எமது சமுதாயத்தில் இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றோர் அதிகளவாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைக்கு அதிகரித்த வேலைப்பளு, ஆடம்பர வாழ்க்கை முறை, நாகரிக மாற்றம், நேரமுகாமைத்துவமின்மை , அதிகரித்த தேவைகள் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கூறிக்கொண்டே போகமுடியும். இன்றைய காலப்பகுதியில் அதிகரித்த மன அழுத்தம், அந்த மன அழுத்தத்தைச் சரியாகக் கையாளுகின்ற திறமைக் குறைவு இவற்றினால் பல்வேறு நோய்கள் மற்றும் சமூக, உளப்பிரச்சினைகள் என்பன ஏற்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாதிப்பை எதிர் கொள்கின்றனர்.
மன அழுத்தத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் பல குழந்தைகள் மத்தியில் இந்த மன அழுத்தம் காணப்படும் போது அவர்களின் உடல் உள வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதேபோல் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்த நிலையால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதிப்பதாக அமையும். இளைஞர், யுவதிகள் மத்தியில் காணப்படும் மன அழுத்தமானது அவர்களது நடத்தை மற்றும் அவர்களின் நடத்தைப் பிறழ்வுக்கு வழிவகுக்கும். அதாவது ஓர் இளைஞன் அல்லது யுவதி மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது போதைப்பொருள் மற்றும் மதுபாவனைக்கு அடிமையாகி சமூகத்தில் பல வன்முறைகள் ஏற்பட வழி வகுக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையானது எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாக வழிவகுக்கும். வயது வந்தவர்கள் மத்தியில் மன அழுத்தம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதாவது வயது வந்தோர் மத்தியில் தொற்றாநோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். நீரிழிவுநோய், புற்றுநோய், உயர் குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய்கள் உருவாகுவதில் முக்கிய பங்கை மனஅழுத்தம் கொண்டு வரும்.
மன அழுத்தத்தைக் கையாள திட்டங்கள் அவசியம் தேவை அதிகரித்த மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் மன அழுத்தத்தைத் திறமையாகக் கையாளுதல் என்பவற்றுக்கு பல செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்றிட்டங்களில் ஒன்றாக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையும் பல பங்குதாரர்களும் இணைந்து நடத்தும் “எம் சுகம் எம் கையில்” என்ற செயற்றிட்டம் காணப்படுகின்றது. இந்தச் செயற்றிட்டத்தின் முக்கிய பங்குதாரர்களாக நல்லூர் பிரதேசவாழ் மக்களும், குடும்ப சுகநல நிலைய நோயாளர்களும்,பிரதேச வாழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் காணப்படுகின் றனர். சிறார்களுக்கான செயற்றிட்டத்தில் குடும்ப மருத்துவத்துறையுடன் ஆறுதல் நிறுவனமும் கைகோர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான செயற்றிட்டத்தில் வடமாகாண கல்வியமைச்சு மற்றும் யாழ். மருத்துவ சங்கம், அபயம் எனும் அரச சார்பற்ற நிறுவனமும் முக்கிய பங்குதாரர்களாகவும் செயற்றிட்ட முன்னோடியாகவும் செயற்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயற்றிட்டத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பழைய மாணவர்கள்ளும் முக்கிய பங்குதாரர்களாக தொழிற்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற் றும் நோயாளர்கள் செயற்றிட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சும் குடும்ப சுகநல நிலைய நோயாளர் நலன்புரிச்சங்கமும் முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்றன.
மன அழுத்தத்தைக் கையாளும் இந்தச் செயற்றிட்டத்தின் முக்கியமையமாக கோண்டாவில் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் குடும்ப சுகநல நிலையம் தொழிற்படுகின்றது. இந்த நிலையமானது மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அவையாவன: யோகா மற்றும் தியானப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிரிப்புச் சிகிச்சை, உளவள ஆற்றுப்படுத்தல், இயற்கையுடன் ஒன்றிணைந்த நடத்தை சிகிச்சை முறைகள். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குடும்ப சுகநல நிலையத்தின் வளாகத்தில் அழகிய பூந்தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அது இந்தப் பிரதேச மக்களால் பராமரிக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறான இயற்கை பூந்தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயன்முறைகளானவை பல்வேறுபட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மருத்துவர் ஏஸ்.குமரன்.
குடும்ப வைத்திய நிபுணர்,
குடும்ப சுகநல நிலையம்,
கோண்டாவில் மருத்துவ வளாகம்.
கு.கெளசிகா.
விரிவுரையாளர், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை
யாழ்.பல்கலைக்கழகம்.