புகைத்தல் நாகரீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனாலும் அந்த நிலமைகள் தற்போது மாற்றம் கண்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கின்ற காலம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது புகைப் பிடிப்போரை மட்டுமே பாதிப்பதில்லை, அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதித்து நோயாளி ஆக்கிவிடும் தன்மையை கொண்டுள்ளது. இத்தகு காரண காரியம் கொண்டே பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டவிதி நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
புகைப்பிடிப்பதால் ‘பாரிசவாதம், மாரடைப்பு, புற்றுநோய், சுவாசம் சம்பந்தமான நோய்கள், குருதிக் குழாய் சம்பந்தமான நோய்கள்’ எனப் பல பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன. இதனை நாம் அனைவரும் அறிந்துகொண்டுள்ள போதும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை துடைத்தெறியும் மார்க்கம் தெரியாது துன்பப்படுகிறோம்.
கஞ்சாச் செடி வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொண்டுள்ளோம். ஆனால் பல இலட்சம் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் புகையிலைச் செடியை வளர்ப்பது தண்ட னைக்குரிய குற்றமாக வெளிப்படுத்தப்படவில்லை. உண்மையில் நாம் பயிரிடுகின்ற ஒவ்வொரு புகையிலைச் செடியும் யாரோ ஒரு முகம் தெரியாது மனிதனை நோயாளியாக்கும் என்பதை உணர மறுக்கிறோம். இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அழிவில் இருந்து மீண்டுவர எம்மை நாமாக வழிப்படுத்த முன்வர வேண்டும். புகையிலை பயிரிடும் விளைநிலத்தில் மரக்கறிப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் உணவுத் தேவையில் தன்னிறைவு பெற முயற்சிக்கலாம்.
புகைத்தல் தனி மனித உரிமை எனில், ஒருவரை புகைக்க வேண்டாம் என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் புகைப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம். அது மட்டுமே எம்மால் முடிந்த ஆரம்ப நிலை அறிவுரையாக இருக்க முடியும். புகைக்க விரும்பினால் சன நடமாட்டமற்ற நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்து அங்கு சென்று புகைத்துக்கொள்ளுங்கள். இதனூடே குடும்பத்தையும் பிள்ளைகளையும் சுற்றத்தவர்களையும் நீங்கள் வெளிவிடுகின்ற புகையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஏற்படப்போகின்ற பாதிப்புகளை உங்களோடு மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளலாம்.
புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று வரும் போது அந்தப் பழக்கத்தினால் உடலில் ஏற்பட்டதாக்கங்களின் பெரும்பகுதியில் இருந்து மீண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிட்டும். புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவரும் இப்பழக் கத்திலிருந்து முழு மனதோடு விடுபட்டு அதை நடை முறைப்படுத்த முயற்சிக்கும் போது சில வேண்டத்தகாத அறிகுறிகள் தோன்றின் மருத்துவ உதவியை பெற்றுக் கொள்ளவும். புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒவ்வொரு வரையும் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இந்தப் படுகுழியிலிருந்து காப்பாற்றிவிடுவதற்கு எம்மாலான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவோம்.
தன் உடலை அழித்து தான் சார்ந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை சிதைத்து, தனைச் சூழ்ந்துள்ளவர்களின் சுகாதாரத்தை சீர்குலைக்கும் செயற்போக்குடைய புகைப் பிடிப்போரே சுய சிந்தனையோடு செயற்படுங்கள். உடல் ஆரோக் கியம் பெற்று வாழ முன்வாருங்கள்.
“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.”
சி.சிவன்சுதன்
பொது மருத்துவ நிபுணர்,
போதனா மருத்துவமனை,
யாழ்ப்பாணம்.