நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளும் சருமநோய் பாதிப்புகளும் பொதுவாகப் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நீரிழிவில் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால் தோற் பகுதி உணர்வுதிறன் குறைவு ஏற்பட்டு தோலில் அடிக்கடி புண்கள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதால் சருமம் பாதிப்படைகின்றது.
குருதியில் வெல்ல மட்டத்தை அதிகரிக்காது கட்டுப்படுத்துவதன் மூலம், குருதியிலும் தோற் பகுதியிலும் காணப்படுகின்ற பக்றீரியாக்கள், பங்கசுக்கள், பூஞ்சனக் கிருமிகளின் ஊடாகப் போசனையைக் கட்டுப்படுத்தலாம். இதனால் அவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் குறைக்கலாம். அத்துடன் குருதியில் வெண்குருதி அணுக்களின் போராடும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதை குறைத்து வலுவான நிலையில் வைத்திருக்கலாம். நீரிழிவில் வெல்ல மட்ட அதிகரிப்பில் எமது தோற்பகுதியில் வியர்வையிலும் குளுக்கோஸ் மற்றும் Acetone ( அசரோன்) மணம் போன்றனவும். எமது தோலில் காணப்படுகின்ற கிருமிகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
குருதியில் சரியான அளவில் வெல்ல மட்டத்தைக் கட்டுப்படுத்தாதபோது எமது உடலானது மேலதிகமாக இருக்கும் குளுக்கோசை வெளியேற்றுவதற்குச் சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. இதன் இறுதி விளைவாக எமது தோல் ஈரப்பசை குறைந்து உலர்வுத்தன்மை அடைகிறது. இந்த நிலையைத் தடுப்பதற்கு நாம் போதியளவு நீராகாரம் எடுத்தல் வேண்டும். குருதியில் வெல்ல மட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுவாகச் சலரோக நோயாளிகளில் படர் தாமரை பூஞ்சனத் தொற்றுக்கள், தலைப்படர் தாமரை உடல் படர்தாமரை மற்றும் ஆண், பெண் பிறப்பு உறுப்புக்களைச் சுற்றியும் தொடை, இடுப்பு பகுதிகளில் சொறி, சிவந்த நிலை பூஞ்சனத் தொற்றுக்கள், நகப்படர் தாமரை, நகச்சொத்தை. நகச்சுற்று, வறண்ட சருமம், இதனால் தோலில் வெடிப்புக்கள் கால்விரல்களுக்கு இடையில் புண்கள் மற்றும் அண்டும் பகுதிகளில் புண்கள், சிறுவர்களில் வாய்ப்புண்கள், பருமன் அதிகம் உள்ளவர்களின் தோல் மடிப்புக்கள் தடித்துத் கறுத்து விடுதல் தோல் பகுதியில் கொப்பளங்கள், வீக்கங்கள், கட்டிகள் மற்றும் தோலின் ஆழமான பகுதிகளில் கட்டிகள், மேலும் இன்சுலின் ஊசி போடும் இடங்களில் நிறமாற்றங்கள் போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகள் நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் குறைப்பதற்கு சில ஆலோசனைகள்.
- உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்
- உங்களுக்கு ஏதாவது சரு நோய்த்தொற்று ஏற்படின் ஆரம்பத்திலேயே சரும வைத்திய நிபுணரை அணுகிச் சிகிச்சை பெறுங்கள்
- உங்கள் பாதங்களை தினமும் பரிசோதியுங்கள், கால் பாதங்களில் வெடிப்புக்கள், காய்ப்புகள், சொறி காயங்கள், வெட்டுக்கள், தடிப்புக்கள் பாதப்பகுதி சிவந்து அல்லது நிற மாற்றங்கள், வீக்கங்கள் , பாதம் அதிக சூடாக குளிராக இருத்தல், பாதங்களில் உணர்ச்சிக் குறைவு போன்றவற்றைக் கவனித்தல் வைத்திய ஆலோசனை பெற்றுச் சரியான பாதுகாப்பான காலணிகளை அணியுங்கள்.
- குருதியில் வெல்ல மட்டத்தைச் சீரான அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முயலுங்கள், இதற்கு தகுந்த உணவுக் கட்டுப்பாடு முறைகள், உடற்பயிற்சி, நீரிழிவு மருந்துகளிடன் எமது உடலின் காயங்கள் தொற்றுக்கள், மனப் பாதிப்புக்கள் உட்பட ஏனைய நோய் நிலைகளுக்கும் மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் பெறுங்கள்.
- போதியளவு நீராகாரம் அருந்துதல் மது அருந்துதலைக் கட்டுப்படுத்துதல் அல்லது தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல் அதிக கலோரி கூடிய கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல்.
- நீராடிய பின்பு அல்லது உடலைக் கழுவிய பின்பு சுத்தமான உலர்ந்த மென்மையான துண்டினால் உடலை நன்றாகத் துடைத்துக் கொள்ளுங்கள், கிருமிகள், காளான் பூஞ்சனங்களின் வளர்ச்சிக்கு சாத்தியமான இடங்களான தோல் மடிப்புக்கள் கால் விரல் இடுக்குகள், இடுப்பு பகுதி, பிறப்பு உறுப்புக்கள், அக்குள் போன்ற வற்றை ஈரப்பசை இன்றி உலர்த்திக் கொள்ளுங்கள். பின்பு தோல்ப் பகுதியில் வெடிப்புக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு எண்ணெய் அல்லது லோசன் கலந்த கிறீம் ஒன்றை உடலில் தடவுங்கள். எனினும் கால் விரல்களுக்கு இடையில் பூச வேண்டாம்.
- குளித்த பின்பு அல்லது கால்களைக் கழுவிய பின்பு நகங்கள் இலகுவாக இருக்கும் போது முறையான நகவெட்டியை உபயோகித்து மிகவும் பாதுகாப்பாக விரல்களுக்குக் காயங்கள் ஏற்படாமல் நகங்களை வெட்டவும் உங்களுக்கு முடியாதவிடத்து அடுத்தவரின் உதவியை நாடவும்.
- வியர்வையை உறிஞ்சும் தூய பருத்தியிலான சுத்தமான உள்ளாடைகள், கீழாடைகள், காலுறைகள் போன்ற வற்றைத் தினமும் அணியுங்கள். இதனால் காற்றோட்டம் ஏற்பட்டு உடலைப் பாதுகாக்கும், நைலோன் வகையிலான காலுறைகள், உள்ளாடைகள் அணிவதைத் தவிருங்கள். காலுறை இன்றிச் சப்பாத்து அணிவதைத் தவிருங்கள்.
- வெப்பம் காரணமாக கொப்பளங்கள் உடலில் ஏற்படுவதைத் தவிருங்கள் உதாரணம் அதிக சூடான நீரில் குளித்தல், சூடான நிலத்தில் வெறும் காலுடன் நடத்தல், சூடான சைலன்சர் மேல் கால் வைத்தல் போன்ற வெப்பமான பொருள்களை நேரடியாகத் தொடுவதைத் தவிருங்கள்.
- உங்கள் தோலில், உடலில் ஏற்படும் காயங்களைக் கவனமாகப் பராமரிக்கவும் தூய துணிகளைக் காயங்களுக்கு வைத்துக் கட்டவும். நீரிழிவு நோயாளிகள் காயங்களையும், புண்களையும் கவனமாகப் பராமரிப்பதன் மூலம் தசைத் திசுக்கள், குருதிக் குழாய்கள் தொற்றுக்களைத் தவிர்ப்பதால் உடலில் இதர பாகங்களுக்கும் தொற்றுப் பரவு வதைத் தவிர்க்கலாம். அத்துடன் தொற்றினால் ஏற்படும் அங்க இழப்புக்களையும் தவிர்க்கலாம்.
- ஓரே இடத்தில் இன்சுலின் போடுவதைத் தவிருங்கள் இன்சுலின் ஊசி போடும் இடத்தில் தடிப்பு, அரிப்பு, குழிகள், நிறமாற்றம், புண்ணாதல் போன்றன ஏற்படின் வைத்திய சிகிச்சையும் ஆலோசனையையும் பெறவும்.
எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதன வைத்தியசாலை.