ரேபிஸ் என்பது எம்மவர் மத்தியில் விசர் நாய்க்கடி வியாதியென அறியப்பட்ட ஒரு நோய். தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ்வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்ரெம்பர் 28ஆம் திகதி உலக ரேபிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ்பாஸ்டர் இறந்த தினமான செப்ரெம்பர் 28ஆம்திகதி உலகளாவிய நீர்வெறுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என்ற தன் னார்வ அமைப்பு, ரேபிஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து “உலக ரேபிஸ் தினமாக” கடைப்பிடிக்க வலியுறுத்தியது. 2015ஆம் ஆண்டு முதல் ரேபிஸ் தினத்தை கொண்டாடுகின்றனர். 2030க்குள் ரேபிஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைத் தொடவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். உலகெங்கிலும் சுமார் 3 பில்லியன் மக்கள் ரேபிஸ்தொற்றுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சுமார் 55 ஆயிரம் சாவுகள் ஆண்டு தோறும் பதிவாகியுள்ளன. குறிப்பாக இலங்கையில் ஆண்டுதோறும் 2030 நோயாளர்கள் இனங்காணப்படு கின்றனர்.
ரேபிஸ் பரவும் விதம்
ரேபிஸ்மூளையைத்தாக்கும் ஒருவைரஸின் பெயர். இந்த வைரஸ் ஒரு மிருகத்தைத்தாக்கும்போது அதற்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். அந்தமிருகம் நம்மைத் தாக்கும் பட்சத்தில் நமக்கும் அது ஏற்படும். நாய் மட்டுமன்றி காட்டுவிலங்குகள் நரி, ஓநாய், குதிரை முதலியவற்றைக்கூட இதுதாக்கும். வீட்டில் வரும் பூனைகளையும் இது தாக்கும் ஆபத்து உள்ளது. வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அவற்றிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். தனிமையில் இருக்கும் குழந்தைகளை நாய், பூனையோடு விளையாட விட்டுச் செல்லவேண்டாம். முறையாக செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போடும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள், எச்சிலை வடித்த படியும், காலை அடிக்கடி நக்கிக்கொண்டும் இருக்கும். அப்படி ஏதாவது தெரியும் பட்சத்தில் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ரேபிஸின்
ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். சாவைத் தேடித்தரும் இந்த நோயை அதிகம் பரப்புவது நாய்களே. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான். இதன் விளைவு, தனி அறையில், தனிக் கூண்டில் சாவைத் தழுவும் நிலைவரை செல்கிறது. நாய் கடித்தால்தான் மட்டும் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். எம் உடலில் சிறு கீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும். வைரஸ் தாக்கிய நாய்கள், ஆக்ரோசமாக பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் என்றில்லை. சில நாய்கள் மிகவும் அமைதியாகக்கூட இருக்கும். எனவே வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை அவற்றை கால்நடை மருத்துவர்களிடம் காட்ட வேண்டியது அவசியம். அவற்றுக்கும் வைரஸ் தடுப்பூசி போடுதல் வேண்டும். நாய், பூனை போன்றவை கடித்தவுடன் சாதாரணடெட்டணஸ்டாக்ஸாய்ட் ஊசி போட்டுக்கொள்பவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். முறையாக மருத் துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களில் பாதிக்கப்பட்ட மிருகம் கடித்தால், அந்த இடத்தைப் பொறுத்து அந்த காயத்தைப் பொறுத்து பாதிப்பு மூளையை அடைய சில மாதங்கள் ஆகலாம்.
நோய் அறிகுறிகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை , வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். பின்னர் ‘கோமா’ நிலைக்கு இறப்பு ஏற்படும். இவ்வறிகுறிக்களுக்கான காரணங்களை உற்று நோக்கினால் ரேபீஸ் என்பது சிங்கிள் ஆர். என்.ஏ கொண்ட ஒரு வைரஸ். இதற்கு நரம்புகள் மீது ஈர்ப்பு அதிகம். எனவே எமது உடலில் தொற்றியவுடன் சுற்றயல் நரம்புகள் வழியாக ஸ்பைனல் கேங்கிலியன் எனும் பகுதியை அடைந்து அங்கே பெருக்கமடைந்து மிக வேகமாக மூளைக்கு சென்று என் செப்பலைட்டிஸ் எனும் நிலையை உரு வாக்கிவிடும். பின்னர் உடலின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு பரவலடையும் நரம்புத் தொகுதி பாதிப்படைவதால் தொகுதித் தசைகளின் இயக்கம்பாதிக்கப்படும். சுவாசத் தசைகள் பாதிக்கப்பட்டு சுவாசச்செயற்பாடும் மட்டுப்படுத்தப்படும். விழுங்கும் தசைகள் பாதிப்படைந்து விழுங்க முடியாத நிலை ஏற்படும். தண்ணீரை காண்கையில் அல்லது தண்ணீர் ஓடும் சத்தத்தை கேட்கையில் தொண்டையில் உள்ள விழுங்கும் தசைகள் இறுக்கமடைந்து கடும்வலி ஏற்படுவதுடன் சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால் எங்கே உயிர் போய்விடுமோ எனும் பயத்தில்நோயாளிகள் துடிப்பார்கள். இதனால் தான் ரேபிசுக்கு நீர்வெறுப்பு நோய் எனும் பெயர் ஏற்பட்டது. அது போல ஏனைய தசைகள் வலு விழந்து அவற்றின் செயற்பாட்டுக்குரிய தொழில்கள் நிறுத்தப்படும். இறுதியில் இறப்புச் சம்பவிக்கும்.
மிருகங்கள் தீண்டினால் செய்யப்பட வேண்டியவை
எனவே நாய், பூனை போன்றவை கடித்துவிட்டாலோ நகத்தால் பிராண்டினாலோ உடனடியாக மருத்துவரை அணுகிதடுப் பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை தொடர்ந்து சில நாள்கள் போட்டுக்கொள்ள வேண்டும். குருதி வருவது தெரிந்தவுடன் சிறுசிறு இடைவேளைகள்விட்டு அவற்றைத்தொடர்ந்து கழுவிக்கொண்டே இருப்பது அவசியம். விசர்நாய் கடித்தால் தொப்புளை சுற்றி 28 ஊசிகள் போட வேண்டும் என்று ஒரு வதந்தி பரவிவருகின்றது. அதற்கு பயந்தே பல நோயாளிகள் நாய்கடித்தாலும் வைத்தியசாலைக்கு வருவதில்லை. உண்மையில் அப்படி அல்ல. உங்கள் நோயின் நிலையை பொறுத்து 4 அல்லது 5 ஊசிகள் உங்கள் கைப்பகுதியில் வழங்கப்படும். அதனால்தான் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உலக ரேபிஸ் தினத்தை பொது மக்களுக்கும் குறிப்பாக செல்லப்பி ராணி உரிமையாளர்களுக்கும் நோயின் ஆபத்துக்கள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் தடுப்பூசி மீது கவனம் செலுத்துதலாகும். இது அனைத்து ரேபிஸ் கட்டுப்பாட்டு முயற்சிகளின் அடித்தளமாகும்.
2030 இலக்கு
உலக ரேபிஸ் தினத்தில் பங்கேற்பது 2030ஆம் ஆண்டளவில் ‘ரேபிஸ் இறப்புகளை அகற்றுவதற்கான முன் னேற்றத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
கட்டுரையாளர்கள்:4ஆம் வருட
மருத்துவபீட மாணவர்கள்,
38ஆம் அணி
யாழ்.பல்கலைக்கழகம்.