குழந்தைகளை வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டிய இரண்டாவது மிகப் பொதுவான பிரச்சினை வயிற்றோட்டமாகும். இது மிகப் பொதுவான பிரச்சினையாகக் காணப்படினும் வசதி வாய்ப்புக்கள் குறைந்த இடங்களில் சிகிச்சை தாமதமானால் சில வேளைகளில் உயிராபத்துக்கூட ஏற்படக்கூடும். உலகில் ஒவ்வொரு வருடமும் 1.7 மில்லியன் வயிற்றோட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசனைக் குறைபாட்டுக்கு ஒரு பிரதான காரணம் வயிற்றோட்டமாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒரு சாதாரண 3 வயதுக்குட்டபட்ட குழந்தைக்கு ஒரு வருடத்தில் 3 தடவையாவது வயிற்றோட்டம் ஏற்படுகின்றது. இதனால் குழந்தையின் உடல் வளர்ச்சியும் போசாக்கும் பாதிப்படையலாம்.
ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேல திரவத் தன்மையாக மலம் கழிக்கப்படுமானால் அதை வயிற்றோட்டம் எனலாம். மாறாக தாய்ப்பால் அருந்தும் சுகதேகியான ஒரு குழந்தை இளக்கமாக பசைத் தன்மையாக அடிக்கடி மலம் கழிக்கலாம். அது வயிற்றோட்டம் அல்ல அதேபோல் அடிக்கடி சாதாரணமாக இறுக்கமுள்ள மலம் கழிக்கும் போது அதை வயிற்றோட்டம் எனக் கூறமுடியாது.
பொதுவாக வயிற்றோட்டத்துக்கு சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றே காரணமாகும். பல வகையான வைரசுகள், பக்றீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் கிருமித் தொற்று ஏற்படலாம். தனிநபர் சுகாதாரத்தை (Personnel hygiene) முறையாக கடைப்பிடிக்காது விடினும் தொற்று ஏற்பட்ட உணவையும் பானத்தையும் உட்கொள்ளும் போதும் வயிற்றோட்டம் பரவும்.
வயிற்றோட்டத்தினால் ஒரு குழந்தைக்கு நீரிழப்பு (Dehydration) ஏற்பட்டே உயிராபத்து ஏற்படுகின்றது. எனவே நீரிழப்புக்கான அறிகுறிகள் குறித்துப் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
- தாகம் அதிகமாகக் காணப்படும்.
- சலம் வெளியேறுவது குறைவடையலாம்.
- பிள்ளை சோர்வடைந்தோ அல்லது ஒய்வின்றி அழுது கொண்டோ காணப்படலாம்.
- உச்சிக்குழி காணப்படுமாயின் அது உட்குழிவடைந்து பள்ளமாகக் காணப்படலாம்.
- கண்கள் உட்குழிவடைந்து காணப்படலாம்.
- கண்கள், வாய், நாக்கு, உதடு, என்பவற்றில் நீர்த்தன்மை குறைந்து வறண்டு காணப்படும்.
- நீரிழப்பு அதிகமாயின் குழந்தை நினைவாற்றலை இழக்கலாம். கை கால்கள் குளிர்ந்து காணப்படலாம்.
எனவே நீரிழப்புக்கான இத்தகைய அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடிச் சிகிச்சை அவசியமாகும். வயிற்றோட்டத்துக்கான மிக முக்கியமான சிகிச்சை நீரிழப்பை கட்டுப்படுத்தலாகும். அதற்கா ஜீவனி போன்ற திரவங்களை வைத்திய ஆலோசனைக்கேற்ப அடிக்கடி கொடுக்க வேண்டும். குழந்தை வாந்தி எடுக்குமாயின் 10 – 15 நிமிடம் பொறுத்திருந்து பின்னர் மீண்டும் சிறிது சிறிதாக தேவையான நீராகத்தை கொடுக்கலாம். சில சமயங்களில் நீரிழப்பு அதிகமானால் குழந்தையின் நாளத்தினூடாகக் கனியுப்பு கலந்து திரவத்தை ( I.V. FLuids) கொடுக்க வேண்டி ஏற்படலாம்.
வயிற்றோட்டத்தின் போது நீராகாரமாக பாவிக்கத்தக்கவை.
- ஜீவனி
- அளவான உப்புக் கலந்த கஞ்சி
- யோகட்
- அளவான உப்பு கலந்த மரக்கறி அல்லது சிக்கன் சூப்
- இளநீர்
- அடர்த்தி குறைந்த சீனி சேர்க்காத புதிய பழச்சாறுகள் ( எலும்பிச்சை, தோடை)
வயிற்றோட்டத்தின் போது பாவிக்க கூடாதவை
- வர்த்தக ரீதியான குளிர்பானங்கள்
- பைக்கற்றில் அடைத்த அடர்த்திகூடிய பழச்சாறுகள்
- சீனி கலந்த தேநீர்
- கோப்பி
- குளுக்கோசுத் தண்ணீர்
மேலும் சாதாரணமாக குழந்தை உட்கொள்ளும் உணவுகளை இயன்றளவுக்கு கொடுத்தல் வேண்டும். நீராகாரத்தைக் கொடுக்கும் போது குழந்தை வேண்டுமளவுக்கு கொடுக்கலாம். அல்லது சாதாரணமாக அருந்தும் அளவைவிட ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் போதும் பின்வரும் மேலதிக நீராகாரம் வழங்குதல் வேண்டும்.
- இரண்டு வயதுக்குட்டபட் குழந்தைக்கு 50 – 100ml ( காற்பங்கு அரைவாசி பெரிய தேநீர்க் கோப்பை அளவு
- இரண்டு வயது தொடக்கம் 10 வயது வரை 100 – 200ml ( அரைவாசி முழு பெரிய தேநீர்க் கோப்பை அளவு)
- பெரிய சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவர்கள் விரும்பிய அளவுக்கு
வயிற்றோட்டம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்
வயிற்றோட்டம் ஏற்படாது குழந்தைகளைப் பாதுகாப்பதே சிறந்த சிகிச்சையாகும்.
- இயன்ற வரை தொடர்ந்தும் தனித் தாய்ப்பாலுட்டலை ஆறு மாதம் வரைக்கும் மேற்கொள்ளல்
- சிறந்த முறையில் மேலதிக ஆகாரங்களை ஆறு மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்குதல்.
- உணவு சமைக்க முன் பரிமாற முன் உண்ணமுன் கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவுதல்.
- கொதித்தாறிய நீரை பருகுதல்.
- கிணற்று நிரை பயன்படுத்துவதாயின் காலத்துக்கு காலம் கிணற்றை இறைப்பதுடன் குளோரினும் கிணற்று நீருக்குப் போடலாம்.
- உணவுப் பொருள்களை மூடிவைத்தல்.
- பழைய உணவுகளை இயன்ற வரை உட்கொள்ளாதிருத்தல்.
- குழந்தைகளுக்குத் தூய்மையற்ற கடையுணவுகளை வழங்காதிருத்தல்
- முறைப்படி தனிநபர் சுகாதாரத்தை அனைவரும் பின்பற்றல்
- வயிற்றோட்டம் ஏற்பட்டவர் உரிய சிகிச்சையைப் பெறுவதுடன் அவருடைய பொருள்களை மற்றவர் பயன்படுத்தாதிருத்தல்.
- சில வைரசு தொற்றுகளுக்கு தடுப்பூசியும் ஏற்றமுடியும்.
எனவே தடுப்பு முறைகளைக் கைக்கொள்வதன் மூலம் வயிற்றோட்ட நோய் ஏற்படாது பாதுகாக்க முடிவதுடன் வயிற்றோட்டம் ஏற்பட்டால் நீரிழப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்து நீரிழப்பை நிவர்த்தி செய்வதன் மூலம் வயிற்றொட்டத்தால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க முடியும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.