வளர்ந்த குழந்தைகள் இரவு நேர தூக்கத்தின் போது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை எண்ணி பெற்றோர்கள் கவலைப்படுவது இயல்பு. பொதுவாக ஒரு குழந்தை 5 தொடக்கம் 6 வயதை அடையும் போது தானாகவே சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறனை அடைகின்றது. 90 – 95 வீதமான சிறார்கள் பகலில் சிறுநீர் கழிப்பதை தம் கட்டுப்பாட்டுக்குள்ளும், 80 – 85 வீதமான சிறார்கள் இரவில் சிறுநீர் கழிப்பதைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் 6 வயதின் பின் தம்மை அறியாமல் அவர்களின் கட்டுப்பாடு இன்றி இரவுத் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை காணப்படின் வைத்தியரை நாடுங்கள். ஏனெனில் குழந்தைகளின் சிறுநீரகத் தொகுதியின் அசாதாரண அமைப்பியல் மாற்றத்தின் விளைவாகவும் இந்த நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறான அசாதாரண அமைப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிடின் குழந்தைகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நோய் முற்றிய நிலையிலேயே வைத்தியசாலையை நாடும் நிலை ஏற்படும். என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 60 வீதமானோர் ஆண் குழந்தைகளாகவே காணப்படுகின்றனர். மேலும் 50 வீதமான குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் இதே போன்ற நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களாவே காணப்படுகின்றனர். இந்த நோய் நிலைமையானது இரு வகைகளில் ஏற்படலாம். ஒரு வகையானது குழந்தை ஆரம்பத்திலிருந்தே சிறுநீரைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை அடையாது காணப்படும். மற்றைய வகையானது குழந்தை ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் தன்மையைக் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பின்பு சில காரணிகளால் கட்டுப்படுத்த முடியாத தன்மைக்கு உள்ளாதல் ஆகும்.
இந்த நிலைமையை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாவன
- பரம்பரையாக ஏற்படும் வாய்ப்பு உண்டு
- தூக்கத்துடன் சம்பந்தப்பட் நோய் நிலைமைகள் அதாவது இரவில் சிறுநீர்ப்பை நிரம்பிய போதும் மைய நரம்புத் தொகுதியால் அதை உணர முடியாத நிலை காணப்படல்.
- இயல்பாகவே சிறுநீர்ப்பையின் கொள்ளளவுத் தன்மை குறைவாக காணப்படல் ( சிறிய சிறுநீர்ப்பை)
- அதிகரித்த தாக்கத்தினால் அடிக்கடி நீர் அருந்தும் தன்மை இந்த நிலையானது நீரிழிவு நோயுடன் ( Diabetes – type I, II & diabctcsinspidus) கபீன் ( Caffeine) எனப்படும் கோப்பியில் காணப்படும் நச்சுப்பதார்த்தங்களை உள்ளெடுத்தல் ஆகிய நிலைமைகளில் இணைந்து காணப்படும்.
- மன உளைச்சல்
- தாமதமான உடல், உள விருத்தி நிலை பெற்றோர்களே இந்த நிலைமையானது ( Nocturnal cnuresis) குழந்தைகளுக்கு உணர வைக்கப்பட்டு அவர்களின் முயற்சியால் தாமாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ( சுய கட்டுப்பாடு) குணப்படுத்த முடியும். குழந்தைகளைத் தண்டிக்க வேண்டாம். தண்டிப்பீர்களாயின் அவர்கள் உள ரீதியில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் அபாய நிலை ஏற்படும். உடல், உள விருத்தி குன்றும். எனவே சிகிச்சை முறையை ஒரு விளையாட்டுப் போல ஆரம்பியுங்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இரவில் படுக்கையை சிறுநீர் கழித்து ஈரமாக்காது விடின் வெற்றிப் பரிசுகள் கொடுங்கள்.
மேலும் மாலை 6 மணிக்குப் பின்னர் நீராகாரம் நீர் உட்கொள்வதைக் குறைக்கச் செய்யுங்கள். மாலை 4 மணிக்கு பின்னர் மெலதிக இனிப்புப் பண்டங்கள், கோப்பி என்பவற்றை உண்ணக் கொடுக்காதீர்கள்.
குழந்தை நித்திரையில் குறட்டை விடுமாயின் வைத்தியரை நாடுங்கள். உங்களுக்கு வசதியிருப்பின் “Vibratory Alaram” ( அதிர்வொலியை எழுப்பும் கருவி) எனப்படும் ஒரு வகை கருவி உண்டு. அதை குழந்தைகளின் உள்ளாடையில் இணைத்து விடும்போது உள்ளாடை ஈரமாகும் போது அந்தக் கருவி அதிரும் அப்போது குழந்தை தூக்கம் கலைந்து எழும்பும் , உடனே குழந்தையை சிறுநீர் கழிப்பிடத்துக்கு அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கப் பழக்குங்கள். சில மாதங்களுக்கு இந்த முறையைத் தொடரல் வேண்டும்.
ஆரம்பத்திலேயே மருந்தினால் கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள் விடுமுறை நாள்களைக் கழிக்கச் சுற்றுலா செல்ல வேண்டியிருப்பின் அல்லது ஏதாவது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்தின் மூலம் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம்
Dr.கு.அபர்னா,
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை