடைவதையும், உடலின் சில உறுப்புகள் ( சிறுநீரகம், ஈரல் என்பன) செயல் இழப்பதையும் தடுக்க முடியும். நோய் நிலைமையைப் பொறுத்து நோயாளிக்கு ஊசி மருந்தோ, அல்லது மாத்திரைகளோ வழங்கப்படுகின்றன. ஊசி மருந்து எனப்படுகின்ற போது பென்சிலின் (c.Penicilline) என்ற மருந்தும் சில வேளைகளில் நோயினால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்களுக்கு 3rd generation Cepholosporin என்ற வகுப்பை சேர்ந்த Cefotaxime என்ற மருந்தும் வழங்கப்படுகின்றது. மாத்திரைகள் நோயின் தன்மை குறைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது, இது Doxycycline என்ற மாத்திரை ஆகும். இவ்வாறான மருந்துகள் நோயாளிக்கு 7 – 10 நாள்கள் வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மருந்துகள் தவிர நோயாளர்களுக்கு தேவையான மற்றைய மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. சில நோயாளர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தும் பராமரிக்கப்படுகின்றனர். எனினும் இவ்வாறான மருத்துவ கவனிப்புகளின் மத்தியிலும் நோயின் உக்கிரத்தை அடைகின்ற 10 வீதமானோர் சாவைத் தழுவிக் கொள்கின்றனர். எனவே இந்த நோய் அறிகுறிகளை அவதானிப்பவர்கள் முன்னதாகவே மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த நோய் உக்கிரம் அடைவதையும் உடல் உறுப்புக்கள் செயல் இழப்பதையும் இயலுமானவரை தடுத்துக் கொள்ளலாம்.
Dr.P.யோண்சன் MBBS MD
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்