அனைத்து வகைத் தீக்காயங்களுக்கும்!
உடனடியாக நெருப்பை அணையுங்கள், அல்லது தீக்காரணிகளை அந்த நபரிலிருந்து விலக்குங்கள்.(உதாரணமாக சூடானதிரவம், ஆவி, இரசாயனப் பொருள்கள் போன்றன)
தீச்சுவாலை இருப்பின் அந்த நபரை நிறுத்தி ( ஒடுவதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்) நிலத்தில் உருட்டி தீயை அணையுங்கள், மேலும் தடிப்பான போர்வையால் சுற்றி அணையுங்கள். மண்ணால் அணைத்தலை தவிர்க்க வேண்டும்) நீர் இருப்பின் நீரினாலும் அணைக்கலாம்.
உருகக்கூடிய பொருள்கள் உடலில் காணப்படின் அவற்றை விலக்குங்கள் இருக்கமான ஆடைகளை உடனடியாக விலக்குங்கள், ஆடையின் பகுதி எரிகாயங்களுடன் ஒட்டியிருப்பின் அப்பகுதியை சுற்றி வெட்டியெடுக்வும் தோலுடன் ஒட்டியிருக்கும் ஆடையின்பகுதியை நீக்க வேண்டாம். ஆபரணங்கள், இடுப்புப்பட்டி போன்றவற்றை உடனடியாக நீக்குங்கள், கழற்றுவதற்கு சிரமமாக இருப்பின் வெட்டி அகற்றுங்கள், ஏனெனில் எரிகாயங்கள் வேகமாக வீங்கக்கூடியவை. எனவே பின்னர் அகற்றுவது சிரமமாகிவிடும்.
எரிந்தகாயப்பகுதிகளை வலி குறையும்வரை ஓடும் குளிர்நீரின் கீழ் பிடிக்கவும். அல்லது குளிர்நீரினுள் அமிழ்த்தவும் ( ஐஸ்தண்ணியோ, ஐஸ்கட்டியோ பாவிக்க வேண்டாம்) ஏனெனில் அவை உடல் வெப்பநிலையைக் குறைத்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பின்னர் சுத்தமான தொற்று நீக்கிய ஒடாத துணியினால் காயத்தை கட்டுப்போடுங்கள், பட்டர், கிறீம்களை எரி காயங்களில் போடவேண்டாம், கொப்பளங்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றை உடைக்கவேண்டாம். ஏனெனில் இவை எரிகாயத்தில் கிருமித்தொற்றை ஏற்படுத்திவிடும். தாங்க முடியாத வலியிருப்பின் பனடோல் அல்லது புரூபன் மாத்திரையைக் கொடுங்கள். சிறுவர்களாக இருப்பின் மருத்துவ ஆலோசனையின்றி மாத்திரை கொடுக்க வேண்டாம்.
எரிகாயம் பெரியதாயிருப்பின் ஆழமானதாயிருப்பின் வெப்ப இழப்பால் ஏற்படும் நரம்புமண்டல அதிர்ச்சியை (Shock) தவிர்ப்பதற்கு எரிகாயத்துக்குள்ளானவரை மட்டமான தரையில் படுக்கச் செய்து பாதங்களை உயர்த்தி வைப்பதுடன், தடிப்பான போர்வையால் போர்த்தி வைத்திருங்கள். இயலுமானால் எரிகாயத்தை இதயமட்டத்திற்கு மேல் வைத்திருத்தல் சிறந்தது. வைத்திய உதவியை நாடுவது அவசியம். எரிகாயம் மிகவும் ஆழமானதாயிருப்பின் உடனடியாக அவசரசிகிச்சை பிரிவுக்கு அறிவிக்க வேண்டும் அத்துடன் நீரினால் கழுவுவதையும் தவிர்த்தல் வேண்டும். சிறிய தீக்காயமாக இருப்பினும், காய்ச்சல் இருப்பின், அல்லது எரிகாயம் சிவந்து, வீங்கி காணப்படின் அல்லது எரிகாயம் தொற்றுக்குள்ளாகியிருப்பின் அல்லது எரிகாயத்திலிருந்து நீர் வடிந்தால் வைத்தியரை நாடுவது அவசியம்.
சுவாசப்பகுதி எரிந்திருப்பின், தரையில் படுக்கவைத்திருக்கும் பொழுது தலையின் கீழ் தலையணையோ, வேறு பொருள்களோ வைக்க வேண்டாம். ஏனெனில் இவை சுவாசப்பாதையை அடைத்துவிடலாம்.
முகத்தில் எரிகாயம் ஏற்பட்டிருப்பின் அந்த நபரை இருத்தி வைத்திருக்க வேண்டும். அவசரசிகிச்சை உதவி கிடைக்கும் வரை நாடித்துடிப்பை, சுவாசத்தை கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இரசாயனப் பொருள்களினால் ஏற்பட்ட எரிகாயமாக இருப்பின் நீரினால் கழுவும் பொழுது உடலின் ஏனைய பகுதிகளுக்கு அவ் இரசாயனம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமிலத்தை காரத்தாலோ, காரத்தை அமிலத்தாலோ நடுநிலைப்படுத்த முயலவேண்டாம். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இரசாயனப்பொருளால் கண்பகுதி பாதிக்கப்பட்டிருப்பின் கண்ணை அகலத்திறந்து குளிர்ந்த ஒடும்நீரின் கீழ் பிடிக்கவும் Contact lence கண்ணினுள் வைத்திருப்பின் அவற்றை ஒடும் நீரினாலேயே அகற்றுங்கள் கைகளை பாவிக்கவேண்டாம் கண்ணின் மீது துணியால் கட்டவேண்டாம்.
Dr. துஷ்யந்தினி ஆனந்தலிங்கம்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை