மனிதன் உயிர்வாழ்வதற்கும் உயர்வு பெறுவதற்கும் மனித நேயமிக்க உயர் பண்புகளுடன் வாழ்வதற்கும் தலையாய துணை போவது அவன் உட்கொள்ளும் உணவு. இதைப் பண்டைக் காலத்து ஞானிகள் தவமுனிவர்கள், அறிஞர்கள் முதல் இன்றைய நவீன விஞ்ஞானிகள் வைத்தியர்கள் வரை அறிந்துள்ளார்கள். “அன்னப் பிரம்மம்” அன்னம் என்பது உணவு பிரம்மம் என்பது இறைவன் எனவே உணவு தெய்வீகமானது. “அன்னம் ந நிந்த்யாத்” “உணவை இகழாதே’ இவை எல்லாம் தேவ வாக்குகள். எனவே இன்றும் நாங்கள் நல் வாழ்வு வாழ்வதற்கு உணவு எப்படி அமைய வேண்டும், நாங்கள் உண்ணும் உணவு எங்களுக்கு எங்கள் உடல் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா என்பனவற்றை தெரிந்து கொள்வதால் நாங்கள் உடல் ஆரோக்கியத்துடனும் உள்ள உயர்வுடனும் ஆன்மீக வளர்ச்சியுடனும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
நாங்கள் உணவு உண்ணமுதல் உணவு பரிமாறப்பட்டதும். ஒரு சில விநாடிகள் அமைதியாகப் பிரார்த்தனை செய்யத பின்னரே உணவு உண்ணத் தொடங்குகிறோம். இந்தப் பிரார்த்தனை எமக்கு உணவு தந்தருளும் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு உணவு எதற்காக என்பதையும் தெரிவிக்கிற ஒன்றாக அமைவதை ஆதிசங்கர் அன்னபூரணி நாயகியைக் குறித்துப் போற்றிய அன்னபூரணி தோத்திரத்தில் நிறைவாக ஞான வைராக்கிய சித்தியர்த்தம் பி(B)ஸா தேஹி பார்வதி எனக்கு நல்லறிவும் ஆசையற்ற தன்மையும் (நல்லொழுக்கமும்) கை கூடும் வகையில் உணவு தாருங்கள் என்பது இதன் பொருள். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது நாம் உண்ணும் உணவு நமக்கு நல்லறிவையும் நல்ஒழுக்கதையும் தரவேண்டும். என்பதாகும்.
ஒரு நீதி தவறாத சக்கரவர்த்தி ஒரு சமயம் ஒரு சிறந்த தவஞானியைத் தனது அரண்மனைக்கு அழைத்து உபசரித்தார். மூன்று நாட்கள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் எனப் பணிவாக வேண்டினார். ம்ன்னரது பக்தியையும் பணிவையும் உணர்ந்த அந்த மாபெரும் தபோதனர் அந்த வேண்டுகோளை ஏற்று அரண்மனையில் தங்கினார். இரண்டாவது நாள் இரவு உணவு ஏற்ற பின் முனிவர் உறங்கச் சென்றார். ஆனால் அன்று அவரால் நிம்மதியாக உறங்க இயலவில்லை. அவரது மனம் பல தீயசிந்தனைகளால் கலங்கியது குழப்பமுற்றது. அரண்மனைப்பொருள்களை களவாட வேணும், தவறான சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி தலை தூக்கி அவரை கலக்கின. அடுத்த நாட் காலையில் தான் பட்ட அவலத்தைச் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தி மன்னா இத்தனை காலம் எனக்கு ஏற்படாத தீய எண்ணங்கள் பல என்னைக் கடந்த இரவு கலக்கின இதற்கு நான் நேற்று உட்கொண்ட உணவில் தான் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிவித்தார். சிறந்த மாபெரும் ஒழுக்க சீலனான சக்கரவர்த்தி அதைப் புரிந்து கொண்டு அரண்மனை உணவு தயாரிப்பவர்களை அழைத்து விசாரித்தார். அப்பொழுது நேற்றுத் தயாரித்த உணவுக்கான பொருட்கள் தவறான இடங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டன என்பது தெரியவந்தது. தவறான உணவு உள்ளத்தைப் பாதிக்கும் என்பதை இதன் மூலம் நாங்கள் அறியலாம்.
விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இன்று இதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டும் உணவு உண்ணும் போது நாங்கள் உண்ணும் உணவிலும் அவசியமாகிறது.
நாங்கள் உண்ணும் உணவு எமக்கு நலம் தரவேண்டும். நலம் எனும் போது உடல் ஆரோக்கியம் மேலான எண்ணங்கள் இரண்டையும் குறிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கு எவை எவை உகந்த உணவுகளோ அவற்றை அளவறிந்து காலம் உணர்ந்து தேவைக்கேற்ப நாம் உண்ண அந்த உணவே எமக்கு நல்ல எண்ணங்கள் நல் அறிவு இவைகளைத் தந்து உதவும். இது விஞ்ஞான பூர்வமான உண்மை. அன்று மெய்ஞ்ஞானிகள் காட்டிய உண்மை.
இன்று விஞ்ஞான ரீதியாகப் பார்க்கில் உணவு எல்லாவகையிலும் சீர் அமைந்த்தாக (Balanced Diet) இருக்க வேண்டும். மாச்சத்து (starch) தாதுக்கள் ( Minerals) புரதச்சத்து (Protein) கொழுப்புச் சத்து (Fat) உயிர்ச்சத்து (vitamin) இவை எல்லாம் பொருந்திய உணவு. இந்தச் சத்துக்கள் அவரவர் உடல் தேவைகளைப்பொறுத்து அளவில் மாறுபடும். இவற்றை நாம் தகுதி உணவுக்கலை அறிஞர் மூலம் ( Dietician) அறிந்து கொள்ள முடியும். இங்கு நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டியது யாதெனில் நாம் “வாழ்வதற்காக உணவே தவிர – நாம் உண்பதற்காக வாழ்வு இல்ல” (we eat to live – not live to eat) என்பதாகும். வள்ளுவம் இதை அழகாகக் கூறும்.
மருந்து என வேண்ண்டாவாம்யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
முன் உண்ட உணவு செரித்தபின் தக்க அளவு உண்டால் உடலுக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.
“அற்றால் அளவு அறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிது உய்க்குமாறு“
உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு உண்பவன் பெற்ற உடம்மை நெடுங்காலம் வபேணிக் காக்கும் வழியாகும்.
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்கதுவரப்பசித்து“
முன் உண்ட உணவு சமித்த பின் மாறுபாடில்லா உணவைக் கண்டறிந்து நன்றாகப் பசித்த பின் உண்ண வேண்டும்.
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
மாறுபாடில்லாத உணவை அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது.
“இழிவு அறிந்து உண்பான்கண்இன்பம் போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண்நோய்”
குறைந்த அளவு உணவு அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது.
எனவே எங்கள் உடல் ஆரோக்கியம் உளநலம், தூய சிந்தனைகள் மன அமைதி ஒருமைப்பாடு இவற்றை ஏற்றம் காண வைப்பதற்கான பொருத்தமான தூய உணவை நாம் உண்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் காலம் அறிந்து தேவை கண்டு அளேவோடு அறிவோடு உண்பதுமாம். அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை ஒருபோதும் மறத்தலாகாது.
இன்று அநேகமானவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் எடுப்பதில்லை. வாய்க்குச் சுவை வயிற்றுக்கு வருத்தம் பிழையான உணவுப் பழக்கமே இன்று மிகுந்து காணப்படும் நீரிழிவு, சிறுநீரக நோய்கள், இருதய நோய், குடல் புண், குடல்புற்று நோய், இரத்த அழுத்தம் போன்ற பல பல நோய்கள் அதிகரித்துக் காணப்படுவது நம்மவர்களது தவறான உணவுப் பழக்கத்தாலேஎனின் அது மிகை அல்ல.
வரமுன் காப்பதே அறிவுடமை. இளம் வயது தொட்டு நாங்கள் உணவில் ஆரோக்கிய விதிகளை அறிந்து. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மேற்கூறிய நோய்கள் எம்மை அணுகாமல் முதுமையிலும் இளமையாக வாழலாம்.
ஆரோக்கியமாக உணவு விதிகளோடு உணவைத் தயாரிப்பதிலும் சுத்தம் பேணுதல் அவசியம். ஒரு முது மொழி கூறுவார்கள் “பாகசுத்தி பாத்திர சுத்தி பரிமாறல் சுத்தி” உணவை சுத்தமாக சமைத்தல் தூய பாத்திரங்களில் பேணுதல் உணவு பரிமாறும் போதும் உண்ணும் தூய்மையாக சுத்தமாக இருத்தல் எல்லாமே சுகவாழ்வுக்கு அவசியமாம். இதை கவனியாத நிலையில் பல தொற்று நோய்கள் உதாரணமாக நெருப்புக்காய்ச்சல், பேதிநோய், வயிற்றோட்டம் கிருமிகள் தாக்கம் போன்றன ஏற்பட வாய்ப்புண்டு.
சுருங்கக் கூறின் உணவு எல்லாவிதமான கூறுகளையும் கொண்ட சீர் அல்லது சம உணவாக (Balance Diet) இருத்தல் உணவை ருசிக்காக அன்றி காலம் அறிந்து உண்ணல் அளவோடு உண்ணல், உண்ணும் பொழுது அமைதியாக ஆறுதலாக மன ஒழுக்கதிதுடன் ( அதாவது ஏனைய கவலைகளை ஒதுக்கி படபடப்பின்றி உண்ணல் TV பார்த்துக் கொண்டோ, கோபம் பட படப்புடன் கதைத்துக் கொண்டோ உண்ணுதல் தவிர்த்து) இதை எல்லாம் நாங்கள் நோய் இன்றி பூரண ஆயுளுடன் வாழ வழி வகுக்கும்.
தூய உணவு என்பதில் தாவர உணவே மிக மிக உயர்ந்தது. சிறந்தது, ஆரோக்கியம் தருவது. அன்பைப் பெருக்குவது. அமிர்தம் போன்றது. தாவர உணவில் இல்லாத சக்தியே இல்லை என்பது உறுதி. ஆராய்ச்சி தந்துள்ள உண்மை. எங்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமான மாச்சத்து (starch) தாதுக்கள் ( Minerals) புரதச்சத்து (Protein) கொழுப்புச் சத்து (Fat) உயிர்ச்சத்து (vitamin) உலோக்க் கூறுகள் (Minerals) எல்லாமே காய் பழவகை, கீரை வகைகள், தானிய வகைகள், பால், நல்எண்ணெய், சுத்தமாக பசுநெய் போன்றவற்றில் தேவையான அளவு உண்டு. உணவு வல்லுநர்கள் மூலம் (Dietician) இவற்றை நாம் நன்கு அறிந்து கொண்டு எமக்குத் தேவையான உணவைப் பயன்படுத்தி எமது உடல் உள நலத்தைப் சீராகப் பேணலாம்.
இயற்கை எமக்குக் காட்டுவதும் தாவர உணவின் உயர்வை எமக்கு விளக்குகிறது. நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் நாங்கள் வாழலாம். யானை பசு,எருது,மான்,குதிரை,ஒட்டகம், போன்ற ஆக்க வேலைகள் செய்கிற விலங்குகள் எல்லாம் தாவரங்களையே உண்கின்றன. நீண்ட காலம் வாழ்கின்றன. யானை 100 வருடம் வரை வாழ்கிறது. குதிரை சக்தி அளப்பரியது. மானின் வேகம் எருதின் உழைப்பு பசுவின் புனிதம் இவை பற்றி ஆழ்ந்து சிந்திப்போம்.
மாறாக மாமிசங்களை உண்ணும் மிருகங்கள் 10 -1 5 வருடங்களே உயிர் வாழ்கின்றன. உண்பது உறங்குவது தவிர அவை வேறு என்ன செய்கின்றன?
மாமிச உணவு பலவகையான ஆரோக்கியக் குறைவுகள் உதாரணம் – அமிலம், குடற்புண், வாதநோய்கள், தோல்வியாதிகள், ஆகியவற்றுக்குக் காரணமாக அமைகிறது. விஞ்ஞான பூர்வமாக நவீன மருத்துவர்கள் கண்ட உண்மை பொருளாதா வகையிலும் ஒரு மிருகத்துக்கு 10 – 15 கிலோ தாவர உணவு அளிப்பதன் மூலம் இருவர் உண்ணக்கூடிய 1கிலோ இறைச்சியைத்தான் பெறமுடியும் என அறியமுடிகிறது.
சுருங்கக்கூறின், கிருமி நோய்கள், குடற்புண் (Ulcer) வாத நோய்கள், தோல் நோய்கள், ஆஸ்த்துமா, உளநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், புற்று நோய், சிறுநீரகக் கோளாறுகள் இவை எல்லாம் உணவிலிருந்து அசைவ உணவு நீக்கப்படுமிடத்து எங்களை அணுகுவதில்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே நாங்கள் நீடுழிவாழ்வதற்கு ஆற்றல் மிக்கவர்களாக அறிவு, அமைதி, நற்குணம் கூடி வாழ்வதற்கு உதவும் தாவர உணவுகளை உண்ணுதல் சிறந்ததாகும்.
தாவர உணவு உண்பவர்களும் நோயின்றி வாழ்வதற்கு அளவோடு தேவை அறிந்து, வகை தெரிந்து உண்ண வேண்டும். போதிய அளவு கொதிக்கவைத்து ஆறிய நீர் இயற்கையான பழச்சாறுகள் (போத்தல்கள் அல்ல) அருந்த வேண்டும். இனிப்புப் பலகாரங்கள், Chocolates Ice Cream போன்ற இனிப்பு வகைகள், புளிப்புப் பண்டங்கள் இவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
நிறைவாக நாம் உண்ணும் உணவு நமக்கு உடல் வளத்தைத் தருவதோடு அமையாமல் நம் உள்ளத்தையும் ஓங்குவிக்கிறது. எனவே நாம் உணவு உட்கொள்ளும் போது அமைதியாக, அன்பாக, மனமகிழ்வோடு உண்ண வேண்டும். இயன்றளவு குடும்பத்தினருடன் அன்பர்களுடன் சேர்ந்து உண்ணுதல் நன்று. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, வீண் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டோ ஒரு போதும் உணவு உட்கொள்ளலாகாது. பட படப்பாக, அவசரமாக உண்ணக்கூடாது. உணவு அருந்த முன்னரும் பின்னும் பிரார்த்தனை செய்து இறைவனுக்கு நாங்கள் நன்றி சொல்வதோடு நாம் உண்ணும் உணவை நாம் பெறுவதற்கு எத்தனைபேர் உழைத்திருக்கிறார்கள் என்று நினைவு கூர்ந்து அவர்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தித்து உண்ண வேண்டும். இது எங்களுக்கு மனநிறைவு, மனமகிழ்வு தரும். அதனால் எமது உடல் சீராக இயங்கும். மனதுக்கும் – எண்ணங்களுக்கும் உடலுக்கும் நேருங்கிய உறவு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள வேண்டும்.
அளவோடு உண்போம்
அமைதியாக உண்போம்
தூய உணவை உண்போம்
தூய்மையான உடல், சிந்தனையுடன்
உண்போம்
குடும்பத்தினருடன் உண்போம்
நன்றி உணர்வுகளுடன் உண்போம்.
நலம் என்றும் பெறுவோம்.
வைத்திய கலாநிதி தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா
பொது வைத்திய நிபுணர்
யாழ் போதனாவைத்தியசாலை
யாழப்பாணம்.