நிரிழிவானது நீடித்து நிலைக்கும் ஒரு நாள்பட்ட நோயாக இருப்பதனால், அந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் நோயை ஏற்றுக் கொண்டு அதற்கான முறைமைகளிலும் பல பரிகாரங்களைத் தேடுவதோடு, தமது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கின்றது.
நீரிழிவு உடையவர்கள் தமது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக்கவனமாகப் பேணுவது மட்டுமல்லாமல், வழமையான தமது உணவுப் பழக்கத்திலும், உடல் தொடர்பான பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். ஒருவகையில் இதனை வாழ்வின் ஒரு பண்பாட்டு மாற்றம் எனவும் அழைக்கலாம்.
வாழ்வை குலைக்கும் வல்லமை உள்ளது
நீரிழிவு ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமையுடையது. ஒருவர் தனது உணவுகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும், உணவு உள்ளெடுக்கும் அளவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரவும் பழக வேண்டியிருக்கும், அவர் தனது உடலை அக்கறையோடு பேணிப் பராமரிக்க வேண்டியிருக்கும். பாதங்களை முகத்துக்குச் சமானமாகப் பாதுகாக்கவும், நகங்களை அக்கறையோடு அவதானித்து அளகுப்டுத்தவும் வேண்டியிருக்கும். மருந்துகள் பற்றி அறிந்து அவற்றைச் சரியான அளவுகளிலும், நேரங்களிலும் உள்ளெடுக்க வேண்டியிருக்கும்.
ஊசி மருந்துகள் பாவிப்பவராக இருந்தால் அவர் அது தொடர்பான பாதுகாப்புப் பொறிமுறைகளையும் அறிந்து இருக்க வேண்டும். குருதியில் குளுக்கோசு கூடவும் விடாமல், குறையவும் விடாமல் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். தனது குருதியையும், சிறுநீரையும் தானே பரிசோதிக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீரழிவானது ஒருவருடைய வாழ்க்கையை மாற்றியமைக்கின்றது. நீரிழிவு வருவதற்கு முன்பு தாம் வாழ்ந்த வாழ்க்கை முறைமைகளை மாற்றிக் கொண்டு, இப்போது நீரிழிவுடன் இணைந்த தான வாழ்வை வாழ்வது என்பது உண்மையில் சவால்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது. பலர் இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டு இசைவாக்கம் அடைந்து, நீழிவுக்கான வாழ்வை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்கிறார்கள். எனினும், சிலர் இந்தச் சவால்களை எதிர் கொள்ள முடியாது, புதியவாழ்க்கை முறைமைக்கு இசைவாக்கம் அடைய முடியாது துன்பப்படுகிறார்கள். இவ்வாறானவர்கள் பதகளிப்பு, இசைவாக்ககோளாறு, மனச் சோர்வு, உணர்ச்சிக் கோளாறுகள் போன்ற உளநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.
எமது வாழ்வு மாற்றங்களை வேண்டி நிற்கும் வேளைகளில் அந்த மாற்றங்களுக்கான தேவைகள் பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது முக்கியமாகின்றது. இந்த அறிதலே மாற்றங்களை ஊக்குவிக்கும் முதன்மைக் காரணியாக அமைகின்றது. மாற்றங்கள் தேவை என நாம் உணரத்தலைப்படும் வேளைகளில், அந்த மாற்றங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதற்கான திட்டமிடுதல் அவசியமாகின்றது. திட்டமிடுதல் சீராக நடைபெறுகின்ற பொழுது அந்தத் திட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பது என்பது இலகுவாகின்றது. திட்டங்களைச் செயற்படுத்தும் பொழுது அவை எப்பொழுதும் வெற்றியளிக்க வேண்டும் என்றில்லை. வெற்றிகளை அடையமுடியாத போது, நின்று நிதானித்து, அவ்வாறு அடைய முடியாததற்கான காரணங்களை ஆராய்ந்து மாற்று வழிகளை யோசித்து, மீண்டும் முயற்சி செய்தல் அவசியமாகின்றது.
மாற்றங்களை ஏற்றல்
நீரிழிவு உடைய ஒருவர் தனது வாழ்வின் நடைமுறைகளை மாற்றியமைக்கும் போது, அந்த மாற்றங்களைத் தட்டிக் கொடுத்து அவரது நடத்தைகளை ஊக்குவித்தல் அவசியமாகின்றது.
இவ்வாறு நிகழும்பொழுதே, அவரில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நிலையான மாற்றங்களாகப் பரிணமிக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஒருவர் தனது பழக்கவழக்கங்களை மாற்ற முனைகையில் அவரைச் சீண்டி வேடிக்கை பார்ப்பது தவறானது. உண்மையில், தமது வாழ்க்கை முறைமைகளில் மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் நீரிழிவு உடையவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளலாம்.
நீரிழிவுடன் வாழ்வது என்பது சிலவேளைகளில் பல உளசமூகப் பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம். நோய்பராமரிப்பிற்கான நேரம், அதற்கான செலவு, நோயுடன் தொடர்புடைய மருத்துவச் சிக்கல்கள், அடிக்கடி மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், வைத்திய சாலை அனுமதிகள், மருந்துகளுடனான வாழ்வு போன்ற பல காரணிகள் ஒருவர் தனது வாழ்வை அதிகம் அலட்டிக்கொள்ளாது, இலகுவாகக் கொண்டு செல்வதனைப்பாதித்துவிடலாம். எனவே, நீரிழிவு வந்தவர்கள், மிக அதிகளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாகக் கூடிய வாய்ப்புகள் (இடர்தகவுகள்) இருக்கின்றன.
மறுபுறத்தில் ஏற்கனவே உளநோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமது ஆர்வமின்மை , ஊக்கக் குறைபாடு, உடற்பயிற்சி இன்மை , மருந்துகளின் பக்க விளைவுகள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தொடர்பான அலட்சியப் போக்கு போன்ற பல காரணங்களினால் நீரிழிவு நோய் உருவாவதற்குரிய ஏது நிலைகளை அதிகளவில் கொண்டிருக்கிறார்கள் இவற்றோடு. நீரிழிவு உடையர்கள் புகைப்பழக்கத்தினைக் கடை பிடிக்கின்ற பொழுதும், மதுபாவனையைத் தொடர்கின்ற பொழுதும் அவை நோயின் தாக்கங்களை அதிகரித்து விடுகின்றன.
உளநலம் பேணல்
நீரிழிவு நோயாளிகளில் உளநலப்பிரச்சினைகள் அதிகளவில் ஏற்படலாம் என்பதனை ஏற்றுக்கொள்ளுதல் முக்கியமானது. எனவே, அவை அவ்வாறு அதிகளவில் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதனைச் சிந்தித்தல் முக்கியமானது. குறிப்பிட்ட இடைவெளிகளில் குருதிப் பரிசோதனைகளைச் செய்வதனூடாக நீரிழிவை நேரகாலத்துக்கே அடையாளங்காணுவது நல்லது. நீரிழிவு ஏற்பட்டுவிட்டது என்பதனை அறிந்தவுடனேயே துறைசார். மருத்துவ ஆலோசனைகளைப்பெறுவது அவசியமானது.
நீரிழிவு பற்றி ஓரளவு பூரணமாக அறிந்து கொள்வதும், அது தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதும், மரபுவழி நம்பிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்வதும் முக்கியமானது. மருத்துவ ஆலோசனையில் சொல்லப்படுகின்ற விடயங்களைக் கவனமாகப் பின்பற்றுவதும் மிகுந்த பயன்மிக்கது.
நாம் நெருக்கீடாக உணர்ந்து கொள்ளும் வேளைகளில் எல்லாம் எமது உடல் தொழிற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் எமது ஆரோக்கியத்தைப் பாதித்து விடுவதாகவே அமைந்து விடுகின்றன. நீரிழிவும் இதற்கு விதிவிலக்கல்ல. நெருக்கீடான உணர்வுகள் நீரிழிவின் கட்டுப்பாட்டையும் எதிர்மறையாகப் பாதித்துவிடுகின்றன. எனவே, நீரிழிவு வந்தவர்கள் இயலுமானவரைக்கும் நெருக்கீடுகளுக்குள் ஆளாகாமல், அல்லது நெருக்கீட்டு நிலைமைகளை சமாளித்துக் கொண்டு செல்ல வேண்டி யது அவசியமாகிறது.
யோகா தொடர்பான பயிற்சிகளும், தியானமும், பாட்டோடிசைந்ததளர்வுப் பயிற்சிகளும், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு வாழ்வில் முன்செல்லும் திறன்களும். கோபத்தைக் கையாளும் வழிமுறைகளும் ஒருவர் இயல்பாகவே தளர்வாக இருப்பதனை உறுதி செய்வதுடன், நெருக்கிட்டு நிலைமைகள் ஏற்படுகின்ற பொழுது, அதனை அதிக நெருக்கீடாக உணராமல், அதனைச் சமாளிக்கும் தன்னியல்பையும் வளர்த்துவிடுகின்றன.
சா.சிவயோகன்
உளமருத்துவ நிபுணர்