தற்போதைய கால கட்டத்திலே மனித உரிமைகள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. மேலைத்தேச நாடுகளில் விலங்கு உரிமை பற்றிக் கூட அதிக கரிசனை காட்டப்பட்டு வருகின்றது. ஆனால், எமது நாட்டிலே பொதுமக்களுக்கு மருத்துவ துறையிலே தமக்கு இருக்கின்ற அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவு போதாமல் இருப்பது ஒரு வேதனையான விடயமாகும்.
பொதுமக்களிடமும், மருத்துவத்துறை சார்ந்தவர்களிடமும் இது சம்பந்தமான அறிவு மேம்படும் பொழுது அந்தப் பிரதேசத்தின் சுகாதார நிலை பல வழிகளிலும் மேம்படும். தேவையற்ற மனக்கசப்புகளும், மனக்குழப்ப நிலைகளும் தோன்றுவதற்கு இடம் இருக்காது.
நோயாளர்களின் உரிமை சம்பந்தமான விடயங்களைப் பல தலைப்புகளின் கீழ் ஆராயமுடியும். அவற்றில் முக்கியமான சில விடயங்களை இங்கு பார்ப்போம்.
நோய்நிலை சம்பந்தமான இரகசியத்தன்மை பேணப்படுதல்.
18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தமது சுகாதார நிலை சம்பந்தமான விடயங்களை வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் உரிமை இருக்கின்றது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரினதும் சுகாதாரம் சம்பந்தமான விடயங்களை அவரின் விருப்பத்துக்கு மாறாக யாருக்கும் தெரிவிக்கும் உரிமை மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இல்லை. ஒருவர் தனது பெற்றோருக்கோ, கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ கூடத் தனது நோய்நிலை சம்பந்தமான விடயங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் உரிமை இருக்கின்றது. அந்த இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் கடமை மருத்துவத்துறையினருக்கும் இருக்கிறது.
வைத்தியசாலையிலே தனிப்பட்ட முறையில் வைத்தியரிடம் ஒரு நோயாளி பேச விருப்பப்பட்டால் அதற்கான சந்தர்ப்பத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் உரிமை நோயாளிக்கு இருக்கின்றது. வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை நீக்கிக் கட்டட வசதிகளும் மேம்படும்பொழுது ஒவ்வொரு நோயாளியுடனும் மருத்துவக்குழு தனித்தனி அறையிலே உரையாடும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நோயாளியினுடைய நோய் சம்பந்தப்பட்ட விடயம் ஒரு பொது விடயம் அல்ல. பலரும் பேசி ஆராய்வதற்கு இது ஒரு செய்தி அல்ல, பத்திரிகையிற் பிரசுரித்து அம்பலப்படுத்துவதற்கு துயரமான விடயமல்ல, பலரும் போய் துக்கம் விசாரிப்பதற்கு ஒரு புதினம் அல்ல பலரும் போய் விடுப்புக் கேட்பதற்கு இது அந்த நோயாளி மட்டும் சம்பந்தப்பட்ட ஓர் உணர்வுபூர்வமான அந்தரங்க விடயம். அதனை அவரின் அனுமதியின்றி அறியத்தெண்டிப்பதோ, அம்பலப்படுத்துவதோ நல்லதல்ல என்பதை மனதில் நிறுத்துவோம்.
தமது நோய் நிலை அம்பலப்படுத்தப்பட்டுவிடும் என்று அஞ்சி, பலர் தமது நோய் நிலையின் உண்மையான வடிவத்தை மருத்துவரிடம் வெளிப்படுத்த தயங்குகின்றனர். இதனால் பல பாரதூரமான விளைவுகளும், ஏன் இறப்புகளும் கூட ஏற்படுகின்றது. இந்த நிலை மாற்றம் பெறவேண்டும்.
ஒருவரின் உரிமைகளை இன்னொருவர் விளங்கிக்கொள்ளும் பொழுது ஒரு மகிழ்ச்சியான சமுதாயம் உருவாகும். நோயாளர்களின் உரிமை சம்பந்தமாக பேசப்படுவது யாரையும் குற்றம் சுமத்துவதற்காக அல்ல. புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதற்காகவே ஆகும். இது சம்பந்தமான விழிப்புணர்வும், புரிந்துணர்வும் மக்களிடையே ஏற்படும் பொழுது எமது சுகாதார நிலையை இலகுவில் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உங்களுடைய உடல் சம்பந்தமான விடயங்களைத் தீர்மானிக்கும் பொறுப்பு முழுமையாக உங்களிடமே இருக்கிறது. உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த வைத்திய முறையையும் செய்யும் உரிமை மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இல்லை. உங்களுக்கு வழங்கப்படுகின்ற வைத்திய முறைகள் சம்பந்தமான முழுவிபரத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அந்த வைத்திய முறைகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
சோதனைக்காக உங்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்படுவதாக இருந்தாலும், உங்களுடைய உடற்பகுதிகளுள் குழாய் விட்டுச் சோதிப்பதாக இருந்தாலும், உங்களிலே சத்திரசிகிச்சை செய்வதாக இருந்தாலும், உங்களுக்கு மயக்க மருந்து தருவதாக இருந்தாலும், உங்களிலே ஊசி குத்திச் சோதிப்பதாக இருந்தாலும் மருத்துவக்குழு உங்களிடம் அதற்கான அனுமதியைப் பெற்றே அதை மேற்கொள்ளும். அதற்கான அனுமதியை நீங்கள் வழங்குவதற்கு முன்பு அது சம்பந்தமாகப் பூரணமான விளக்கத்தை நீங்கள் பெற்றுக்கொள்வது அவசியம். உங்களுக்கு மேலதிகமான விளக்கங்கள் தேவைப்பட்டால் அது சம்பந்தமாக கேட்டுத் தெரிந்துகொள்ளும் பூரணமான உரிமை உங்களுக்கு இருக்கிறது.
இந்தச் சிகிச்சை முறைகளில் உங்களுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அதனை வேண்டாம் என்று மறுதலிக்கும் உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. அதற்காக மருத்துவக்குழு உங்களைக் கோபித்துக்கொள்ளப்போவதில்லை. அதற்கான உரிமையும் அதற்கு இல்லை. ஒரு சிகிச்சை முறையை நீங்கள் வேண்டாம் என்று மறுதலித்தால் வேறு எந்தெந்த முறைகளில் உங்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்பது பற்றியே மருத்துவக்குழு சிந்திக்கும். இதனால் உங்களுக்கும், மருத்துவக்குழுவுக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்விலோ அல்லது உறவு நிலையிலோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படமாட்டாது. எனவே நீங்கள் எந்த தீர்மானத்தையும் சுதந்திரமாக எடுக்க முடியும். உங்களுடைய சுகாதாரம் சம்பந்தமாகவும், சிகிச்சை முறை சம்பந்தமாகவும் தீர்மானம் எடுப்பதில் உங்களுக்கும், மருத்துவ குழுவுக்கும் சமபங்கு இருக்கிறது. ஆனால் இது சம்பந்தமான இறுதித் தீர்மானம் உங்களுடையதே. நீங்கள் தீர்மானம் எடுப்பதற்கு மருத்துவக்குழு உதவி செய்யும். தகவல்களைத் தந்து உதவும்.
உங்களுக்கு ஒரு மருந்தை அல்லது மாத்திரையைப் பாவிக்க விருப்பமில்லாதவிடத்து நீங்கள் அந்த விருப்பத்தை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கலாம். அதற்காக மருத்துவர் உங்களிடம் கோபித்துக்கொள்ள முடியாது. அதனைப் பாவிப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளங்கப்படுத்தும் உரிமை மாத்திரமே மருத்துவருக்கு இருக்கிறது. உங்களுக்கு ஒரு மருந்தைப் பாவிக்க விருப்பமில்லாதவிடத்து அல்லது அந்த மருந்து உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதவிடத்து வேறு எந்த மாற்றுவழிகளில் உங்களுக்கு மருத்துவம் செய்யலாம் என்பது பற்றியே மருத்துவக்குழு சிந்திக்கும்.
பலர் மருத்துவர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக ஒழுங்காக மருந்துகளைப் பாவிக்காதபோதும், ஒழுங்காக பாவிப்பதாகப் பொய்சொல்லிக் கொள்கிறார்கள். இந்த பிழையான தகவலை உண்மை என்று நம்பி மருத்துவர் தரும் மாற்று மருந்துகள் உங்களிலே தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் சில சமயம் உயிரிழப்பிற் கூட முடியலாம். எனவே, உண்மையான நிலையை மருத்துவருக்கு தெளிவாகச் சொல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்களிடம் கோபித்துக் கொள்ளும் உரிமை மருத்துவருக்கு இல்லை என்பதை மனதில் நிறுத்துவோம்.
மருத்துவர்கள் நோயாளர்களுக்கு சொல்லுவது ஆலோசனைகள் தான். அவை கட்டளைகள் அல்ல. அவற்றைக் கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா எனத் தீர்மானிப்பது அந்த நோயாளி தான். சொல்லிய ஆலோசனைகளை நோயாளி கடைப்பிடிக்காதவிட்டால் அந்த நோயாளியிடம் கோபித்துக் கொள்ளும் உரிமை மருத்துவருக்கு இல்லை. தனது ஆலோசனையையும் மீறி நோயாளி புகைப்பிடித்தாலும், குடிவகைகள் பாவித்தாலும், மருந்துகளை ஒழுங்காக எடுக்காது விட்டாலும், உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும், கிளினிக்குகளுக்கு ஒழுங்காக போகாது விட்டாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நோயாளியிடம் மருத்துவர் கோபித்துக் கொள்ள முடியாது. எனவே தனது உண்மையான நிலைப்பாட்டையும் உணர்வுகளையும் நோயாளிகள் மருத்துவருக்குத் தயங்காமல் வெளிக்காட்ட வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும். காரணம் அந்த நோயாளி எப்படி நடந்து கொள்கிறார் என்பதைத் பொறுத்து அவரின் சிகிச்சை முறைகளிலே மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
மருத்துவர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகச் சில தகவல்களை மறைக்கும் பொழுது அல்லது பிழையான தகவலை மருத்துவருக்குச் சொல்லும் பொழுது அது பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மருத்துவக்குழு உங்களிடம் கோபப்படும் என அஞ்சிப் பிழையான தகவல்களை நீங்கள் தெரிவிப்பீர்களாக இருந்தால் உங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளும் பிழையானதாகவே இருக்கும். இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்படவேண்டும்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் நோயாளி ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக வீடு செல்வதற்கு விருப்பப்பட்டால் அவ்வாறு செல்வதற்கான பூரண உரிமை அந்த நோயாளிக்கு இருக்கின்றது. அதற்காக மருத்துவக்குழு நோயாளியுடன் கோபித்துக் கொள்ள முடியாது. சொந்த விருப்பத்தில் வீடு செல்லும் நோயாளிக்கும் நோய் நிரூபண அட்டை, வீட்டில் பாவிப்பதற்கான மருந்து, நோய்கள் பற்றிய பூரண விளக்கங்கள் வழங்கப்படும். அவற்றைக் கேட்டு பெற்றுக்கொள்ளும் உரிமையும், கடமையும் நோயாளிக்கு இருக்கிறது.
இன்னுமொரு சமயம் அவருடைய நோய் கடுமையாகி வைத்தியசாலைக்குச் செல்ல விருப்பப்பட்டால் எந்தவித மனக்குழப்பமும் இன்றி மீண்டும் வைத்தியசாலைக்கு செல்ல முடியும். சொந்த விருப்பத்தில் வீடு சென்றதால் மீண்டும் வைத்தியசாலையில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மருத்துவர்களும், மருத்துவக்குழுவும் நோயாளர்களுக்கு ஆலோசனையும், அனுசரணையும் வழங்கி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இருக்கிறார்களே தவிர நோயாளர்களை கண்டிப்பதோ, தண்டிப்பதோ அவர்களின் நோக்கம் அல்ல. இருந்த போதும் தமது ஆலோசனைகளையும், சிகிச்சை முறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் நோயாளர்களுக்கு ஏதாவது ஆபத்து நடந்துவிடுமோ என்ற ஏக்கத்தில் உரிமையுடன் நோயாளர்களைச் சற்றுக் கண்டித்து பேசும் ஒரு நிலை இருந்து வருகிறது. இது மருத்துவனும் ஒரு மனிதன் என்ற நிலையிலே அவனது மனதில் இருந்து எழுகின்ற மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வே. கண்ணுக்கு முன்னால் ஒருவர் ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, அவரைத் தடுத்தும் கேட்காமல் அதே திசையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது, அதனை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கடினமானது. இந்த நிலையே பல சமயங்களில் மருத்துவனுக்கு ஏற்படுகிறது.
ஒரு தனிமனிதனின் மனித உரிமைகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மதிக்கப்படவேண்டும். அது மீறப்படுவது ஒரு சமுதாய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக அமையாது. ஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பொதுவாக யாரும் மறுத்துவிடமுடியாது.
ஆனால், ஒரு நோயாளியினால் பிறருக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் இருந்தால், அவரின் நடவடிக்கைகள் சிலவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. உதாரணமாக: கட்டுப்பாடற்ற வலிப்பு நோய் உள்ள ஒருவரினுடைய வாகனங்கள் செலுத்தும் உரிமையை மறுக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. இது பாரதூரமான வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையே. அதே போல் சில வகையான தொற்று நோய்கள் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவர் சம்மதம் தராதவிடத்தும் அது சம்மந்தமான தகவல்களைச் சில சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவத்து நோய் பரம்பலை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருக்கிறது. இது சம்மந்தமாக நோயாளிக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் நடவடிக்கை சக நோயாளர்களுக்கு இடையூறாக இருப்பின் அவரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும்.
நோயாளி ஒருவரின் மனநிலை சரியான தீர்மானங்கள் எடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்று மருத்துவக்குழு கருதுமிடத்து அவருடைய விருப்பத்துக்கு மாறாகவும் சில மருத்துவ முறைகளையும், மருத்துவத்தையும் செய்யும் உரிமை மருத்துவக்குழுவுக்கு இருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவக்குழுவானது நோயாளியின் குடும்ப அங்கத்தவர்களுடன் உரையாடி அவர்களின் சம்மதத்துடனேயே மருத்துவ முறைகளைத் தெரிவு செய்யும்.
நோயாளர்களின் உரிமைகளை மதித்து நடப்பது மருத்துவக்குழுவின் கடமையாகும். அதே போல் நோயாளர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் சில முக்கியமான கடமைகள் இருக்கின்றன. அவையாவன:
- சக நோயாளர்களை மதித்து நடத்தலும், அவர்களுக்கு இடையூறு செய்யாது இருத்தலும்.
- வைத்தியசாலையை அசுத்தம் செய்யாது தூய்மையாகப் பாதுகாத்தல்.
- தமது நோய்நிலை பற்றிய போதிய விளக்கம் ஏற்படாதவிடத்து, மருத்துவக் குழுவுடன் நேரடியாக நீங்கள் பேசி, நிலைமையைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல், மூன்றாம் நபரினூடாக உங்கள் சுகம் பற்றி அறிய முயற்சிப்பது நல்லதல்ல.
- மருத்துவத்துறையின் மேம்பாட்டிற்கு உங்கள் பங்களிப்புக்களை வழங்குதல்.
- உங்கள் உடற்சுகத்திற் கவனமெடுத்து நீங்கள் நோயாளியாவதைத் தவிர்ப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு ஏற்படும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ளல்.
- இன்னொரு நோயாளியின் சுகம் பற்றி மருத்துவக்குழுவிடம் வினவுவதைத் தவிர்த்தல், காரணம்: ஒவ்வொரு நோயாளியின் நோய்நிலை சம்பந்தமான தகவல்கள், அனைத்தும் இரகசியமாகப் பேணப்படவேண்டும். இந்த நோயாளியின் நேரடியான அனுமதி இல்லாமல் அந்தத் தகவல்களை வெளிப்படுத்தும் உரிமை மருத்துவக்குழுவுக்கு இல்லை.
- வைத்தியசாலையின் சட்டவிதிகளை மதித்து நடத்தல்.
ஒவ்வொரு துறையிலும் எமக்கு இருக்கும் உரிமைகளைத் தெரிந்து வைத்திருக்வேண்டியது எமது கடமையாகும். அத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எம்மால் இயன்றவரை செய்துதான் ஆக வேண்டும். உரிமை என்ற பேச்சை எடுப்பதற்கே அச்சப்படும் ஒரு நிலை காணப்படுகிறது. எமது உரிமைகள் மீறப்படுவதாக நாம் உணரும் பொழுது அது சம்பந்தமாகப் பேசுவதற்கு அச்சப்படவோ, வெட்கப்படவோ வேண்டியதில்லை. உரிமைகளை மறுப்பவன்தான் உண்மையிலே மனிதகுலத்தின் முன் வெட்கப்பட வேண்டியவன்.
மருத்துவத்துறையிலே நோயாளர்களின் உரிமைகள் பற்றிப் பேசுவது மருத்துவக் குழுவுக்கும் நோயாளர்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக அமைந்துவிடக்கூடாது. உண்மையிலே அது ஒரு பரந்துபட்ட புரிந்துணர்வை ஏற்படுத்தி மருத்துவக் கவனிப்பு முறைகளை மேம்படுத்தும் ஓர் உந்து சக்தியாகவே அமையவேண்டும்.
நோயாளர்களின் கவனிப்புமுறை உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது. பல மனங்களின் உனர்ச்சி சம்பந்தப்பட்டது. இவற்றைச் சட்ட வரையறைக்குள் அடக்கி விட முடியாது.
ஒவ்வொரு நோயாளியும் குணப்பட்டுச் செல்லும் பொழுது அவனும், அவனது குடும்பமும் மட்டுமல்ல, மருத்துவக்குழுவும் மகிழ்ச்சி அடையும்.
ஒரு நோயாளி இறந்துவிட்டால் அவனது குடும்பத்துடன் சேர்ந்து மருத்துவக்குழுவின் உள்மனமும் அழும்.
ஆனால், தொடர்ந்து அழுது கொண்டிருக்க முடியாது. காரணம், அடுத்த நோயாளியைப் பார்க்க வேண்டும் என்ற கடமை இருக்கும். எத்தனையோ மரணங்களையும், துயரங்களையும் பார்த்து விட்ட காரணத்தால் நோயாளிகள் தமது அறிவுரைகளைக் கடைப்பிடிக்காத பொழுது அவர்களுக்கும் அதே கதி நேர்ந்து விடுமோ என்று மருத்துவக்குழுவின் மனம் பதைபதைக்கும்.
இவ்வாறான மன உணர்வுகளை எந்தச் சட்டக்கோவையினுள் உள்வாங்குவது? மருத்துவத்துறையில் மட்டுமல்ல எந்தத்துறைகளிலும் இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு புரிந்துணர்வும் மனிதாபிமான உணதர்வும், கூட்டு முயற்சியும் அவசியமாகும்.
நோயாளர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என்ற சிந்தனை எழுந்தால், அது சம்பந்தமாகச் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும்.
டாக்டர்.சி.சிவன்சுதன்,
வைத்திய நிபுணர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.