கண்வெண்படலம் என்பது கண்வில்லையின் ஒளி ஊடுருவுத் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். இது உலகிலேயே கண்பார்வைக் குறைவிற்கான முதன்மையான காரணியாகக் காணப்படுகின்றது.
பொதுவாக முதிர்ந்த வயதில் ஏற்படுகின்ற ஓர் நோய் நிலைமை ஆகும். இது கண்வில்லையில் உள்ள புரத மாற்றத்தால் ஏற்படுகின்றது.
கண்வெண்படல வகைகள்
- முதுமையில் ஏற்படுவது ( Senilecataract) பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது.
- பிறவியில் ஏற்படுவது ( Cogenital cataract ) – இது கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சில நோய்களினாளோ அல்லது பரம்பரைக் காரணிகளினாளோ ஏற்படலாம்.
- கண்களில் அடிபடுவதனால் ஏற்படுவது ( Traumatic Cataract)
- ஏனைய நோய்களினால் ஏற்படுவது நீரிழிவு கண் அழற்சி (Uveitis) கண் அழுத்த நோய் ( Glaucoma)
- நீண்டகால ஸ்ரிரொயட் ( Steroid) மருந்துப்பாவனையால் ஏற்படுவது.
அறிகுறிகள்
- தூரப்பார்வை அல்லது கிட்டப்பார்வை குறைவடைதல்
- இரவுப் பார்வை குறைவடைதல்
- வெளிச்சம் பார்க்கும் போது கண் கூச்சம் ஏற்படல்
- பொருள்கள் இரண்டாக, பலதாக தெரியும் நிலை ஏற்படல்
- கண்வெண்படலம் மிகவும் கருமையாக இருப்பின் கண் அழுத்தம் அதிகரிப்பதனால் கண்சிவந்து நோ ஏற்படலாம்.
கண்வெண்படலம் ஏற்படுதலைத் தூண்டும் காரணங்கள்
- வயது அதிகரித்தல் ( Aging)
- சூரியக் கதிர்களுக்கு நீண்டகாலமாக கண்வெளிப்படுத்தப்படுவது.
- சலரோக நோயின் தாக்கம்.
- கதிர்வீச்சு தாக்கம்
- ஸ்ரிரொயிட் ( Steroid) மருந்துவகையை அதிகமான காலம் பாவிக்கின்றமை.
- உடலின் நீரிழப்புத்தன்மை ( Dehydration)
சிகிச்சை முறை
தற்காலிக சிகிச்சை முறை – கண்வெண்படல ஆரம்ப நிலையாயின் மூக்குக் கண்ணாடி பாவித்தலின் மூலம் பார்வையைக் கூட்டலாம்.
நிரந்த சிகிச்சை முறை சத்திரசிகிச்சை ( Cataract Surgery)
இதன் மூலம் கண்வெண்படலம் அகற்றப்பட்டு செயற்கையாகச் செய்யப்பட்ட வில்லைகள் பொருத்தப்படுகின்றன.
Dr.ஆரணி மதன்.
கண் கிளினிக்,
யாழ் போதனா வைத்தியசாலை.