நீங்கள் உங்கள் குழந்தைக்கு நன்மையானவற்றை செய்ய விரும்புகின்றிர்களா? அப்படியாயின் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த பலவழிகள் உண்டு அவை எல்லாவற்றிலும் முக்கியமானது அவர்களது பாதுகாப்பான வளர்ச்சிக்கு நீங்கள் உதவுவதாகும். பாதுகாப்பான வளர்ச்சியில் வக்சீன் கொடுக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு உரிய காலத்தில் வக்சீன் கொடுப்பதால் உங்கள் பிள்ளைக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
- நீர்ப்பீடணம் அளித்தல் உங்கள் பிள்ளையின் உயிரைக்காக்கும்.
மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் தற்போது முன்னரை விட பலவிதமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. சில வகையான தொற்றுநோய்கள் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் உயிரைக்பறிக்கக்கூடியன. உதாரணமாக தற்போது போலியோ சொட்டு மருந்து சரியான முறையில் வழங்கப்படுவதன் மூலம் இலங்கையில் இளம்பிள்ளைவாத நோயினால் பீடிக்கப்படுபவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த இளம் பிள்ளைவாத நோயானது குழந்தைகளின் அங்கங்களின் செயற்பாட்டை பாதிப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. - நீர்ப்பீடணம் அளித்தல் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமாகும்.
வக்சீன் கொடுக்கும் செயற்றிட்டமானது விஞ்ஞான ரீதியாக நன்கு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குழந்தைக்கு வழங்கப்படுகின்றது. சில சமயங்களில் வக்சீன் கொடுக்கும் போது நோ, தோலில் சிவப்புத் தன்மை, தடிப்புக்கள் போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். இவ் ஒவ்வாமை விளைவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விட நோய் ஏற்படாமல் தடுக்கும் முக்கியமான செயற்பாட்டை வக்சீன் குழந்தைகளுக்கு வழங்குகின்றது. - நீர்ப்பீடணம் கொடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
சரியான முறையில் வக்சீன் உரிய காலத்தில் கொடுக்கபடுவதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு முழுமையான நீர்ப்பீடண எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் குக்கல் போன்ற தொற்று நோய்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கின்றது. இதன் மூலமாக உங்களது குழந்தைக்கு முழுமையான பாதுகாப்பும் கிடைப்பதுடன் நோய் பரவலடைவது தடுக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினகளுக்கு முழுமையான பாதுகாப்பும் கிடைக்கின்றது. - நீர்ப்பீடணம் அளிப்பதன் மூலம் உங்கள் குடும்பத்துக்கு பொருளாதார செலவுகளும் நேரமும் மீதப்படுத்தப்படுகிறது.
சரியான முறையில் நீர்பீடணம் அளிப்பதன் மூலம் குழந்தை நோய் வாய்ப்படும் வீதம் குறைவதால் பொருளாதாரச் செலவுகள் குறைவடைவதுடன் உங்களது நேரமும் மீதப்படுத்தப்படுகின்றது. குழந்தை நோய்வாய்ப்படின் நீங்கள் வைத்தியசாலைக்கு சில சமயங்களில் வீடுகளிலும் அதிகநேரத்தை குழந்தையுடன் செலவு செய்ய நேரிடும். ஆகவே நீங்கள் வேலை செய்பவர்களாக இருந்தால் சரியான முறையில் வக்சீன் கொடுப்பது ஒரு முதலீடு போன்றதாகும். இவ்வாறான வக்சீன் கொடுப்பது பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்ப அங்கத்தவர்களுக்கும் இலவசமாகக் கிடைப்பதாகும். - நீர்ப்பீடணம் அளித்தல் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்கும்
சரியான முறையில் நீர்ப்பீடணம் அளித்தல் சில நோய்களைக் குறைக்கின்றது அல்லது இல்லாமல் செய்கின்றது. இதன் மூலமாக எதிர்காலச் சந்ததி ஆரோக்கியம் உள்ளவர்களாக வளர இது உதவுகின்றது. இன்று நீர்ப்பீடணம் அளிப்பதன் மூலம் சின்னம்மை (Small pox) முழுமையாக உலகில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே சின்னம்மையால் உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவதற்குரிய சந்தர்ப்பம் எதிர்காலத்தில் இல்லை. மேலும் ரூபெல்லா (Rubella) வக்சீன் கொடுப்பதன் மூலம் கர்ப்பிணித்தாய்மார்கள் ஜேர்மன் சின்னமுத்து (German measles) ஏற்படுவதில் இருந்து முழுமையான பாதுகாப்பை பெறுகின்றனர்.
இதன் மூலமாக தாயில் வைரஸ் தொற்று குழந்தைக்கு கடத்தப்படுவது தடுக்கப்படுகின்றது. இலங்கையில் தற்போது ஜேர்மன் சின்ன முத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆகவே தொடர்ச்சியாக சரியான முறையில் வக்சீன் முழுமையாக கொடுக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் பலவிதமான நோய்களில் இருந்து பிள்ளைகள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு ஏற்படுகின்றது.
ஆகவே பெற்றோரே உங்கள் பிள்ளைக்கு வக்சீன் கொடுப்பதற்கு நீங்கள் என்றும் தயங்கவேண்டாம். உண்மையில் சரியான முறையில் வக்சீன் கொடுப்பது உங்களது பிள்ளைக்கு இன்று நீங்கள் செய்கின்ற சரியான முதலீடு போன்றது.
கோ.நந்தகுமார்
விரிவுரையாளர்
தாதியர் பயிற்சிக் கல்லூரி
யாழ்ப்பாணம்.