“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நோய் என்று கூறலே நிறைவான நவநாகரிகமாக மாறி வருகின்றது. அபிவிருத்தியடைந்த பணக்கார நாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட தொற்றல்லா நோய்களின் (Non Communicable Diseases) தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமை கண்கூடு.
ஒருவருக்கு உடல்நிறை, உயரம் என்பன தனித்துவமானதாக, அவருக்கே உரியதாக இருப்பதைப் போன்று, குருதியமுக்கமும் தனிநபருக்குரியதாகும். சாதாரண ஒருவரிலே நியமக் குருதியமுக்கமானது <120/80 mmHg ஆக இருத்தல் சிறந்தது எனவும், 120-129/<80-84 mmHg சாதாரணம் எனவும் 130-139/85-89 mmHg ஆக இருத்தல் உயர்குருதியமுக்கத்திற்கான முன்நிலை எனவும் > 140/90mmHg ஆக இருத்தல் உயர் குருதியமுக்கத்திற்கான முன் நிலை எனவும், >180/110 mmHg ஆக இருப்பின் தீவிரமான / உயிராபத்தை ஏற்படுத்த வல்ல உயர்குருதியமுக்கம் எனவும் வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றது.
பெரும்பாலான ( 80-90 வீதம்) நோயாளிகளில் அடிப்படை உயர் குருதியமுக்கமே (Essential hypertension) ஏற்படுகின்றது. இதற்கு பரம்பரைக் காரணிகள், குறைந்த பிறப்பு நிறை மற்றும் சூழற் காரணிகளான உயர் உடற்றிணிவுச் சுட்டி, அதிக மதுபானப் பாவனை, அதிகமாக சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், மன அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்றன காரணிகளாகின்றன. மாற்றமுடியாத காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்ற போதிலும் மாற்றக்கூடிய சூழற்காரணிகளை நியமமட்டத்தில் பேணுவதனூடாக உயர்குருதியமுக்கம் ஏற்படலைத் தாமதிக்க அல்லது ஏற்படாது தவிர்க்க முடியுமல்லவா?
உயர் குருதியமுக்கத்தின் விளைவாகப் பல சிக்கலான நோய் நிலைமைகள் உருவாகின்றன. உடலின் முக்கியமான அங்கங்களின் செயலிழப்பிற்கு உயர்குருதியமுக்கம் ஏதுவாகின்றது. சிறுநீரகம், இதயம், மூளை, கண், குருதிக்கலன்கள் போன்றன பாதிப்புக்கு உள்ளாகின்றன. நீண்டகாலச் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கும் மாரடைப்பு, இதய செயலிழப்பு ஏற்படுவதற்கும் வலிப்பு, மூளைத்தாக்கு / பாரிசவாதம்(stroke) ஏற்படுவதற்கும் கண் பார்வை இழத்தலுக்கும் பெருநாடி வெடிப்பு போன்ற உயிராபத்தை ஏற்படுத்த வல்ல நிலைமைகள் உருவாவதற்கும் கட்டுப்பாடற்ற உயர்குருதியமுக்கம் காரணமாகின்றது.
குருதியமுக்கம் அதிகரித்த நிலையில் காணப்படும் போது வைத்திய உதவியுடன் மருந்துகள் ஊடாக குருதியமுக்கத்தை நியம மட்டத்தில் பேணுவது அவசியமாகும். உயர் குருதியமுக்கத்திற்கு இரண்டாந்தரக் காரணிகள் இருப்பின் அவை கண்டறிப்பட வேண்டும். உயர்குருதியமுக்கத்திற்கான முன்நிலையில் (Pre hypertension) உள்ளவர்கள் வருடாந்தமும், மற்றையோர் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவதும் உடற் குருதியமுக்கத்தைப் பரீட்சித்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அத்துடன் பின்வருவனவற்றையும் கையாண்டு ஆரோக்கியமானவராக வாழுங்கள்…
- உங்கள் உடற்திணிவுச் சுட்டி 20 – 25ற்குமிடையில் பேணப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- தினமும் ஆகக் குறைந்தது 30 நிமிடமாவது காற்றுள்ள உடற்பயிற்சிகளில் (Aerobic exercise) ஈடுபடுங்கள். உதாரணம் வேகநடை, நீந்துதல், சைக்கிள் ஓடுதல்.
- கொழுப்புணவுகளையும், நிரம்பிய கொழுப்புணவுகளையும் தவிருங்கள்
- உப்புப் பாவனையை நன்கு குறையுங்கள் (<10mmol/day)
- மதுபானப் பாவனையைக் குறையுங்கள் அல்லது தவிருங்கள்.
- தினமும் பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் உண்ணுங்கள் ( 5 பகுதிகளுக்குக்(portions) கூடவாக)
- புகைப்பிடிக்காதீர்கள்
- உங்களின் நோய் நிலைமைகளுக்காக வழங்கப்படும் மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளுங்கள்.
- குருதிக் குளுக்கோஸ் மட்டத்தை நியம அளவில் பேணுங்கள்.
- உங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி வைத்தியரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
- வலிப்பு, தொடர்ச்சியான தலையிடி,திடீரெனக் கண்பார்வை மங்குதல், நெஞ்சுவலி, சிறுநீருடன் குருதி வெளியேறல், சிறுநீர் நுரைத்தல் போன்றன ஏற்படுமிடத்து வைத்திய உதவியை உடனடியாக நாடுங்கள்.
மருத்துவர். தேவரஞசனா புவனேந்திரன்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.