உலகில் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந்நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களைப் பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்ப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030ம் ஆண்டளவில் மொத்த நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 366 மில்லியனை அடையுமென அண்மைக்காலத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வெரு பத்து செக்கனிலும் இருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
2007 ம் ஆண்டில் இந்தியாவில் (40.9 மில்லியன்) அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் வாழுகின்றனர் எனவும் அடுத்ததாக சீனா (39.8 மில்லியன்) அதிகளவு நீரிழிவு நோயாளர்களை கொண்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு பத்துச் செக்கன்களுக்கு ஒருவர் சலரோகத்தினால் இறக்கின்றார். உலகிலே அதிகளவு இறப்பை வருவிக்கும் நோய்களில் நீரிழிவு நான்காவது இடத்தில் உள்ளது. ஆசியாவில் 45 மில்லியன் மக்கள் சலரோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சலரோக நோயாளிகளின் எண்ணிக்கையில் 20 வீதம் ஆகும். வகை II நீரிழிவானது (வேகமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டும்) நகர்ப்புறங்களிடையே அதிகளவில் காணப்படுகின்றது. இங்கு மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, உடற்பயிற்சியின் அளவு குறைவடைவது மட்டுமல்லாமல் செயற்கைமுறையில் பதமாக்கப்பட்ட, நார்ச்சத்து அகற்றப் பட்ட மற்றும் கொழுப்பின் அளவு கூடிய உணவு வகைகளை அதிகளவு உண்பதும், உடற்பருமன் அதிகரிப்பிற்கும் மற்றும் வகை II நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணங்களாய் உள்ளன.
இலங்கையில் மற்ற நாடுகளைப் போன்று நீரிழிவு நோயை மதிப்பிடுவதற்கான முறைமைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. எனினும் 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் 14.2 % ஆன ஆண்களும் 13.5% பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இலங்கையில் 2 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன?
உடலினால் குருதியினுள் குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்த முடியாத நிலையே “நீரிழிவு நோய்” அல்லது “டயபிடிஸ்” எனப்படும். குளுக்கோசானது மாப்பொருள் அல்லது மாச்சத்து அல்லது காபோவைதரேற்று நிறைந்த உணவுகளில் இருந்து உருவாக்கப்படுகின்றது. அதாவது பாண், சோறு, தானியங்கள், பழங்கள், சில மரக்கறி வகைகள், சீனி, மற்றும் தேன் போன்றவை உட்கொள்ளப்பட்டால் அவை சமிபாடு அடைகையில் குளுக்கோசு வெளிவிடப்படுகின்றது. இவ்வாறு வெளிவிடப்பட்ட குளுக்கோசு குடலினால் உறிஞ்சப்பட்டு குருதியினுள் விடப்படுகின்றது. பின்னர் குளுக்கோசு குருதி மூலமாக உடலின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. குளுக்கோசு பிரதானமான சக்தி முதலாகும். எனவே அது உடலின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும். குருதியினுள் காணப்படும் குளுக்கோசானது கலங்களுக்குள் சென்றால் மாத்திரமே சத்தி முதலாக பயன்படுத்தப்படமுடியும்.
இவ்வாறு குளுக்கோசு கலங்களினுள் செல்வதற்கு இன்சுலின் எனும் ஹோமோன் அவசியமாகும். எனவே இன்சுலினின் உதவியினால் கலங்களுக்குள் சென்ற குளுக்கோசு சக்தியாக பயன்படுத்தப்படுகின்றது.
இன்சுலின்
இன்சுலின் ஆனது ஒரு ஹோமோனாகும். இது சதையி எனும் சுரப்பியினால் சுரக்கப்படுகின்றது. குளுக்கோசு குருதியில் அதிகரிக்கும் பொழுது சதையி தூண்டப்பட்டு இன்சுலின் குருதியில் வெளிவிடப்படும்.
நீரிழிவு நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?
சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவதனாலோ அல்லது இன்சுலின் செயற்பாட்டில் தடை (Insulin resistance) ஏற்படுவதாலோ நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயானது இரு வகைப்படுத்தப்படுகின்றது.
- வகை I நீரிழிவு நோய் ( type I diabetes)
இது பொதுவாக இளம் பிராயத்தினரிடையே ஏற்படுகின்றது. முன்னர் இன்சுலினில் தங்கியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது ( Insulin dependent diabetes mellitus [IDDM]) இங்கு இன்சுலின் தேவையான அளவில் சதையச் சுரப்பியினால் சுரக்கப்படுவதில்லை. எனவே நோய் அறிகுறிகள் திடீரெனவும் பாரதூரமானதாகவும் வெளிக்காட்டப்படும் - வகை II நீரிழிவு நோய் ( type II diabetes)
இவ் வகை நோயானது பெரும்பாலும் வயது வந்தவர் களிடமும் மற்றும் உடற்பருமனானவர்களிடமும் ஏற்படுகின்றது. முன்னர் இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது.(non –insulin dependent diabetes mellitus [NIDDM]) இங்கு சதையிச் சுரப்பியினால் இன்சுலின் சுரக்கப்படும் போதிலும் அது சாதாரணமாக தொழிற்படமாட்டாது. அதாவது இன்சுலினின் செயற்பாட்டில் தடை ஏற்படுவதால் (Indulin resistance) இவ்வகை நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இந்த வகையான நீரிழிவு நோயின் அறிகுறிகள் திடீரென வெளிப்படமாட்டாது படிப்படியாக அதிகரித்துச் செல்லும்.
நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாவன
அதிகரித்த குருதிக்குளுக்கோசின் அளவு சில நோய் அறிகுறிகளை காட்டும். அவையாவன
– சிறுநீர் அதிகளவில் வெளியேறுதல்
குருதியில் குளுக்கோசின் அதிகரிப்பானது குறித்த அளவைத் தாண்டும் போது (100mg/dl) குளுக்கோசு சிறுநீரில் வெளியேற்றப்படும். வெளியேறும் குளுக்கோசினோடு நீரும் சிறுநீரில் வெளியேற்றப்படும். வெளியேறும் குளுக்கோசினோடு நீரும் உடலிருந்து வெளியேறுவதால் அதிகளவு சிறுநீர் வெளியேறுகிறது.
அதிக தாகம்
உடலிருந்து அதிகளவான நீர் வெளியேறுவதால் உடலில் நீரின் அளவு குறைவடையும். இதனால் அதிக தாகம் ஏற்படும்.
அதிக களைப்பு, சோர்வு
உடலில் சக்தியைத் தொகுப்பதற்கு கலங்களுக்குள் குளுக்கோசு செல்ல வேண்டும். நீரிழிவு நோயில் இச் செயற்பாடு தடைப்படுவதால்/ குறைவடைவதால் களைப்பு, சோர்வு என்பன ஏற்படும்.
நிறைக்குறைவு
உடலில் குளுக்கோசு சக்தி முதலாக பயன்படுவது குறைவடைவதால் உடலில் தசைகளில் காணப்படும் புரதம் உடைக்கப்பட்டு சக்தி முதலாக பயன்படுத்தப்படும். எனவே உடல் நிறை குறைவடையும்.
அதிக பசி
குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரித்த அளவில் காணப்படினும் சக்தி முதலின் அளவு குறைவதால் பசி தூண்டப்படும்.
தோலில் தொற்றுக்கள் ஏற்படுதல்
நீரிழிவு நோயாளியின் உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
குறிப்பு – நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாக மேற்குறிப்பிட்டவைகள் உள்ள போதிலும் பெரும்பாலனவர்கள் நோய் அறிகுறிகள் எதுவும் அற்றவர்களாக காணப்படுவர். மேலும் பலருக்கு மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகளில் ஒன்றோ அல்லது சில நோய் அறிகுறிகளோ மட்டுமே காணப்படும்.
நீரிழிவு நோயைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள்
ஒருவர் நீரிழிவு நோயாளியா இல்லையா என்பதை இலகுவான குருதிச் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்
- Fasting blood sugar சில (10) மணித்தியாலங்கள் பட்டினிக்குப் பின்னான குருதிக் குளுக்கோசின் அளவு
- Random blood sugar – எழுந்தமான நேரத்தில் குருதியில் குளுக்கோசின் அளவு
- Post prandial blood sugar உணவு உண்டபின் 2 மணித்தியாலத்தின் பின்னான குருதிக் குளுக்கோசின் அளவு
- Glycosylated haemoglobin குளுக்கோசு ஏற்றப்பட்ட ஹீமோகுளோபினின் அளவு
நீரிழிவு நோயானது குணப்படுத்த முடியாத நோயாகும். எனினும் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் பேணுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.