தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும் கூட,
சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களான,
- மருந்துகளின் அவசியத்தை உணராமை.
- நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் கவனயீனமாக இருத்தல்.
- மருந்து பாவிக்கும் முறை பற்றியும், அதன் அவசியம் பற்றி உரிய விளக்கம் அளிக்கப்படாமை.
- வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியில் வேண்டும் பொழுது அதிக செலவாகின்றமை.
- பெண்களுக்கு குடும்பச்சுமை அதிகமாக இருத்தல்.
மருந்துகளை ஒழுங்மகாகப் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாகும். உதாரணமாக: சலரோகத்துக்குப் பாவிக்க வேண்டிய மருந்து ஒன்றைப் பாவிக்காமல் விடுவதால் சலரோகம் கட்டுப்பாட்டுக்கு வருவதில்லை. நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வைத்தியர் மருந்துகளின் அளவைக் கூட்ட நேரிடுகிறது. இதனால் நோய் குணமடையாமல் விடுவதோடு மருந்துகளின் பக்க விளைவுகளினால் நோயாளி பாதிக்கப்படுகின்றார். இதைத் தடுப்பதானது நம் அனைவரினதும் கரங்களிலேயே உள்ளது.
இதனைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?
- பாவிக்கும் மருந்துகளின் அவசியத்தையும், அவை ஒவ்வொன்றையும் என்ன அளவுகளில் பாவிக்க வேண்டும் என்பதையும் வைத்தியரிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
- நோயாளி தானாக இவற்றைச் செய்யமுடியாதவராயின், நோயாளியின் குடும்பத்தினரோ அல்லது உறவினரோ இவற்றைப் பற்றிப் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொருவகையான மருந்துகளையும் தனித்தனியே சிறிய போத்தல்களில் போட்டு, போத்தலில் மருந்தின் பெயரையும், பாவிக்கும் அளவையும் குறித்து வைக்க வேண்டும். அடுத்த தடைவ மருந்தாளரிடம் போத்தல்களைக் கொடுத்து மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
- வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியில் வேண்டும் போது விலை அதிகமாக இருப்பின் ஒரே தடவையில் நீண்ட காலத்துக்கு மருந்துகளை வேண்டாமல் குறுகிய இடைவெளியில் மருந்துகளை வேண்டலாம்.
- ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
- குறித்த ஒரு நோய்க்குப் பல இடங்களில் வைத்தியம் செய்வதைத் தவிர்த்தல் அவசியமானது.
மருந்துளினால் பக்க விளைவுகள் உருவாகுமிடத்து தன்னிச்சையாக மருந்துகளைப் பாவிக்காமல் விடுவதைவிட, வைத்தியருடன் கலந்தாலோசித்து வேறு மாற்று மருந்துகளைப் பாவிக்கலாம்.
மேற்சொன்ன விடயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், மருந்துகள் ஒழுங்கீனமாக பாவிப்பதைத் தவிர்க்கலாம். ஒரு நோயாளி மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பது, நோயாளி, வைத்தியர், மருந்தாளர், தாதியர், முக்கியமாகக் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரிலும் தங்கியுள்ளது.
மருந்துகளை ஒழுங்காகப் பாவித்து நோயற்ற வாழ்வை அனுபவிப்போம்.
‘மருந்து கால், மதி முக்கால்’
Dr.S.வருண்பிரசாந்,
விடுதி வைத்தியர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.