குருதி அமுக்கம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், நோய் நிலைமைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட தகவல்கள் கேள்வி – பதில் வடிவில் இங்கு தரப்படுகின்றன.
குருதி அமுக்கம் என்றால் என்ன?
உங்கள் உடலிலி; குருதிக் குழாய்களில் குருதி சுற்றியோடும் போது ஏற்படும் அமுக்கமே குருதியமுக்கம் எனப்படும்.
சாதாரணமாக இது எவ்வளவு இருக்கும்?
சுருங்கள் அமுக்கம் – 120mmHg
விரிதல் அமுக்கம் – 80 mmHg
இது இளம் பராயத்தவர்களுக்கு சற்று குறைவாகவும் முதியோருக்கு சற்று அதிகமாகவும் காணப்படும்.
உயர் குருதி அமுக்கம் என்றால் என்ன?
குருதி அமுக்கம் மேற்குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக இருத்தல் உயர்குருதி அமுக்கம் எனப்படும். பொதுவாக சுருக்கல் அமுக்கம் 140 mmHg ஐ விட கூடுதலாகவும் விரிதல் அமுக்கம் 90 mmHg ஐ விட கூடுதலாகவும் இருப்பின் அது உயர் குருதி அமுக்கம் என்ற வகையறாவுக்குள் கொள்ளப்படும்.
யாருக்கு உயர் குருதி அமுக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்?
- வயது அதிகரிக்கும் போது
- உடல் நிறை அதிகமானவர்கள்
- சிகரெட் பாவனையாளர்கள்
- நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற வருத்தம் உள்ளவர்கள்.
- குடும்ப அங்கத்தவரில் பலர் உயர் குருதி அமுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பின்
குருதி அமுக்கம் கட்டுப்பாட்டில் இல்லாவிடில் என்ன பிரச்சினைகள் ஏற்படும்
- இருதய நோய்
- சிறுநீரக செயலிழப்பு
- பாரிசவாதநோய்
- குருதிக்குழாய்கள் பாதிப்படைதல்
குருதி அமுக்க நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
- சரியான உணவுப்பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
- உடல் நிறையை அளவாக பேண வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
- வைத்தியர் தரும் மருந்து வில்லைகளை அவர் கூறிய அறிவுறைக்கேற்ப தவறாது உள்ளெடுக்க வேண்டும்.
- உங்கள் குருதியமுக்கத்தை சரியான கால இடைவெளியில் சோதித்துப் பார்க்க வேண்டும்.
எவ்வகையான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்?
- உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- புகையூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகைத் தவிர்க்க வேண்டும்.
- அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- பழங்களையும் மரக்கறிகளையுமு; அதிகம் உள்ளெடுக்க வேண்டும்.
- மீன் உணவுகள் உடலுக்கு நன்று
வீட்டில் எவ்வாறு குருதி அமுக்கத்தை சோதித்துப் பார்ப்பது?
- குருதியமுக்கத்தை சோதிக்க முன் புகைப்பிடிக்க கூடாது.
- கோப்பி, தேநீர் போன்ற பானங்களை உள்ளெடுக்கக் கூடாது.
- 30 நிமிடங்கள் கதிரையில் இளைப்பாறிய பின்னரே அளவிட தொடங்க வேண்டும்
- சரியான அளவுள்ள Cuff பயன்படுத்த வேண்டும்.
- சோதிக்க முன் கதிரையில் சரியாக அமர வேண்டும். சோதிக்கும் கையை Cuff யை முழங்கைக்கு மேல் கட்ட வேண்டும்.
- கையை ஒரு மேசையில் தளர்வாக வைக்க வேண்டும். கை உங்கள் இதயத்தின் மட்டத்தில் இருக்க வேண்டும்.
- அளக்கும் இயந்திரம் மூலம் குருதி அமுக்கத்தை சரியாக அளந்து குறித்துக்கொள்ளவேண்டும்.
மருத்துவர். க.சுகந்தன்
பொது வைத்திய நிபுணர்