எமது உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் முடி காணப்படுகின்றது. எமது உடலின் வெளித்தோலில் மயிர்புடைப்புக் கலங்கள் காணப்படுகின்றன. இக் கலங்கள் மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படும் போது பழைய கலங்கள் முடிகளாக வெளித்தள்ளப்படும். கெரற்றின் கொண்ட முடிகளாக உடலிற் காணப்படும்.
எமது தலையில் 100000 – 150000 வரையான முடிகள் உண்டு. இவற்றில் 100 வரையான முடிகள் நாளாந்தம் இறந்து விடுகின்றன. நாளாந்தம் வளர்ச்சியடையும் முடிகள் 1 வருடத்தில் 15Cm வரை வளரக்கூடியன. தலைமுடியில் 90% மானவை தொடர்ந்து வளர்ச்சியடைந்த படியே இருக்கும். மயிர்ப்புடைப்புக் கலங்களினால் உயிர்ப்பான முடி வளர்ப்பு செயற்பாடானது 2 – 6 வருடங்களுக்கு காணப்படும். இடைப்பட்ட காலப்பகுதியில் 2-3 கிழமையாகவும், தொடர்ந்து ஓய்வு நிலையில் 2-6 மாதங்களாகவும் இந்த மயிர்ப்புடைப்புக் கலங்களின் செயற்பாடு காணப்படும்.
வயது செல்லச் செல்ல முடி உதிர்தல் வீதமானது தொடர்ச்சியாக அதிகரிக்கும். அத்துடன் முடி உதிர்தலுக்குப் பரம்பரைக் காரணிகளும் காரணமாக இருக்கின்றன. அத்துடன் கடுமையான காய்ச்சல், உடல் நோய் நிலைகள், மன அழுத்தம், மகப்பேற்றுக்கு பின்னரான சில மருந்துப்பாவனை, எக்ஸ்ரே கதிர் உடலிற் படுதல், பங்கசுத் தொற்றுப் போன்றனவும் தலைமுடி உதிர்தலுக்கு காரணமாக அமைகின்றன. அதே போல் ‘சம்போ’ போன்றன பாவிப்பவர்களின் தலைமுடி மெல்லியதாக்கப்படுவதாலும் அத்துடன் தலையில் வெப்பக்காற்றுப் பிடிப்பதாலும் தலைமுடி பாதிக்கப்பட்டு முடி உதிரும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.