உயர் குருதியமுக்கமும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும்!
உயர்குருதியமுக்கம் என்றால் என்ன?
- சாதாரணமாக எம்மில் இரத்தக்குழாய்களினூடாகக் குருதி பாய்கையில் நாடிகளின் சுவர்களில் அமுக்கமொன்று ஏற்படுத்தப்படுகின்றது.
- • இது இதயம் சுருங்கும் போது 120mmHg இலும் குறைவாகவும், இதயம் தளரும் போது 80mmHg இலும் குறைவாகவும் சாதாரணமானவர்களில் இருக்கும்.
- இதனையே வைத்தியத்தில் 120/80mmHg எனக் குறிப்பர்.
- சில சந்தர்ப்பங்களில் இந்த அமுக்கமானது 140/90mmHg இனைவிட அதிகரிக்கும் போது அதனையே உயர் குருதியமுக்கம் என்கிறோம்.
உயர் குருதியமுக்கம் ஏற்படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?
ஆரம்பத்தில் அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் நீண்ட காலமாகக் கவனிக்கப்படாவிடின் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும்,
- அதிகரித்த வியர்வை வெளியேற்றம்
- தலையிடி
- தலைச்சுற்று
- நெஞ்சுப்படபடப்பு
- மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
- களைப்பு
- மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்
- வாந்தி,குமட்டல்
உயர் குருதியமுக்கமானது ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள்
- உயர் குருதியமுக்கமானது பெரும்பாலும் 55 வயதிலும் கூடிய ஆண்களிலும், 65 வயதிலும் கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது.
- கூடிய உடற்பருமன் (உடற்திணிவுச் சுட்டி 30 இலும் கூடியோர்)
- புகைப்பழக்கம்
- குறைவான உடற்பயிற்சி
- ஏற்கனவே நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்கள்
- குருதியில் அளவுக்கு மீறிய கொலஸ்ரோலின் அளவு
- குடிப்பழக்கம்
- அதிகளவு உணர்ச்சிவசப்படுதல்
- கர்ப்பகாலம்
- உயர் குருதியமுக்கமானது இரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளிடையே காணப்படுதல்.
- சில மருந்துகளின் பாவனை (உ+ ம்: கருத்தடை மாத்திரைகள், மூக்கினுள்ளே வடப்படும் சில துளி மருந்துகள், சல்பியூட்டமோல், தியோபைலீன், பிறிட்னிசலோன், ஏர்கோரமைன், பிறிட்டோன்) மருந்துப் பாவனைக்குப் பிறகு குருதியமுக்கம் சாதாரண நிலையை அடையும்.
- சில நோய்களின் தாக்கம் (அதரீனற் சுரப்பிகளில் ஏற்படும் கட்டி, சிறுநீரகங்களில் ஏற்படும் கட்டிகள்)
உயர் குருதியமுக்கத்தால் எப்படிப்பட்ட பாதகமான விளைவுகள் ஏற்படும்?
- மாரடைப்பு
- பாரிசவாதம்
- கண்பார்வை அற்றுப்போதல்
- சிறுநீரகம் பழுதடைதல்
- பிரசவ காலங்களில் இது ஏற்பட்டால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பு ஏற்படலாம்.
- இறப்பு
உயர் குருதியமுக்கத்தை எவ்வாறு தடுக்கலாம்?
- மருத்துவ சிகிச்சை பெறல்.
- குளோர்ரலிடோன், நிவிடிப்பின், லொசார்ரன், பைசோபிறோலோல், அஸ்பிறின் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை நாளாந்தம் மேற்கொள்ளுதல்.
- உதாரணமாக: 30 நிமிட நடைப்பயிற்சி, கை மற்றும் கால்களை உயர்த்தி மடித்தல், மூச்சை நன்றாக உள்ளெடுத்து வெளியே விடுதல்.
- குடிப்பழக்கத்தைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல், அத்தோடு புகைப்பழக்கத்தையும் கைவிடுதல், உணவு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருதல், உப்பைக் குறைத்தல் ((<6gNaCl/day)
- கூடுதலாக மரக்கறிகளையும், பழங்களையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்தல்.
- சிறிய மீன் வகைகளை அதிகளவில் உண்ணுதல்.
‘இரத்த உறவுகளிடையே உயர் குருதியமுக்க நோய் உள்ளவர்கள் தமது குருதியமுக்கத்தை இரு வருடங்களுக்கு ஒரு முறை சோதித்துக் கொள்ளுதல் சிறந்தது’
இ.கோகுல்நாத்,
யாழ்.மருத்துவ பீட 30 ஆம் அணி மாணவன்.
Posted in கட்டுரைகள்