மனித வாழ்வுச்சக்கரமானது பல்வேறு தேவைகளையும் அவற்றை அடைவதனையும் மையமாகக்கொண்டு உருண்டோடுகின்றது. இந்த வாழ்வின் நகர்வுக்கு உடல் ஆரோக்கியமும் வாழ்வின் முழுமைக்கு சமூகத்துடனான தொடர்பும் அவசியமாகக் காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தை வழங்குவதற்கு சிறந்த சுகாதாரம் பங்களிப்புச் செய்வதனைப் போன்று சமூக ஊடாட்டத்தை ஏற்படுத்துவதில் கல்விக்கு அளப்பெரிய பங்கு உண்டு. கல்வி மூலமாக வரும் அறிவு வளர்ச்சி சமூக விருத்தியை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் கல்வியானது மனித விருத்தி கட்டத்தில் பல்வேறு மட்டத்தில் வழங்கப்பட்டு வருவது என்பது நாம் அறிந்ததே. முன்பள்ளி, பாடசாலை, பல்கலைக்கழகம் என்று பலவிதமாக கல்வி எனும் சமூக நிறுவனம் தனது பணியினை செய்துவருகின்றது. ஏனெனில் பல்கலைகளையும் வழங்கும் தளமாக இது அமைகின்றது. ஒரு மாணவன் தனது எதிர்கால வாழ்வினை திறம்பட வாழ தேவையான கல்வி மட்டுமின்றி வாழ்க்கைத் திறன்கள் மற்றும் ஏனைய திறன்களை வழங்கும் தளம்தான் பல்கலைக்கழகம்.
பல்கலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
உண்மையில் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாழ்வானது முற்றிலும் மாறுபட்ட சூழலாகக் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது. தான் வாழ்ந்த சமூகம், குடும்பம், கலாசாரம், மதம்போன்றவற்றிலிருந்து மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. அத்துடன் பல்கலாசார மையமாகவும் புதிய உறவுகளின் அறிமுகம் போன்ற தன்மைகளுடன் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. அதனால் அதில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் மாணவனுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பிறருடன் தொடர்பு கொள்வதற்கான சமூகத் தொடர்பினை அமைத்துக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அதேபோன்று மாணவர்களது பொருளாதார உறுதியற்ற நிலைகற்பதற்குத் தடையாக விளங்குவதுடன் புதிய நட்புக்களின் பழக்கம், சிலருக்கு நன்மையானதாகவும் சிலருக்கு தீமையான தாகவும் அமைகின்றது. தீமையாக அமையும் போது அது மாணவர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் நிலையும் உருவாகின்றது. இளமைக்கேற்ப மலரும் காதல், நாகரீக மோகம் போன்ற பல்வேறு சவால்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
இந்நிலையில் மேற்கூறப்பட்டவற்றின் பாதிப்புக்கள் மாணவர்களினது உடல், உள ஆரோக்கியத்திலும் சமூக தொடர்பாடலிலும் தடையாக அமைகின்றது. எடுத்துக்காட்டாக வறுமையினாலோ அல்லது காதல் தோல்வி மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றின் பயன்பாடு போன்றவற்றால் மாணவர்கள் மத்தியில் இடைவிலகல், வன்முறை, எதிர்மனப்பாங்கு, தனிமை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றுக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. அதேபோன்று சிலர் கற்றலில் கவனம் இன்மை , குறைந்தள விலான ஞாபகத்திறன், தூக்கமின்மை , தன்னைப்பற்றிய தாழ்வான சிந்தனை, தன்னம்பிக்கையை இழத்தல், தற்கொலை முயற்சிகளில் ஈடுபடல், பயம், பதற்றம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளின் தாக்கத்தால் மாணவர்களது எதிர்கால வாழ்வு கேள்விக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழலில் மாணவர்களது பிரச்சினைகளுக்கு விடைகாணும் நோக்கில் அவர்களது நலன் தொடர்பாககரிசனை கொள்வதற்கென ஒரு தனி யான அமைப்பு உருவாக்கப்பட வேண் டியதேவை உணரப்பட்டது. இந்த தேவையை முதன் முதலில் மருத்துவர் சிவராஜா உணர்ந்திருந்தார். உணர்ந்தது மாத்திரமின்றி தனது கருத்தினை 1986ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்வைத்திருந்தார். அதற்கிணங்க இவ் அமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டவர்களாக பேராசிரியர் தயாசோமசுந்தரம், பேராசிரியர் மிகுந்தன் போன்றோர் காணப்படுகின்றனர். பேராசிரியர். தயாசோமசுந்தரம் அவர்கள் நன்னிலை மையத்தின் இலக்குகளையும் அவற்றின் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற் பட்டவர்.
நன்னிலை மையம்
அவரது 30 வருடகால உளவியல் அனுபவத்தினால் மாணவர்களது உளசமூகரீதியில் ஏற்பட்ட தாக்கங்களை நன்கு உணர்ந்ததுடன் பல மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அவர்களது கல்விச் செயற்பாடுகளுக்கு பல உதவிகளையும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே போன்று நன்னிலை மையத் தினை விரிவாக்கம் செய்வதில் பேராசிரியர் மிகுந்தனின் பங்களிப்பு அளப்பெரியதாகும். அந்த வகையில் இவர்களது முயற்சியின் பயனாக 2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நன்னிலை மையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நன்னிலை மையத்தின் தொடர்பணிகளுக்கான ஒத்துழைப்பினை யாழ். மருத்துவ பீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையும் குடும்ப சுகநலநிலையமும் மற்றும் ஆஸ்திரேலியா பழைய மாணவர் சங்கமும் வழங்கி வரு கின்றன. அந்த வகையில் நன்னிலை மையத்தில் பல்வேறு சேவைகள் இடம்பெற்று வருகின்றன. எடுத்துக்காட்டாக உளவளத்துணை மற்றும் நட்புதவி, தளர்வுப் பயிற்சி மற்றும் சாந்த வழிமுறைகள், அறிகைசார் நடத்தை சிகிச்சை, வெளிப்பாட்டுச் சிந்தனைகள், சுகாதாரம் மற்றும் உள சமூகக் கல்வி அளித்தல், உளமருத்துவமற்றும் உளநலப் பரிந்து ரைகள் மேற்கொள்ளப்படுதல், வழிகாட்டல் ஆலோசனைகள், குடும்ப மற்றும் இனப்பெருக்கச் சுகாதார ஆலோசனைகள் போன்ற சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பல செயற்பாடுகள் நன்னிலை மையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சேவைபற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில்ஆஸ்திரேலிய பழைய மாணவர் சங்கமும், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையும் இணைந்து இளைஞர் குழுவினை உருவாக்கி குடும்ப சுகநலநிலையத்தில் பல நிபுணர்கள் மூலமாக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. நன்னிலை மையத்தின் செயற்பாட்டினை விரிவாக்குவதற்கான பல்வேறு செயன்முறைகள் இளைஞர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவற்றில் சமூக விழிப்புணர்வு நாடகங்கள், சித்திரம், சிரிப்பு சிகிச்சை, யோகா மற்றும் தியானப் பயிற்சி, அன்றாட வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான நடன ஆற்றுகை, மன்ற அரங்க நிகழ்வு, உடற் கூற்றுப்பரிசோதனை போன்றன குறிப்பிடத்தக்கவை ஆகும். இவ்வாறானவிழிப்புணர்வினை மேற்கொள்வதற்கான முக்கிய காரணமாக அமைவது நன்னிலை மையத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் சமூகத்தினையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆகும்.
சமூக செயற்றிட்டங்கள்
இந்தக் குழுவினரால் மாணவர்களுக்கு மாத்திரமின்றி சுற்றியுள்ள சமூகத்திற்கும் உடல் உள், சமூகப்பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வினை நாடகம் மூலமாக வழங்கி வருகின்றனர். இன்றைய சமூகத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக உடல்நிறை அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த சவாலை சரியாக எதிர்கொள்வதற்கான நடன நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அன்றாட வாழ்வினை எவ்வாறு ஆரோக்கியமாக மாற்றலாம் என்பது தொடர்பான நடன நிகழ்வுகள் ளையும் மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய காலப்பகுதியில் மன அழுத்தத்துக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவிலானதாகக் காணப்படுவதுடன் தொற்றாநோய்க்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவற்றிலிருந்து விடுபடுவதற்கென எமது இளைஞர் குழாமினரால் குடும்பசுகநல நிலையத்தின் ஊடாக யோகா, தியானம், சிரிப்புச் சிகிச்சை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்படும் உடல்உளம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாத்திரமின்றி சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை சரியாக எதிர்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது. உடல் சார்ந்த நோய்கள் தொடர்பான உடற்கூற்றுப்பரிசோதனை செயற்பாடுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறாக பல தரப்பட்ட செயன்முறைகள் மூலமாக நன்னிலை மையத்தின் பணிகள் தொடர்ந்தாற்றப்பட்டு வருகின்றது.
கோ.சரண்யாமருத்துவர் குமரன்