உங்கள் வீட்டில் 6 மாதத்தினை அடையும் குழந்தை உள்ளதா? அவ்வாறாயின் நீங்கள் இக்கட்டுரையை கவனத்துடன் வாசியுங்கள். உங்கள் குழந்தைக்கான தாய்ப்பாலுடன் கூடிய உணவூட்டலுக்குத் தயாராவதற்கு இது துணை புரியும்.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதுவரை கற்கண்டு நீர், கொதித்தாறிய நீர், கொத்தமல்லி, பணங்கட்டி, குளுக்கோசு நீர் என்பன கொடுக்கத்தேவையில்லை. தாய்ப்பாலிலுள்ள ஊட்டச்சத்தும் நீரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் பசியை ஆற்றவும் போதுமானது.
ஆறு மாத முடிவில், மேலதிக ஊட்டச்சத்துக்களைப் பெறவும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பசியைப் போக்கவும், குழந்தை முழுமையான குடும்ப உணவுக்குப் பழக்கப்படவும் புதிய ஆகாரங்களைப் பழக்குவது கட்டாயமாகின்றது. அவ்வாறு உணவொன்றைக் கொடுத்த பின்பு ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும்.
முதலில் சோற்றைக் கரையச் சமைத்து (அல்லது மிக்சியில் அடித்து) அதனுடன் தாய்ப்பாலைச் சேர்த்து, நீராக்கிய பின்பு நீராகாரமாக இரண்டு, மூன்று தேக்கரண்டியளவு ஒரு தடைவ கொடுக்கவும். இரண்டாம் நாளில் வேண்டியளவுக்கு ஒரு தடவையும், மூன்றாம் நாளில் நாளொன்றுக்கு இரண்டு தடவையும் கொடுக்கவும் புதிய உணவு வகைகளை மிகச் சிறியளவில் ஆரம்பிப்பதே சிறந்தது. சமிபாடு அடைகிறதா? எனக் கவனித்த பின்பே உணவின் அளவைக் கூட்டலாம். உணவூட்டலின் பின் ஓங்காளம், வயிற்றுப்பொருமல், விடாது முறுகி அழுதல், வாந்தி, மலத்தின் தன்மை வேறுபட்டுள்ளதா? என்பவற்றை அவதானிக்க வேண்டும்.
நான்காம் நாளிலிருந்து சோற்றுடன் பருப்பையும் சேர்த்து அவித்து அரைத்து முன்பு கூறியது போல் தாய்ப்பால் சேர்த்துக்களித்தன்மையாக்கி 3-4 தேக்கரண்டியளவில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் கொடுக்கவும். இவ்வாறு மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும். 8ஆம் நாளிலிருந்து மீன், கோழி, ஈரல் என்பனவற்றைப் பசை போல அரைத்து சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு மாஜரீன், சமையல் எண்ணெய் அரைத் தேக்கரண்டியளவில் சேர்க்கலாம்.
இதை விட நன்றாகப் பழுத்த பப்பாசி அல்லது வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி கொடுக்க வேண்டும். பதினோராம் நாளிலிருந்து சோற்றுடன் பூசணி, கரட், மீன், கோழி இறைச்சி என்பனவற்றை சேர்த்து அரைத் தேக்கரண்டியளவில் மாஜரீன், எண்ணெய் சேர்த்துக் கொடுக்கவும். நாளொன்றுக்கு இரு தடைவ கொடுக்கலாம். பழத்தையும் மேற்குறிப்பிட்டளவில் கொடுக்கவும்.
பதினாறாம் நாளிலிருந்து முட்டை மஞ்சட்கரு அரைத் தேக்கரண்டி, இலைவகை, (கீரை, வல்லாரை, பொன்னாங்காணி, கங்குல்) என்பவற்றை மேற்கூறிய உணவுடன் சேர்க்க முடியும்.
பழங்களில் மேற்கூறியவற்றுக்குப் பதிலாக மாம்பழம் அல்லது தேசிப்பழச்சாற்றின் சில துளிகள் என்பவற்றைப் பயன்படுத்தலாம். மாதுளம்பழம் கொடுப்பதனால் அதன் சாற்றை மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முடிவு வரை இவ்வாறாக உணவூட்ட வேண்டும். 7ம் மாதம் முடிவடைந்த பின்பு சோறு, மரக்கறி, பருப்பு, மீன் அல்லது இறைச்சி அல்லது முட்டை மஞ்சள் கரு என்பனவற்றை அரைத்து எண்ணெய் அல்லது மாஜரீன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இவற்றை அரை கப் அல்லது குழந்தைகளுக்கு தேவைப்படின் மேலதிகமாகவும் கொடுக்கலாம். பழங்களை மசித்து முக்கால்வாசி தேக்கரண்டி அளவிலும் யேகட் அல்லது தயிர் 2 அல்லது 3 தேக்கரண்டியளவிலும் கொடுக்க முடியும்.
ஒரு வாரம் கழிந்த பின்பு முளைவிட்ட தானியம், நெத்தலி மீன் என்பவற்றை சோறும் மற்றும் பதார்த்தங்களுடன் சேர்த்துக்கொள்ள முடியும்.
இவற்றை தேங்காய்ப்பால் அல்லது சமையல் எண்ணெய் விட்டு சமைக்கலாம். இவ்வுணவுச் சிறுதுணிக்கைகள் உள்ளதாக மசித்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நாளொன்றுக்கு 2 அல்லது 3 தடவைகள் கொடுக்கலாம். சிற்றுண்டியாக உருளைக்கிழங்கு, இராசவள்ளி, முட்டை மஞசள்கரு இவற்றுடன் பாதி மீன் என்பவற்றுள் ஏதாவது ஒன்றை அவித்து மசித்துக் கொடுக்கவும். சிற்றுண்டியாக இரு வாரங்களின் பின் இலைக்கஞ்சி அரைக்கோப்பை கொடுக்கலாம். இதனுள் அரிசிமா, பயிற்றம்மா என்பன சேர்க்கலாம்.
எட்டாம் முடிவை அடையும் வேளை உங்கள் குழந்தை மேற்கூறப்பட்ட உணவை அரைக் கப் அல்லது கூட நாளொன்றுக்கு 2 அல்லது 3 தடவைகள் உண்ணுகின்றாரா? என்பதை உறுதி செய்யுங்கள் மசித்த பழம் கால் கப் கொடுக்கலாம். யோகட் 6 தேக்கரண்டி வரை உண்ணலாம். பட்டர் சேர்த்த பிஸ்கட் 2 உண்ணமுடியும். வெட்டுப்பாணில் அரைத்துண்டு, அப்பத்தின் நடுப்பகுதி என்பன உண்ணலாம். குழந்தையின் கையில் கொடுத்து உண்ணப்பழக்கவும்.
ஒன்பதாம் மாத ஆரம்பத்திலிருந்து முட்டை வெள்ளைக்கருவை உணவுடன் கொடுக்கலாம். கௌபி, சோளம் என்றவற்றை நன்றாக அவித்த பின்பு உண்ணக்கொடுக்கலாம். வீட்டிலே தயார் செய்யப்பட்ட இடியப்பம், தோசை, அப்பம், இட்டலி, ரொட்டி, பாற்கஞ்சி, பாற்சோறு என்பவற்றை கொடுக்கலாம்.
முழுச் சோறு, துண்டாக வெட்டிச் சமைத்த மரக்கறி என்பவற்றை கரண்டியால் மசித்த பின்பு கொடுத்து பழக்கவும். 3 வேளைகள் இதனை பிரதான உணவாக கொடுக்க வேண்டும். மரக்கறியின் பெயர், நிறம் என்பவற்றை கூறி குழந்தைகளுக்கு உணவின் மேல் ஆசையை ஊட்ட வேண்டும். அவித்த உருளைக்கிழங்கு, கரட் என்பவற்றை குழந்தையின் கையில் கொடுத்து உண்ணப்பழக்கவும். உப்பு, இனிப்பு, காரம் என்பவற்றை சிறிது சிறிதாகச் சேர்க்கவும், பன்னிரண்டாம் மாதத்திலிருந்து பெற்றோருடனும், உறவினருடனும், வீட்டிலும், விழாக்களிலும் குடும்ப உணவைச் சரிசமனாக இருந்து உண்ணக்கூடியதாகப் பழக்கவும்.
திருமதி. சறோஜினிதேவி பாலசுந்தரம்,
தாதிய சகோதரி,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ்.போதனா வைத்தியசாலை.