மேக நோய் / சிபிலிஸ் ( Syphilis) என்றால் என்ன?
மேக நோய் / சிபிலிஸ் என்னும் நோய் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற Treponema Pallidum எனும் சுருளி வடிவம் கொண்ட அசையும் ஆற்றலுடைய பற்றீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோய் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இந்த நோயின் தாக்கமும், பரவுகையும் எவ்வாறு உள்ளது?
இந்த நோய் பாலியல் தொழிலாளர் போன்றவர்களையே அதிகம் பீடிக்கின்றது. மேலும் ஓரினச் சேர்க்கையிலீடுபடும் ஆண்கள், நோயாளித் தாய்மாருக்குப் பிறக்கும் சிசுக்களையும் தொற்றுகின்றது. முதன்மையான ( Primary Suphillis) மற்றும் துணையான ( Second ary Syphillis) மேக நோய் பெருமளவில் தாயிலிருந்து சிசுவுக்குக் கடத்தப்படுகின்றது.
மேகநோய்க்கிருமி அகவணியில் ஏற்படும் காயமூடாகத் தொற்றுகிறது. நோய்க்கிருமி தொற்றி 10 -90 நாள்களில் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுகின்றன.
மேகநோய்க்கான அறிகுறிகள் எவை?
மேகநோய் ஏற்படும் காலம், ஏற்படுத்தும் தாக்கமும் ஆகியவற்றைக்கொண்டு முதன்மையான மேகநோய் ( Primary Suphillis) துணையான ( Second ary Syphillis) மற்றும் மூன்றாவது மேகநோய் ( Tertiary Syphilis) என வகைப்படுத்தலாம்.
முதன்மையான மேகநோய்
இது நோய்க்கிருமி தொற்றி 2 -10 கிழமைகளில் ஏற்படுகிறது. நோய்க்கிருமி தொற்றிய பகுதியில் நோவற்ற சிறிய வீக்கம் முதலில் தென்படும். இது பின்னர் சிறிய புண்ணாக மாறுகிறது. தொடர்ந்து வலியற்ற இறப்பர் தன்மையான நிணநீர்க்கணுக்கள் குறிப்பிட்ட பகுதியிலும் பின் உடலேங்கும் தோன்றும். மேக நோய் புண் மல வாசலை, வாயைச் சூழவுள்ள பகுதியிலும் ஆண்குறி, பெண்களில் யோனிவழி, கருப்பைக் கழுத்து போன்ற அங்கங்களிலும் ஏற்படும்.
துணையான / இரண்டாவது மேக நோய்
முதன்மையான மேகநோய் தோன்றி 2- 10 கிழமைகளின் பின் துணையான மேக நோயா மாற்றமடைகின்றது. நோய்க்கிருமி தொற்றிய பகுதியிலிருந்து குருதி மூலம் உடலெங்கும் பரவுகிறது. இதன்போது காய்ச்சல், தசைநோவு, தலையிடி, கைகால் நோவு போன்ற அறிகுறிகளும், தோல் அழற்சி, நிணநீர்க்கணு வீக்கம், அகவணிப்புண் போன்றவையும் வெளிக்காட்டப்படும்.
தோல் அழற்சியானது ஆரம்பத்தில் சிவப்புநிறமான பொட்டுளும், தொடர்ந்து செப்பு நிறமான கணுவடிவிலான வீக்கமாகவும் விருத்தியடைகின்றது. இவை பொதுவாக உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் அக்குள் பகுதிகளில் காணப்படும், ஈரலிப்பான பகுதிகளில் பாலூண்ணி வடிவிலான கணுக்கள் தோன்றும்.
இதன்போது ஈரல் அழற்சி, என்பு அழற்சி ( என்பு நோவு) கண்ணின் கருமணியழற்சி, மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களும் ஏற்படும். அத்துடன் விழித்திரை, சிறுநீரகம் போன்றவையும் பாதிக்கப்படலாம். முதன்மையான மற்றும் துணையான மேகநோய் தாமாகவே குணமானாலும் வீரியமான தொற்றுகையை ஏற்படுத்தக்கூடியன.
மேக நோயாளிகளில் 30 வீதமானோர் சிகிச்சையின்றித் தாமாகவே குணமடைவர். 30 வீதமானோர் நோய் உறங்கு நிலைக்குச் செல்வர். மிகுதியானோர் மூன்றாவது மேகநோய்க்கு ( Tertiary Syphilis) ஆளாவார். நோய் உறங்னு நிலைக்குட்பட்டோர் நோய் அறிகுறிகளைக் கொண்டிராதவர்களாகவும் ஆனால் நோய் காவிகளாகவும் தொழிற்படுவர்.
மூன்றாவது மேகநோய் ( Tertiary Syphilis)
- இந்த நோய் நிலைமை நோய்க்கிருமி தொற்றி 3 – 5 வருடங்களின் பின் வெளிக்காட்டப்படும்.
- இதன்போது எதட்டச் எனப்படும் இழைய வளர்ச்சி, தோல் , எலும்பு மற்றும் ஈரலில் ஏற்படுகின்றது.
- தோலில் ஏற்படும்இழைய வளர்ச்சி பொருக்கு அல்லது புண் போன்று விருத்தியடையும், ஈற்றில் மாறி வடுக்களைத் தோற்றுவிக்கும். மேலும் இவை ஈரல் விதைகள், இரப்பை, நாக்கு போன்ற அங்கங்களையும் பாதிக்கின்றன.
மேகநோயால் ஏற்படும் சிக்கல் நிலைகள் எவை?
- இருதய மற்றும் குருதிக் கலன் பாதிப்பு – பொதுவாக நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டு அண்ணளவாக 20 வருடங்களின் பின் ஏற்படலாம். தொகுதிப் பெருநாடி அழற்சி , கல்சியம் படிதல், வால்வு பாதிப்பு, இருதயச் செயற்பாட்டுத்திறன் குறைவு, தொகுதிப் பெருநாடி வீக்கம் ஏற்பட்டு மரணத்திற்கு இட்டுச் செல்லலாம்.
- நரம்பு பாதிப்பு – பொதுவாக அறிகுறியை வெளிக்காட்டுவதில்லை, மைய நரம்புகளின் செயழிலப்பு பாரிசவாதம், நரம்பு அழிவு ஏற்படலாம். ஞாபகமறதி, கவனக்குறைபாடு, வலிப்பு, பலவீனம், நடத்தலில் பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
தாய் – சேய் பரவுகை பற்றி விபரம்
- நோய்த் தொற்றுகைக்குட்டபட்ட கர்ப்பிணித்தாய் தனது சிசுவிற்கு 10 – 15 கர்ப்ப கால வாரங்களில் சூழ் வித்தகம் மூலம் நோய்க்கிருமி பரவக்காரண மாகின்றார்.
- நோய்த் தொற்றிற்குட்பட்ட சிசுக்களின் கருச்சிதைவு, சிறு இறப்பு பிரசவத்தின் போது இறப்பு, முதிராப் பிறப்பு, காரணமாகின்றது
- நோய்த் தொற்றிற்குட்பட்ட சிசுக்களில் தோல் அழற்சி, ஈரல் பாதிப்பு, பார்வைக்குறைபாடு என்பு அழற்சி, நரம்புப் பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மேகநோயை எவ்வாறு கண்டறியலாம்?
மேகநோயை குருதிப் பரிசோதனை, நுணுக்குக்காட்டிப் பரிசோதனை போன்றவை மூலம் கண்டறியலாம்.
மேகநோய்க்கான சிகிச்சை
மேகநோய்க்கான அறிகுறிகள் காணப்படுமிடத்து அல்லது மேக நோயாளிகளுடன் பாலூறவு வைத்திருப்பின் உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவதுடன் பாலூறவுபட பங்காளியையும் சிகிச்சைக்குட்படுத்த வேண்டும். இதன் மூலம் நோயினை குணப்படுத்துவதுடன் பரவுதலையும் தவிர்க்கலாம்.
கர்ப்பிணித்தாயை உடனடியாகச் சிகிச்சைக்குட்படுத்துவதால் சிசுவிற்கு நோய் பரவுவதையும் அதன் சிக்கல் நிலையையும் தவிர்க்கலாம். பிரசவத்தின் பின் சிசுவையும் பரிசோதனைக்குட்படுத்தி தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும்.
மேகநோயை எவ்வாறு தடுக்கலாம்?
- சகல மேக நோயாளிகளுக்கும் முறையாக சிகிச்சையளித்தல்
- நோயாளியின் பாலியற் பங்காளிகளைக் கணடறிந்து சிகிச்சைக்குட்படுத்தல்.
- ஆணுறை / பெண்ணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளல்
- தனிமனித ஒழுக்க விழுமியங்களை இறுக்கமாகப் பேணுதல்
- மேகநோய் தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல்.
Dr.யோ.சிவாகரன்